புறம்போக்கு நிலத்தில் இருந்து காலி செய்யாததால் ஆத்திரம்… மூதாட்டி மீது கொலைவெறி தாக்குதல்.. கிராம நிர்வாக அலுவலர் அடாவடி…!!!

Author: Babu Lakshmanan
13 February 2024, 3:07 pm
Quick Share

கோவில்பட்டி அருகே திருமணமாகாத மாற்றுத்திறனாளி மகளுடன் வசித்து வரும் முதிய பெண்ணை அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் பிச்சைத் தலைவன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த இந்திராணி (52). இவர் சொந்த வீடு இல்லாததால் புறம்போக்கு நிலத்தில் ஐந்து வருடமாக தகர செட் அமைத்து, தனது மாற்றுத்திறனாளி மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். மேலும், தனது மாற்றுத்திறனாளி மகளுக்கு இவர்கள் குடியிருந்து வரும் புறம்போக்கு நிலத்தை பட்டாவாக வழங்கிட கோரி மாவட்ட ஆட்சியரிடமும் மனு வழங்கியுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் அப்பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் அய்யனார் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கோபால்சாமி மகள் திருமணமாகாத சரஸ்வதி (55) என்பவருக்கு அதே இடத்திற்கு இலவச மனைப் பட்டா வாங்கி தருவதாக உத்தரவாதம் தந்துள்ளதையடுத்து, இந்திராணியை அந்த இடத்தை காலி செய்து தரக் கூறி தொடர்ந்து தொந்தரவுகளை கொடுத்து வந்துள்ளார்.

இன்று இந்திராணியின் வீட்டிற்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் இடத்தை காலி செய்து தரக் கோரி மிரட்டியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த கிராம நிர்வாக அலுவலர் அய்யனார் இந்திராணியை தகாத வார்த்தையால் திட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.

இதில் மயக்கம் அடைந்த இந்திராணியை அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்ததையடுத்து, அவரது மகன் விரைந்து வந்து கோவில்பட்டி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

மேலும் கிராம நிர்வாக அதிகாரி பெண்ணை தாக்கிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 277

0

0