ஆடு திருட்டை தடுக்க முயன்ற உதவி ஆய்வாளர் கொலை செய்த விவகாரம் : 19 வயது இளைஞருக்கு நீதிபதி விதித்த பரபரப்பு தண்டனை!!

Author: Udayachandran RadhaKrishnan
29 September 2023, 8:27 pm
Judgement - Udpatenews360
Quick Share

ஆடு திருட்டை தடுக்க முயன்ற உதவி ஆய்வாளர் கொலை செய்த விவகாரம் : 19 வயது இளைஞருக்கு நீதிபதி விதித்த பரபரப்பு தண்டனை!!

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அடுத்த பள்ளத்துப்பட்டியில் கடந்த 2021ம் ஆண்டு, நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், ஆடு திருடர்களால் கொலை செய்யப்பட்ட பரபரப்பான வழக்கில் குற்றவாளி மணிகண்டனுக்கு ஆயுதண்டனை, 25 ஆயிரம் அபராதம்…

திருச்சி மாவட்டம், திருவரம்பூருக்குட்பட்ட நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் (வயது 50) கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி இரவு ரோந்துப் பணியில் ஈடுட்டிருந்தார்.

அப்போது பூலாங்குடி காலனி என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அடையாளம் தெரியாத 3 பேர் ஆடுகளை இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு வந்தபோது, சந்தேகத்தின்பேரில் அவர்களை தடுக்க முயன்றுள்ளார்.

அப்போது அவர்கள் நிற்காமல் சென்றதால் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனும் தமது இரு சக்கர வாகனத்தில் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளார்.

அப்போது புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அடுத்த பள்ளத்துப்பட்டி மணிவிஜய் நகர் ரயில்வே பாலம் அருகே மூவரும் இருந்த வாகனத்தை இடைமறித்து விசாரித்துள்ளார்.

அப்போது அவர்களில் 19 வயது மணிகண்டன், தன்னுடன் இருந்த இரு சிறார்களுடன் சேர்ந்து இரு சக்கர வாகனத்தில் தான் வைத்திருந்த அரிவாளால் பூமிநாதனை வெட்டிவிட்டு தப்பியுள்ளார்.

இதற்கிடையே ஆடு திருடிய சம்பவம் குறித்து மற்றொரு தலைமை காவலர் சித்திரவேல், சம்பவம் நடந்த இடத்துக்கு வந்தபோது பூமிநாதன் அரிவாள் வெட்டு காயங்களுடன் கொல்லப்பட்டதை பார்த்து, அதிர்ந்து போனார். தலைமை காவலர் சித்திரைவேல் அளித்த புகாரின்பேரில் கீரனூர் காவல்நிலையத்தில் பூமிநாதன் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை செய்த நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களின் தேடுதல் நடவடிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் பகுதியைச் சேர்ந்த 19 வயதான மணிகண்டன் மற்றும் இரண்டு சிறார்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மூவரும் நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்டு, சிறை அடைக்கப்பட்டனர்.

பிடிபட்ட மூன்று நபரில் ஒருவர் 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுவர் என்பதும் மற்றொருவர் 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் என்பதும் தெரியவந்துள்ளது. மற்றொருவர் மணிகண்டன் (19) என்பதும் அவர் மீது காவல் நிலையத்தில் மற்றொரு வழக்கு இருப்பதும் தெரிய வந்தது.

பிடிபட்டவர்களிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்திய அரிவாள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. புதுக்கோட்டையில் உள்ள சிறுவர்களுக்கான நீதிமன்றம் இளைஞர் நீதி குழுமத்தில் விசாரணையில் உள்ளது.

மணிகண்டன் மீதான வழக்கு விசாரணையானது புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பல்வேறு கட்ட விசாரணைக்கு பின் இன்று புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அந்த தீர்ப்பில் குற்றவாளி மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும், அபராதமாக ரூ.25 ஆயிரம் ரூபாயும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்…

Views: - 322

0

0