சாதிப் பெயரை சொல்லி மிரட்டல்.. லஞ்ச ஒழிப்பு போலீசார் மீது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார்!

Author: Babu Lakshmanan
11 January 2024, 2:26 pm
Quick Share

சாதி பெயரை சொல்லி மிரட்டியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் மீது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்துள்ளார்.

கோவை சங்கனூர் ரோடு கணபதி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (25). இவர் மதுக்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். சில மாதம் முன்பு கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் இவர் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது இவரிடம் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்காக வங்கி கணக்கு துவக்கி, அதில் வரவு செலவு வைத்துள்ளதாக இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் புகார் கூறியிருந்தனர்.

இதை ஈஸ்வரன் ஏற்கவில்லை. தான் ஊழியராக மட்டும் வேலை செய்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் இதையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கவில்லை.

கோயில் விழா நடந்து கொண்டிருந்தபோது, அங்கே இருந்த ஈஸ்வரனிடம் ‘நீ எந்த ஜாதி.. அப்பா அம்மா யார்..?’ என்ற விவரங்களை கேட்டுள்ளனர். அவர் விவரங்கள் தெரிவித்ததும் பட்டியல் இன ஜாதி என அறிந்த போலீஸ் அதிகாரி மது விக்ரம், ஆவேசமாக ஈஸ்வரனிடம் ‘அங்கே என்ன வேலை செய்தாய், மலம் அள்ளிக் கொண்டிருந்தாயா..?’ என்று தகாத முறையில் பேசி கிண்டல் செய்துள்ளதாக தெரிகிறது.

மேலும் ஈஸ்வரன் பெற்றோரிடமும் அவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதை சுட்டிக்காட்டும் வகையில், சாதிய வன்கொடுமை நோக்கத்தில் விசாரணை நடத்தி இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக ஈஸ்வரன் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். மேலும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் தரப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கோவை சரவணம்பட்டி போலீசாருக்கு உத்தரவிட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சாதி ரீதியான விசாரணை குறித்து நாளை சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதில் புகார்தாரர் ஈஸ்வரன் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி மது விக்ரம் மற்றும் அவருடன் சென்றிருந்த போலீசார் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Views: - 253

0

0