இனி பிறந்தநாளை தியேட்டரில் கொண்டாடலாம்! உதயமான புதிய PRIVACY THEATRE!!

22 December 2020, 10:20 am
Tirupur Privacy Theatre -Updatenews360
Quick Share

திருப்பூர் : ஸ்ரீ சக்தி சினிமாஸ் மல்டிப்ளக்ஸ் தியேட்டரில் கொரோனா காலத்திற்கு ஏற்ப ப்ரைவசி (privacy) தியேட்டர் உருவாக்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக கொண்டு வரப்பட்ட இத்திட்டத்திற்கு மக்களிடையே பெரும் ஆதரவு இருப்பதாக உரிமையாளர் கூறியுள்ளார்.

கொரோனா பரவ தொடங்கிய மார்ச் மாதம் முதலே பொதுமுடக்கத்தின் காரணமாக திரையரங்குகளும் மூடப்பட்டு இருந்தது. பொதுமுடக்கத்தில் பல்வேறு துறைகளுக்கு தளர்வுகள் அளித்த போதிலும் கேளிக்கை விடுதிகள் , திரையரங்குகள் போன்றவற்றிற்கு இறுதியாக அனுமதி அளித்தது அரசு.

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தற்போது திரையரங்கு செயல்பட்டு வந்தாலும் , மக்களிடையே நிலவும் அச்சம் , உச்ச நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் இல்லை என்பன போன்ற காரணங்களால் தற்போது வரை தியேட்டர்களில் அதிக அளவிலான மக்கள் கூட்டம் வருவதில்லை.

இச்சூழலில் தான் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் அவர்களின் ஸ்ரீ சக்தி சினிமாஸ் தியேட்டரில் ப்ரைவசி தியேட்டர் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய அவர், மல்டிப்ளக்ஸ் தியேட்டர் என்பதால் இருக்க கூடிய 8 ஸ்க்ரீனில் 150 பேர் மட்டுமே அமரக்கூடிய வசதி கொண்ட ஒரு ஸ்க்ரீனை இந்த ப்ரைவசி தியேட்டருக்காக ஒதுக்கியுள்ளனர். 3999 ருபாய் கட்டணமாக செலுத்தினால் 25 நபர்கள் வரை அனுமதிக்கப்படுவர். அதற்கு மேல் வரும் ஒவ்வொரு நபருக்கும் 120 ருபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் .

பிறந்தநாள் போன்ற கொண்டாட கூடிய அனைத்துவகைகளுக்கும் ப்ரைவசி தியேட்டர் கொடுக்கப்படும் என்றும் , அப்போது ஓடிக்கொண்டிருக்கும் எந்த படத்தை விரும்புகிறார்களோ அந்த படம் திரையிடப்படும் என்றும் கூறுகிறார்.

கொரோனா அச்சம் இன்னும் முழுமையாக மக்கள் மத்தியில் இருந்து விலகாத இந்த காலகட்டத்தில் , அச்சம் இல்லாமல் , தனியாகவோ , குடும்ப உறுப்பினர்களோ மட்டுமே பார்க்க கூடிய இந்த ப்ரைவசி தியேட்டர் நிச்சயம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என்கிறார்.

Views: - 1

0

0