வெட்டிக் கொலை செய்யப்பட்ட விஏஓ கனவை நினைவாக்கிய மகன் : நீதிபதி தேர்வில் வெற்றி… அண்ணாமலை வாழ்த்து!!

Author: Udayachandran RadhaKrishnan
18 February 2024, 1:14 pm
Vao son
Quick Share

வெட்டிக் கொலை செய்யப்பட்ட விஏஓ கனவை நினைவாக்கிய மகன் : நீதிபதி தேர்வில் வெற்றி… அண்ணாமலை வாழ்த்து!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் லூர்து பிரான்சிஸ். இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி அலுவலகத்தில் இருந்தபோது 2 பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

மணல் கொள்ளையை தடுத்த விவகாரத்தில் கும்பல் அவரை வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது.

விஏஓ லூர்து பிரான்சிசை வெட்டி கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளான தூத்துக்குடி மாவட்டம் கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு (41) மற்றும் மாரிமுத்து (31) ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. அதோடு இருவருக்கும் தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், மறைந்த வி ஏ ஓ லூர்து மகன் மார்ஷல் ஏசுவடியான் தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் விதமாக சிவில் நீதிமன்ற நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக தலைவர் அண்ணாமலையும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:- தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையர்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்ததற்காக தனது அலுவலகத்திலேயே வைத்து படுகொலை செய்யப்பட்ட, தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் அமரர் லூர்து பிரான்சிஸ் சேவியர் அவர்கள் மகன், சகோதரர் மார்ஷல் ஏசுவடியான் அவர்கள், சிவில் நீதிமன்ற நீதிபதியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

சகோதரர் மார்ஷல் ஏசுவடியான் அவர்கள், தனது தந்தை கொலை செய்யப்பட்ட கடினமான நேரத்திலும், அவரது கனவுகளை நனவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடினமாக உழைத்து, தனது பெரும் முயற்சியால் தேர்வில் வெற்றி பெற்று சிவில் நீதிமன்ற நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது, தந்தை மீது அவர் கொண்டுள்ள அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துவதாகவும், இளைஞர்கள் அனைவருக்கும் மாபெரும் உத்வேகமாகவும், அமைந்திருக்கிறது. சகோதரர் மார்ஷல் ஏசுவடியான் அவர்கள் பணிகள் சிறக்கவும், நீதித்துறையில் அவர் மென்மேலும் பல உயரங்களை எட்டவும், பாஜக சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Views: - 358

0

0