பாலியல் தொல்லையால் தற்கொலை செய்த மாணவி விவகாரம் : கைது செய்யப்பட்ட ஆசிரியைக்கு நிபந்தனை ஜாமீன்!

Author: Udayachandran RadhaKrishnan
15 June 2023, 4:46 pm
Cbe - Updatenews360
Quick Share

கோவையில் பாலியல் துன்புறுத்தலால் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைதான ஆசிரியர் அரசிச்சனாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை ஆர். எஸ். புரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த மாணவி ஒருவர் 2021ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்த மிதுன் சக்கரவர்த்தி என்பவர் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்தக் கடிதத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தவிர தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் மாணவியின் வீட்டின் அருகில் வசித்து வந்த மனோஜ் ராஜ் மற்றும் முகமது சுல்தான் ஆகியோரையும் கைது செய்யதனர். நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வந்தது.

விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அரசு தரப்பில் மேலும் சிலரை கைது செய்யப்பட வேண்டி இருப்பதாக கூறி கடந்த மாதம் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.

நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்த நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் , ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் மனைவியும், அதெப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த அர்ச்சனாவை கைது செய்தனர்.

தற்கொலை செய்து கொண்ட மாணவியின் செல்போன், காவல் துறையினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதில் டெலிட்டாகி இருந்த ஆடியோ அனைத்தும் தொழில்நுட்ப குழுவினரால் மீட்கப்பட்டது.

அதில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவி , ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் நடவடிக்கை குறித்து அவரது மனைவியான ஆசிரியர் அர்ச்சனாவிடம் தெரிவித்திருப்பதும், வாட்ஸ் அப் சாட்டிங்கில் பரிமாறிக்கொண்ட தகவல்களும் தொழில் நுட்ப குழுவினரால் மீட்கப்பட்டது.

பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டது தெரிந்தும் காவல் துறையிடம் தெரிவிக்காததால் அர்ச்சனாவையும் போக்சோ சட்டத்தில் கைது செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கைதான ஆசிரியர் அர்ச்சனாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது. 15 நாட்களுக்கு ஒருமுறை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கியுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை இந்த நிபந்தனையை பின்பற்றவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதான அனைவரும் தற்போது ஜாமினில் வெளியே உள்ளனர்.

Views: - 393

0

0