எங்களுடன் கூட்டணி போடும் கட்சிகள் தாமரை சின்னத்தில்தான் போட்டியிடணும் : பாஜகவின் கே.பி. ராமலிங்கம் கண்டிஷன்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 February 2024, 8:59 pm
KP Ramalingam
Quick Share

எங்களுடன் கூட்டணி போடும் கட்சிகள் தாமரை சின்னத்தில்தான் போட்டியிடணும் : தமிழக பாஜக கண்டிஷன்!!

தர்மபுரி சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. அலுவலகம் திறப்பு விழா மற்றும் கட்சியின் கொடியேற்று விழா தர்மபுரி சந்தைப்பேட்டையில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட பொதுச் செயலாளரும், தர்மபுரி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான ஐஸ்வர்யம் முருகன் தலைமை தாங்கினார்.

மாநில செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பார்வையாளர் முனிராஜ், தர்மபுரி மாவட்ட தலைவர் பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கட்சியின் மாநில துணைத்தலைவரும், பெருங்கோட்ட பொறுப்பாளருமான கே.பி. ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் அவர் தர்மபுரி சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. அலுவலகத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.விழாவில் மாவட்டத் துணைத் தலைவர்கள் சோபன், சிவசக்தி, மாவட்ட செயலாளர் கிருஷ்ணவேணி, இளைஞரணி மாநில துணைத்தலைவர் புவனேஷ், மண்டலத் தலைவர்கள் ஜிம் சக்தி, மாதன், சக்தி, பழனிசாமி, கணபதி மற்றும் கட்சியின் அனைத்து பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- தமிழகத்தில் மக்களுடன் இணைந்து பா.ஜ.க. தேர்தலை எதிர்கொள்கிறது. வடசென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான 39 மக்களவைத் தொகுதிகளிலும் தாமரைச் சின்னத்தில் களம் காண விரும்புகிறோம்.

இந்தியாவின் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி வர வேண்டும் என்கிற எங்களது எண்ணங்களை ஏற்றுக் கொண்டு தமிழகத்தில் எங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சியினரும் தாமரைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என விரும்புகிறோம். இதை சில கட்சிகள் ஏற்றுக் கொண்டுள்ளன.

இதேபோல, பிரமதர் மோடியை ஏற்பவர்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கலாம். கடந்த 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் தவறுகளிலிருந்து இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடி சீர்திருத்தினார்.

இதையடுத்து 2019 முதல் 2024}ஆம் ஆண்டு வரையிலான ஆட்சி கலத்தில் வளர்ச்சி அடைந்து நாடுகளுடன் இந்தியா பொருளாதாரத்தில் போட்டியிடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் இந்தியா வேகமாக வளரும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, வருகிற மக்களவைத் தேர்தலில் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வர வேண்டும் என தமிழக மக்கள் கருதுகின்றனர். இதையொட்டி மீண்டும் மோடியை பிரதமர் பதவியில் அமர்த்தும் வகையில் எங்களது தேர்தல் பணி அமையும். தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகிறது.

இதேபோல, வருகிற பிப்.27 மற்றும் 28 ஆகிய 2 நாள்கள் தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரமதர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த கூட்டங்களிலும் பா.ஜ.க.வுடன் இணைந்து போட்டியிடும் கட்சியினரை காணலாம்.
இவ்வாறு கே.பி. ராமலிங்கம் கூறினார்.

Views: - 187

0

0