இது கோவை மக்களின் நீண்டநாள் கனவு.. வெள்ளலூர் பேருந்து நிலையப் பணிகளை மீண்டும் தொடங்குக ; ஆட்சியரிடம் மனு!!

Author: Babu Lakshmanan
25 September 2023, 4:14 pm
Quick Share

நிறுத்தி வைக்கப்பட்ட வெள்ளலூர் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியருக்கு வெள்ளலூர் பேருந்து நிலைய மீட்புக்குழு மனு அளித்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது ரூ.168 கோடி மதிப்பில் 10.60 ஏக்கர் பரப்பளவில் வெள்ளலூர் அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. மாநகருக்கு வரும் வெளியூர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் நேரடியாக எல்&டி பை பாஸ் சாலையை பயன்படுத்தி வெள்ளலூருக்கு வந்து செல்லும் வகையிலும், ஏறத்தாழு 300 பேருந்துகள் நிறுத்தும் வகையில் பிரமாண்ட பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 65 % பணிகள் நிறைவடைந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. அதுமட்டுமில்லாமல், இந்தப் பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியது. இதனிடையே, பேருந்து நிலையத்துக்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் புதர்மண்டி காணப்படுகின்றன.

தங்கள் பகுதியில் பேருந்து நிலையம் அமைவதால், வெள்ளலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் பொருளாதார வளர்ச்சி பெறும் என்று நம்பியிருந்த அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருந்தனர்.

இந்த சூழலில், நிறுத்தி வைக்கப்பட்ட வெள்ளலூர் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவிடம் வெள்ளலூர் பேருந்து நிலைய மீட்புக்குழு மனு அளித்துள்ளது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டத்தில்‌ வெள்ளலூர்‌ ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்‌ தேவை என்பது மாவட்ட மக்களின்‌ நீண்ட நெடுநாளையக்‌ கனவு. அவிநாசி ரோடு, திருச்சி ரோடு,‌ மேட்டுப்பாளையம்‌ ரோடு மார்க்கமாக செல்ல வேண்டிய பயணிகள்‌ போக்குவரத்து நெரிசல்‌ மிகுந்த நகரப்‌ பகுதியில்‌ காந்திபுரம்‌, சிங்காநல்லூர்‌, மேட்டுப்பாளையம்‌ ரோடு பஸ்‌ ஸ்டாண்ட்‌ செல்ல படாதபாடு படுகிறார்கள்‌.

இதை தவிர்க்கும்‌ வகையில்‌ வெள்ளலூரில்‌ ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டும்‌ பணிகள்‌ துவங்கியது. உள்‌ வெளி மாநிலத்தின்‌ அனைத்து பகுதிகளுக்கும்‌ பஸ்கள் இயக்கும்‌ வகையில்‌ இந்த பேருந்து நிலைய கட்டும்‌ பணி நடந்தது. மாநகராட்சியில்‌ சுமார்‌ 80 கோடி செலவிடப்பட்டு, 65 சதவித பணிகள்‌ முடிந்த நிலையில்,‌ பணிகள்‌ மொத்தமாக நிறுத்தப்பட்டது. இது மக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த பேருந்து நிலையம்‌ அமைந்தால்‌ அனைத்து பிரதான ரோடுகளுக்கும்‌ அண்டை மாநிலங்களில்‌ சென்றுவர போக்குவரத்து மிகவும்‌ எளிதாக இருக்கும்‌. நீலாம்பூர்‌, செட்டிபாளையம்‌ என வேறு பகுதிக்கு பேருந்து நிலையம்‌ கட்டும்‌ திட்டத்தை மாற்றினால்‌ அது கூடுதல்‌ செலவினம்‌, காலதாமதம்‌, பயன்பாடு குறைவான திட்டமாக
மாறிவிடும்‌. எனவே வெள்ளலூர்‌ பேருந்து நிலைய கட்டுமான பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.

மேலும்,‌ பழமை வாய்ந்த நமது போத்தனூர்‌ மற்றும்‌ வெள்ளலூர்‌ நகர மக்களின்‌ பொருளாதாரம்‌ மேம்பட நிறுத்தி வைக்க பட்டுள்ள பேருந்து நிலைய கட்டுமான பணிகளை விரைந்து துவக்க தாங்கள்‌ உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்கிறோம், எனக் குறிப்பிட்டுள்ளனர்

Views: - 229

0

0