விவசாயியிடம் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய விஏஓ… திடீரென என்ட்ரி கொடுத்த விஜிலன்ஸ் அதிகாரிகளால் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
26 September 2023, 6:17 pm
Quick Share

பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் உள்பட இருவரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலராக ஜெயமுருகன் (38) பணியாற்றி வருகிறார். அங்கு கிராம நிர்வாக உதவியாளராக தேன்மொழி உள்ளார். இதனிடையே, அதே பகுதியை சேர்ந்த விவசாயி மேகநாதன் என்பவர் தனது நிலத்திற்கு அளவீடு செய்து பட்டா மாற்றி தரும்படி கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

நிலத்தை அளவீடு செய்து பட்டா மாற்றி தர வி.ஏ.ஓ ஜெயமுருகன் மேகநாதனிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு மேகநாதன் தகவல் அளித்தார்.

இதனிடையே, ரசாயனம் தடவிய பத்தாயிரம் ரூபாய் நோட்டுகளை இன்று மேகநாதன் விஏஓ ஜெயமுருகனிடம் வழங்கிய போது, மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். மேலும், விஏஓ ஜெயமுருகன் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் தேன்மொழி ஆகியோரை கைது செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயிடம் விஏஓ பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரம் வருவாய்த் துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 359

0

0