வானதி சீனிவாசன் குறித்து பேஸ்புக்கில் அவதூறு : போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

11 June 2021, 1:38 pm
Quick Share

கோவை: கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குறித்து பேஸ்புக்கில் அவதூறு பரப்புவதாக பாஜகவினர் இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

பாஜக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் மோகனாம்பாள் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- கோவையை சேர்ந்த கோவை ரவிசங்கர் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் குறித்து தகாத வார்த்தைகளை பயன்படுத்தி அவதூறு கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

இதனை காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ள ஜெகநாதன் என்பவர் பலருக்கு பகிர்ந்துள்ளார். இதேபோல் கோவையை சேர்ந்த கீதா என்பவர் கீதா டிவி என்ற சொந்த யூடியூப் சேனலில் வானதி சீனிவாசன் குறித்து மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார். இதேபோல் பாஜக குறித்தும், பாஜக நிர்வாகிகள் குறித்தும் ஒழுக்கக்கேடான விமர்சனங்களை செய்து வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 92

0

0