‘நாடாளுமன்ற தேர்தலில் நோட்டாவுக்கு ஆதரவு’… 7 கிராம மக்களுக்கு வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழு வேண்டுகோள்..!!

Author: Babu Lakshmanan
14 February 2024, 5:49 pm
Quick Share

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகாரமாகும் குப்பைகளை அகற்றுவதில் மெத்தனப் போக்கு நிலவி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குப்பைகள் தரம் பிரித்து தரப்படாததால், மாநகரின் பல்வேறு இடங்களில் மலை போல் தேங்கியிருக்கும் குப்பைகள் துர்நாற்றம் வீசி வருவதுடன், நோய் தொற்றும் அபாயமும் நிலவி வருவதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக பலமுறை கோவை மாநகராட்சி ஆணையரிடமும், கோவை மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளிக்கப்பட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அதேபோல, உக்கடம் பேருந்து நிலையம் பகுதியில் மேம்பாலக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், அங்கு பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களும், பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களும் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, உக்கடம் – பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தையாவது, வெள்ளலூருக்கு மாற்றித் தருமாறு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.

பொதுமக்களின் நலனுக்கான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும், அதனை நிறைவேற்ற மறுத்து வரும் கோவை மாவட்ட ஆட்சியருக்கும், மாநகராட்சி ஆணையருக்கும் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று வெள்ளலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்துநிலைய மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

அதாவது, இந்த பேருந்து நிலையத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிங்காநல்லூர், போத்தனூர், செட்டிபாளையம், மலுமிச்சம்பட்டி, பெரியகுயிலி மற்றும் மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காமல், நோட்டாவுக்கு வாக்கினை பதிவு செய்து தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்துநிலைய மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்துநிலைய மீட்புக் குழுவின் இந்த நூதன போராட்ட அறிவிப்பு கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 140

0

0