ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு.. கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்!!

Author: Babu Lakshmanan
23 December 2023, 8:38 am
Quick Share

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ரங்கா ரங்கா என பக்தி பரவசமுடன் சாமி தரிசனம் செய்தனர்.

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு இன்று அதிகாலை 4 மணிக்கு நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 12ந் தேதி தேதி மாலை தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது.

இதற்காக உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 3 மணியளவில் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து சிம்ம கதியில் புறப்பட்டு வெளியில் வந்தார். தொடர்ந்து இரண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே மூன்றாம் பிரகாரத்திற்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வந்துசேர்ந்தார். முன்னதாக, விரஜா நதி மண்டபத்தில் அவர் வேத விண்ணப்பம் கேட்டார்.

அதனைத் தொடர்ந்து, காலை 4 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலைக் கடந்து மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வந்து சேர்ந்தார்.

அங்கு பெருமாள் சுமார் 1 மணிநேரம் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். அதன்பின் சாதரா மரியாதையாகி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். நள்ளிரவு 12 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு அதிகாலை 1.15 மணியளவில் மூலஸ்தானம் சேருவார். இவ்விழாவையொட்டி ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றுப்பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. ரெங்கநாதர் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் தலைமையில், அர்ச்சகர்கள், ஸ்தானீகர்கள், கைங்கர்யபரர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்துள்ளனர். கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியின் போது சுமார் 2 லட்சம் பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்ய வருகை புரிந்தார்கள். இந்த ஆண்டு அதைக்காட்டிலும் கூடுதலாக பக்தர்களின் வருகை காணப்பட்டது.

பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கோவில் அதிகாரிகளும், போலீசாரும், மாவட்ட நிர்வாகத்தினரும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து செய்து வருகின்றனர். பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல வேண்டிய வழிகளை தடுப்பு கட்டைகள் அமைத்து வரைமுறைப்படுத்தியிருந்தனர்.

பக்தர்கள் கூட்டத்தை கண்காணிக்க கோவிலின் உட்புறத்தில் முக்கிய இடங்களில் 120 கேமராக்களும், கோவிலை சுற்றி வெளிபுறம், வாகன நிறுத்தும் இடம், என்று மொத்தம் 236 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் புறக்காவல் நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என்.காமினி தலைமையில், ஒரு டி.ஐ.ஜி, 11 போலீஸ் சூப்பிரண்டுகள், 14 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 40 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என்று 3,500 பேர் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நேற்று காலை முதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Views: - 254

0

0