‘வீட்டுக்கு வந்து முகத்தை பெயர்த்திடுவேன்’.. சாதி சொல்லி மிரட்டிய ஆயுள் தண்டனை கைதி : அட்டை கம்பெனி தொழிலாளி தற்கொலை..!

Author: Babu Lakshmanan
4 October 2023, 9:48 pm
Quick Share

5000 ரூபாய்க்கு 8 ஆண்டுகளாக வட்டி கட்டி வந்த அவலம் – கோவில்பட்டி அருகே பரிதாபம் !!!!

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கரடிகுளம் சின்னகாலனியைச் சேர்ந்த மாடசாமி மகன் கதிரவன் (34). இவர் அப்பகுதியில் உள்ள அட்டை கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். கதிரவனுக்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 1ந்தேதி திடீரென கதிரவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் கிடைத்தும் கழுகுமலை போலீசார் கதிரவன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியது மட்டுமின்றி, அதற்கு ஆதரமாக ஆடியோவும் கிடைத்துள்ளது.

தற்கொலை செய்து கொண்ட கதிரவன், கழுகுமலை ஆறுமுகம் நகரைச் சேர்ந்த நடராஜன் மனைவி மாணிக்கம் என்பவரிடம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். அதற்கு வாரம் தோறும் 500 ரூபாய் வட்டி கொடுத்து வந்தாக கூறப்படுகிறது. ஆனால், இடையில் சரிவர கொடுக்க முடியவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கதிரவன், அவரது மனைவி பேச்சியம்மாள் இருவரும் மாணிக்கத்திடம் ரூ.7 ஆயிரம் கொடுத்துவிட்டு கணக்கை சரி செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 30ந்தேதி கதிரவன் பைக்கில் வேலைக்கு கிளம்பி சென்ற போது, மாணிக்கத்தின் கணவர் நடராஜன், வழிமறித்து கடன் தொகை குறித்து கேட்டுள்ளார். 7 ஆயிர ரூபாய் கொடுத்து கணக்கினை முடித்து விட்டதாக கதிரவன் கூறியுள்ளார். வேலைக்கு போக வேண்டிய அவசரத்தில் பைக்கில் இருந்து கீழே இறங்காமல் கதிரவன் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடராஜன், மரியாதை இல்லமால் எப்படி பைக்கி அமர்ந்து நீ பேசலாம் என்று அதட்டியுள்ளார். வேலைக்கு போகும் அவசரம் என்று கதிரவன் கூறிய பிறகும், எப்படி இறங்காமல் பேசலாம் என்று நடராஜன் வாக்குவாதம் செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கோபமடைந்த நடராஜன் உன் வீட்டிற்கு வந்தே மூக்கை பெயர்த்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். மேலும், எனது வீட்டிற்கு வந்து வாங்கிய கடன் குறித்து கணக்கு வழக்கினை பார்த்து முடிக்க வேண்டும். இல்லையென்றால், நீ வேலை பார்க்க முடியாது, வேலையை நிறுத்தி விடுவேன், மரியாதையாக வீட்டிற்கு வரவேண்டும், என்று கூறியுள்ளார்.

தனக்கு வேலை முடிய தாமதமாகும் என்று கதிரவன் கூறிய போதும், எப்போது வேலை முடிந்தாலும் தனது வீட்டிற்கு வர வேண்டும், மரியாதையாக வர வேண்டும், இல்லையென்றால் கைநீட்ட வேண்டிய நிலை உருவாகும், கண்டிப்பாக அடிப்பேன் என்று நடராஜன் மிரட்டியுள்ளார்.

மேலும், 16 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று கேட்டதாகவும், சாதியை சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது. நடராஜன் மிரட்டியது தனது நண்பர்களிடம் கதிரவன் கூறியது மட்டுமின்றி, நடராஜன் பேசிய ஆடியோவினை காட்டியுள்ளார். தன்னால் தனது குடும்பமும் பாதிக்கப்படும் நிலை இருப்பதாக புலம்பியுள்ளார். கடும் மன உளைச்சலில் இருந்த கதிரவன் வீட்டில் போய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

கதிரவனை, நடராஜன் மிரட்டியதாக கூறப்படும் ஆடியோவினையும் போலீசார் கைப்பற்றியது மட்டுமின்றி, தீண்டாமை வன்கொடுமை எஸ்.சி.எஸ்.டி பிரிவு மற்றும் தற்கொலைக்கு துண்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடராஜனையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நடராஜன் தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் பகுதியில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு நடராஜனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

இதையெடுத்து கடந்த 2009ம் ஆண்டு முதல் பாளையங்கோட்டை சிறையில் இருந்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 17-ம் தேதி பரோலில் வெளியே வந்துள்ளார். இவர் அக்.15-ம் தேதி மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் தான் கதிரவன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கழுகுமலை பகுதியில் கந்து வட்டி கொடுமையினால் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் உயிரிழந்த கதிரவன் குடும்பத்திற்கு உரிய நிதியை அரசு வழங்க வேண்டும், கதிரவன் மனைவிக்கு அரசு வேலை மற்றும் அவர்கள் குடியிருக்க இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 272

0

0