‘கையில் அள்ளினாலே உதிரும் தார் சாலை’… உதவி பொறியாளர் தற்காலிக பணியிடை நீக்கம் ; புதிய சாலை அமைக்க உத்தரவு

Author: Babu Lakshmanan
6 December 2022, 1:04 pm
Quick Share

வேலூர் அருகே தரமற்ற முறையில் தார் சாலை அமைத்தது தொடர்பாக முறையாக கவனிக்காத மாநகராட்சி உதவி பொறியாளர் ஆறுமுகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூரை அடுத்த அரியூர் பகுதியில் உள்ளது அன்னை கஸ்தூரிபாய் தெரு. இத்தெருவில் கடந்த 1-ந் தேதி புதியதாக தார்சாலை அமைப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைக்கப்பட்ட தார் சாலையானது தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதாகவும், தாருடன் ஜல்லிகற்கள் ஒட்டாமல் நடக்கும்போதே ஜல்லிகற்கள் சாலையில் இருந்து பெயர்ந்து வரும் நிலையில் இருந்துள்ளது.

இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சாலையில் இருந்து வெறும் கைகளால் ஜல்லிக்கற்களை அள்ளி கீழே கொட்டி, அதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். மேலும், தரமற்ற தார் சாலை குறித்து வேலூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

அதைத் தொடர்ந்து, வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், சாலை அமைக்கப்பட்ட போது மழை பெய்ததால் சில அடி தூரம் சாலையில் தாருடன் ஜல்லிக்கற்கள் ஒட்டாத நிலை இருந்தது. இதையடுத்து, அந்த பகுதியில் புதிய சாலை அமைக்க உத்தரவிடப்பட்டது, என்றார்.

சாலை அமைக்கப்பட்ட போது அதை முறையாக கவனிக்காத மாநகராட்சி உதவி பொறியாளர் ஆறுமுகம் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு, அதன்படி, அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அப்பகுதியில் நேற்று (05.12.2022) புதிய சாலையும் அமைக்கப்பட்டது.

Views: - 852

0

0