மேயருக்கு எதிர்ப்பு கூறி திமுக கவுன்சிலர் இருவர் திடீர் தர்ணா : ஆதரவாக களமிறங்கிய அமமுக கவுன்சிலரால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 July 2023, 3:59 pm
Dmk Ammk - Updatenews360
Quick Share

திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் மு. அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மதிவாணன் , துர்காதேவி ,ஜெயநிர்மலா விஜயலட்சுமி கண்ணன்,மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 98 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. கூட்டம் தொடங்கியதும் மாநகராட்சி மேயர் அன்பழகன் பேசுகையில், மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கு மாதம்தோறும் மதிப்பூதியம் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது. அதற்காக எனது சார்பிலும், மாமன்ற உறுப்பினர்கள் சார்பிலும் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

இதைத்தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் மதிப்பூதியம் வழங்கியதற்காக தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து பேசினர்.

அப்போது குடிநீர் பிரச்சினை இருப்பதற்காக சில கவுன்சிலர்கள் தெரிவித்தனர். கவுன்சிலர் மலர்விழி பேசுகையில் பி.ஜி.நகர்,சிற்பி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறினார்.

மனிதநேய மக்கள் கட்சி கவுன்சிலர் பைஸ் அகமது பேசுகையில்,
மதிப்பூதியம் வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் எனது வார்டு பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளது. இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது. இதை உடனடியாக சரி செய்ய மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதற்கு பதில் அளித்து மேயர் பேசுகையில், தவறான தகவல்களை கூறக்கூடாது, தினம்தோறும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் மாநகராட்சி திருச்சி மாநகராட்சி மட்டும் தான்.

25 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சனை இல்லாத அளவிற்கு அமைச்சர் நேரு திட்டங்களை திருச்சியில் செயல்படுத்தி உள்ளார். எனவே தட்டுப்பாடு இன்றி பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படும் என்றார்.

தொடர்ந்து மண்டல குழு3ன் தலைவர் மதிவாணன் பேசுகையில், திருச்சியில் புதிதாக அமைய உள்ள பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் சூட்ட வேண்டும் . திருச்சி தெப்பக்குளம் கோட்டை நுழைவாயிலுக்கு அன்பில் தர்மலிங்கம் பெயர் சூட்ட வேண்டும் என்றார்.

திமுக கவுன்சிலர் முத்துச்செல்வம் பேசுகையில், பட்ஜெட்டில் வார்டுக்கு ஒரு கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடைபெறும் என்று அறிவித்து இருந்தீர்கள்? அது எப்போது அமலுக்கு வரும்? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து மேயர் பேசுகையில், கவுன்சிலர்களுக்கான அலுவலகம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. அடுத்த கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கவுன்சிலர் செந்தில்நாதன் பேசுகையில்,
தூய்மை பணியாளர்களுக்கு ரூ 525க்கு பதிலாக 500ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது இது கண்டனத்திற்குரியது. சாக்கடை அள்ளும் பணியில் ஈடுபடுபவர்கள் குடித்துவிட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி கூறியதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோல் திருச்சியில் ஒரு கல்லூரிக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஏற்புடையது அல்ல என்று கூறினார்.

சுரேஷ் (இ.கம்யூ) :- துப்புரவு தொழிலாளர்கள் குடித்துவிட்டு வருவதாக கூறுவது தவறு.

மேயர் அன்பழகன் : தவறாக பேசியதை மாமன்ற உறுப்பினர் வாபஸ் வாங்க வேண்டும். இதைத் தொடர்ந்து நான் பேசியதை வாபஸ் வாங்குகிறேன் என்று கவுன்சிலர் செந்தில்நாதன் கூறினார்.

இதைத்தொடர்ந்து திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 98தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. அப்போது 43-வது தீர்மானத்தை ஒத்தி வைக்குமாறு திமுக கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தினர்.

ஆனால் ஒரு மனதாக அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை கண்டித்து மாநகராட்சி கூட்டம் முடிந்த பிறகும் இரண்டு திமுக கவுன்சிலர்களும் மாநகராட்சி கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கவுன்சிலர் செந்தில்நாதனும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 232

0

0