மீன்பிடிப்பதில் தகராறு ; குமரி மீனவர்களை சிறைபிடித்த தூத்துக்குடி மீனவர்கள்… 6 படகுகளையும் சிறைபிடித்ததால் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
20 March 2024, 5:35 pm
Quick Share

கேரளா மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஆகிய மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 6 விசைப்படகுகளை தூத்துக்குடி மீன்பிடித்துறைமுக விசைப்படகு மீனவர்கள் சிறைபிடித்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கேரளாவைச் சேர்ந்த விசைப்படகுகள் இரவு நேரங்களில் இழுவை வலை தொழில் ஈடுபட்டு வருவதினாலும், மீன்பிடி தடைக்காலத்திலும் மீன் பிடிப்பதாலும், தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், நேற்று (19.03.2024) இரவு 10.00 மணிக்கு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 11 விசைப்படகுகளில் மீனவர்கள் சென்று, துறைமுகத்திலிருந்து சுமார் 26 கடல் மைல் தொலைவில் மீன்பிடித் தொழில் செய்து கொண்டிருந்த
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 1 விசைப்படகையும் (13 மீனவர்கள்) , மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தைச் சேர்ந்த 5 விசைப்படகுகள் (73 மீனவர்கள்) மொத்தம் 6 விசைப்படகுகள் 86 மீனவர்களை சிறைபிடித்து இன்று அதிகாலை சுமார் 05 மணிக்கு தூத்துக்குடி மீன்பிடி துறைமுக இறகு தளத்தில் நிறுத்தி வைத்துள்ளார்கள்.

இதில் கடலில் சிறை பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெனெட்டிக் ( 54) காயம் ஏற்பட்டு மீன்பிடித் துறைமுக மருத்துவமனையில் முதலுதவி செய்து நல்ல நிலையில் இருந்து வருகிறார்கள்.

மேற்படி சிறைபிடிக்கப்பட்ட 6 படகுகளையும், மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்து விட்டு, அதில் உள்ள 86 மீனவர்களையும் துறைமுக விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தில் வைத்துள்ளார்கள்.இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 412

0

0