கூட்டத்தில் மும்முரமாக பேசிய அமைச்சர்… இன்ஸ்டாவில் மூழ்கிய வட்டார போக்குவரத்து அலுவலர் ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
3 January 2024, 2:35 pm
Quick Share

திருவண்ணாமலை நகரத்தில் போக்குவரத்து முறைப்படுத்துதல் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் பேச்சை கேட்காமல் அலைப்பேசியில் சமூக வலைதளங்களில் மூழ்கிய வட்டார போக்குவரத்து அலுவலரின் வீடியோ வைரலாகி வருகிறது.

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலாகும். அண்ணாமலையார் கோவிலுக்கு அனுதினமும் வெளிமாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், மாதா மாதம் நடைபெறும் பௌர்ணமி கிரிவலம் உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது அனுதினமும் ஆயிரக்கணக்கான ஐய்யப்ப பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, திருவண்ணாமலை நகரில் வெளிமாநில பக்தர்கள் வருகையால் திருவண்ணாமலை நகர மக்கள் போக்குவரத்து நெரிசலில் பாதிக்கப்பட்டு வருவதாக பல தரப்பினர் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறையினர் போக்குவரத்தை முறைப்படுத்தாமல் இருப்பதாக பொதுப்பணித்துறை அமைச்சரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு பொதுமக்கள் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த புகாரின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், பல்வேறு கட்சி பிரமுகர்கள், தனியார் தொண்டு நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட‌ நபர்கள் திருவண்ணாமலை நகரில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசல் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் தெரிவித்தனர்.

பொதுமக்களின் கருத்தை கேட்ட அமைச்சர் இது குறித்து விளக்கி பேசினார். அப்போது இந்த ஆய்வு கூட்டத்தில் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலர் சிவக்குமார் கலந்து கொண்டார். குறிப்பாக பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் தெரிவித்த கருத்திற்கு தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு போக்குவரத்தை எவ்வாறு முறைபடுத்த வேண்டும் என விளக்கமளித்து பேசினார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலர் சிவக்குமார் அமைச்சர் பேசுவதை காதில் வாங்காமல் தனது தொலைபேசியில் சமூக வலைதளங்களில் மூழ்கி இருந்தார். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலராக பணியில் இருக்கும் அதிகாரி போக்குவரத்து குறித்து அமைச்சர் பேசுவதை காதில் வாங்காமல் தனது தொலைபேசியில் சமூக வலைதளங்களில் மூழ்கி இருக்கலாமா எனவும், இவர்களை போன்ற அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் தான் சாமானிய மக்கள் அனுதினமும் அல்லல்படும் நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

மேலும் திருவண்ணாமலை நகரில் அமைச்சர் தலைமையில் போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தியும் இதுவரை அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் மத்தியில் பெரும் குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 1343

0

0