பாய், போர்வையுடன் பள்ளியில் தூங்கச் சென்ற கிராம மக்கள் ; பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்… நிலக்கோட்டை அருகே பரபரப்பு

Author: Babu Lakshmanan
16 June 2023, 4:26 pm
Quick Share

திண்டுக்கல் ; பாய், போர்வையுடன் பள்ளியில் தூங்கச் சென்ற கிராம மக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி ஊராட்சி, சென்னஞ்செட்டிபட்டி கிராமத்தில் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அரசு கள்ளர் பள்ளி வளாகப் பகுதியில் தூங்குவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மாவட்ட வழங்கல் அதிகாரியிடம் அரசு கள்ளர் சீரமைப்பு துறை பள்ளிகளை பள்ளிக்கல்வி துறையோடு இணைக்க கூடாது மனு வழங்கியிருந்தனர்.

இந்நிலையில், இன்று கிராம மக்கள் அனைவரும் திரண்டு தூங்கப் போவதாக அறிவிப்பு செய்து அனுமதி கேட்டு மனு கொடுத்திருந்தனர். அதன்படி, இன்று மாலை சுமார் 5:30 மணி அளவில் கிராம மக்கள் ஒன்று திரண்டு கோவில் முன்பு கட்டில், பாய், போர்வை, தலையணை உள்ளிட்ட பொருளோடு தமிழக அரசே, தமிழக அரசே, இணைக்காதே இணைக்காதே அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்காதே என கோரி கோஷமிட்டபடி, கிராமம் முழுவதும் பேரணியாக வந்து அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி முன்பு சென்றனர்.

அப்போது அங்கு இருந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்ட் முருகன் , நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ், பொதுமக்களை தடுத்து அரசு கள்ளர் பள்ளி வளாகத்திற்குள் துங்க அனுமதி இல்லை. ஆகவே பொதுமக்கள் அரசு கவனத்திற்கு அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையோடு இணைக்க வேண்டாம் என்று மக்கள் பல்வேறு வகையில் போராடி வருகிறார்கள் என்ற தகவலை உயர்மட்ட அதிகாரிகள் மூலம் முதலமைச்சர் உள்பட கல்வித் துறை அதிகாரிகளுக்கும் கொண்டு சேர்க்கிறோம்.

எனவே மக்கள் அமைதி காக்கும்படியும், இது போன்ற போராட்டங்களை தற்சமயம் கைவிடும் படியும் கேட்டுக் கொண்டனர். அதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து மக்கள் கூறியதாவது அரசு இது சம்பந்தமாக மறுப்பு அறிவிப்பை வெளியிடவில்லை என்றால், இது போன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடத்துவோம் என்று கூறி கலைந்து சென்றனர். இதன் காரணமாக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பிரமலைக்கள்ளர்கள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் கூறியதாவது:-கடந்த 2 மாதங்களாக கருப்புக் கொடி, கிராமசபை கூட்டத்தில் தீர்மானம், கண்டன போஸ்டர், ஆர்ப்பாட்டங்கள், உயர்மட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் இன்று எங்கள் பள்ளிகளை எங்கள் சமுதாய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கும் போராட்டம் நடத்தலாம் என்று முடிவு செய்து ஏற்கனவே அனுமதி கேட்டு மறுக்கப்பட்ட சூழ்நிலையில் இன்றைக்கு கிராம மக்கள் அனைவரும் திரண்டு பள்ளியை நோக்கி தூங்குவதற்கு சென்றோம்.

இதுகுறித்து முதலமைச்சருக்கு தகவல் தெரிவிக்கிறோம் என்று உயர்மட்ட அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து சிறை பிடித்துக் கொள்ளும் போராட்டத்தை உடனே கைவிடுக என்று கூறியதால் தற்போது தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு உள்ளோம், என தெரிவித்துள்ளார்.

சென்னஞ்செட்டி பட்டியை சேர்ந்த பஞ்சம்மாள் கூறியதாவது: அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் என்பது வெள்ளைக்காரன் காலத்தில் இருந்து எங்க முன்னோர்களால் கட்டப்பட்டு நடந்து 100 ஆண்டுகளுக்கு மேல செயல்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட பள்ளியை இனிமேல் யாராலும் எடுக்க அரசு முயற்சிசா எங்க உயிர் இருக்க வரைக்கும் போராடி மீட்டெடுப்போம், என தெரிவித்தார்.

Views: - 233

0

0