முகத்தை உடைச்சிடுவேன்… இந்திய கிரிக்கெட் கேப்டனுக்கு மிரட்டல் : வரம்பை மீறிய அரசு பேருந்து நடத்துநர்!!!

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2023, 11:17 am
Sachin Siva -Updatenews360
Quick Share

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனும் மதுரையைச் சேர்ந்தவருமான சச்சின் சிவா, சென்னையில் இருந்து மதுரைக்கு வருவதற்காக நேற்று (ஏப். 18) இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் SETC-க்கு சொந்தமான TN01 AN3213 என்ற பதிவெண் கொண்ட கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்தில் பயணிப்பதற்காக ஏறியுள்ளார்.

அப்போது அந்த பேருந்தின் நடத்துனர் இந்த பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனுமதி இல்லை என கூறி பேருந்தில் ஏறக்கூடாது என கூறியுள்ளார்.

அப்போது சச்சின் சிவா, இதுபோன்ற பேருந்துகளில் பயணிக்க அனுமதி உள்ளது என பதிலளித்துள்ளார். அதற்கு, நடத்துநர் சிவாவிடம் ‘முகத்தை உடைத்துவிடுவேன். எனக்கு எல்லாம் தெரியும்’ என கூறி மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து கேட்டபோது, ‘அப்படித்தான் பேசுவேன் உன்னை வண்டியில் ஏற்ற முடியாது’ எனக்கூறி வண்டியில் ஏற்றுவதற்கு மறுத்துததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மாற்றுத்திறனாளி சச்சின் சிவா கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் அதே பேருந்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார். அதற்கு அந்த நடத்துனர், ‘நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள். என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது” என அலட்சியமாக பேசி மாற்றுத்திறனாளிக்கு மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து மாற்றுத்திறனாளி சச்சின் சிவாவை பேருந்தில் ஏற்றாமல், அப்படியே விட்டுசென்றுள்ளார். மேலும் காவல்துறையினர் முன்பாகவே, ‘நீ மதுரைக்கு வா. பார்த்துக்கொள்ளலாம்’ என கூறி பகிரங்கமாக மிரட்டல் விடுத்துவிட்டு சென்றதாகவும் தெரிகிறது. இதனையடுத்து மற்றொரு பேருந்தில் மிகுந்த சிரமத்துடன் சச்சின் சிவா பயணித்துள்ளார்.

ஒரு இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கே இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டால் மற்ற மாற்று திறனாளிகள் பார்வையற்றோருக்கு என்ன மாதிரியான நிலை அரசு பேருந்தில் ஏற்படும் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் மேலும் இதுபோன்ற மாற்றுத்திறனாளிக்கு மிரட்டல் விடுத்து பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துனர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சச்சின் சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து நடத்துநர் ராஜாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அரசு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

Views: - 286

0

0