போராட்டத்தில் குதித்த சிறு, குறு, நடுத்தர தென்னிந்திய நூற்பாலைகள்… வரும் 15ம் தேதி முதல் உற்பத்தி மற்றும விற்பனை நிறுத்தம்..!!

Author: Babu Lakshmanan
13 July 2023, 8:30 pm
Quick Share

வருகிற 15 ஆம் தேதி முதல் சிறு, குறு, நடுத்தர தென்னிந்திய நூற்பாலைகள் முழு உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

சிறு, குறு, நடுத்தர தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் செய்தியாளர்கள் சந்திப்பு கோவை அவினாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபையின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, சிறு, குறு, நடுத்தர நூற்பாலை உரிமையாளர்கள் பேசியதாவது :- பஞ்சு விலை கண்டி ஒன்றுக்கு அதாவது 356 கிலோ கொண்டது ரூபாய் 58 ஆயிரமாக உள்ளது. 40 ஆம் நம்பர் நூல் விலை ஒரு கிலோவிற்கு ரூபாய் 235 ஆக உள்ளது. சுத்தமான பருத்தி ஒரு கிலோவிற்கு ரூபாய் 194 ஆக உள்ளது.

தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகத்தின் வழிகாட்டுதலின்படி குறைந்தபட்சம் பஞ்சிலிருந்து நூல் மாற்றத்திற்கான விலை ஒரு கிலோவிற்கு ரூபாய் 2 ஆக இருக்க வேண்டும் என்ற நிலையில், தற்போது பஞ்சிலிருந்து நூல் மாற்றத்திற்கான விலை ரூபாய் 1 மட்டும் தான் கிடைக்கிறது. இதனால் கிலோவிற்கு ரூபாய் 40 வரை நஷ்டம் ஏற்படுவதுடன், சுமார் 10 ஆயிரம் கதிர்கள் கொண்ட ஆலை ஒன்றில் 2 ஆயிரத்து 500 கிலோ நூல் தயாரிக்கப்படுவதால் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது.

நூற்பாலைகள் பெரும் நஷ்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால், வங்கி கடன் திருப்பி செலுத்துதல், பஞ்சு கொள்முதல் பணம் செலுத்துதல், மின்சார கட்டணம், ஜி.எஸ்.டி., போன்ற செலவீனங்களை செலுத்த முடியாமல், ஆலைகள் தத்தளித்து வருகின்றன இந்த நிலை நீடித்தால் நூற்பாலைகள் விரைவில் வாராக்கடன் ஆவதோடு, ஆலைகள் நிரந்தரமாக மூடும் அபாய நிலைக்கு தள்ளப்படும். 3 மாதம் நிலை தொடர்ந்தால் இந்தியாவில் நூற்பாலைகளே இருக்காது.

தமிழகம் மட்டுமின்றி தெலுங்கானா போன்ற தென் மாநிலங்கள் இதே நிலையே தொடர்வதால் அவர்களும் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபடப்போகிறோம். தமிழகத்தில் நூற்பாலைகள் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக நூல் மற்றும் துணி வகைகளின் ஏற்றுமதி சுமார் 28 அளவு குறைந்துள்ளது. தமிழகத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிகளவில் மானியம் முழுவதும் 600 நூற்பாலைகள் உள்ளது. உற்பத்தி நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு 35 லட்ச கிலோ நூல் உற்பத்தி, ரூபாய் 85 கோடி வருவாய், நேரடியாக 2 லட்சம் தொழிலாளர்கள் உட்பட 12 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு ஏற்படும்.

தமிழக அரசுக்கு நாள் ஒன்றுக்கு 11 கோடி ரூபாய் மின்சாரம் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், நாள் ஒன்றுக்கு 4.5 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., வருவாய் இழப்பும் ஏற்படும். நூற்பாலைகள் உட்பட ஜவுளி சங்கிலியின் அனைத்து நிலைகளிலும் திறன் மிக அதிகமாக உள்ளதால், ஒரே நாடு ஒரே கொள்கையை ஜவுளித்துறையில் மத்திய அரசு உருவாக்கி, நூற்புத்திறனை அதிகரிக்க மானியமோ, சலுகையோ வழங்காமல், ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதுடன், இதனால், மாநிலங்களுக்கு இடையே போட்டியை உருவாக்காமல், நாட்டிற்கு இடையேயான போட்டியை உருவாக்க வேண்டும்.

ஜவுளித்துறையின் மூலப்பொருளான பருத்தி விளைச்சலை நாட்டில் அதிகரிக்க வேண்டும். ஏற்றுமதியில் கவனம் செலுத்தாவிடில் நூற்பாலைகளே இந்தியாவில் இல்லை என்ற நிலை உருவாகும் என்ற அபாயத்தையும் தெரிவித்தனர்.மின்சார நிலை கட்டணம் மற்றும் பீக் ஹவர்ஸ் சார்ஜ் குறைக்க வேண்டும். மின் கட்டண உயர்வால் மற்ற மாநிலங்களுடன் போட்டியிட முடியாத நிலை உள்ளதால், ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்தாமல், குறிப்பிட்ட ஆண்டுகளில் உயர்த்த வேண்டும் என்று மாநில அரசுக்கான கோரிக்கை விடுத்த நூற்பாலைகள், பருத்தி விளைச்சலை தமிழகத்தில் அதிகரிக்க வேண்டும். தொழிலாளர்கள் நலன் கொள்கை கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் பருத்தி கழகம் துவங்கப்பட்டு, நியாயமான விலையில் பருத்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Views: - 346

0

0