வாட்ஸ்அப் DP-யால் பதறிப்போன இளம்பெண்… கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை ; சிக்கிய வேன் ஓட்டுநர்… விசாரணையில் பகீர்…!!

Author: Babu Lakshmanan
13 November 2023, 9:39 pm
Quick Share

தூத்துக்குடி சிலுவை பட்டி சுனாமி காலனி பகுதியை சேர்ந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி சிலுவைப்பட்டி சுனாமி காலனி பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் ருக்மணி (பெயர் மாற்றம்). தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள மதுரா கோட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அப்போது, ருக்மணிக்கும், அந்த நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்த திருமணமான செல்வம் என்ற நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் செல்போன் மூலம் அடிக்கடி பேசி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ருக்மணியை வெளியே அழைத்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு வராவிட்டால் தான் எடுத்து வைத்துள்ள ருக்மணியின் புகைப்படத்தை சமூக வலைபக்கத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி உள்ளார். மேலும், செல்வம் தனது வாட்ஸ் அப் டிபியில் கருப்பு உடையில் தூக்கு போடுவது போன்ற புகைப்படத்தையும் வைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, நேற்று வீட்டில் தனியாக இருந்த ருக்மணி, தனது சாவிற்கு காரணம் செல்வம் தான் என்றும், மேலும் அவரது தொலைபேசி நம்பரை குறிப்பிட்டு அவர் தன்னை மிரட்டி வருவதாக எழுதி வைத்துவிட்டு, நேற்று பிற்பகல் 12 மணி அளவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து ருக்மணியின் தாய் மாரியம்மாள் வீட்டிற்கு வந்த நிலையில், ருக்மணி தூக்கு போட்ட சம்பவம் தெரிய வந்து, உடனடியாக அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், ருக்மணி இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ருக்மணியின் தந்தை மற்றும் உறவினர்கள் தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் தனது மகள் சாவுக்கு காரணமான செல்வம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ருக்மணியின் செல்போன் மற்றும் அவர் எழுதி வைத்த கடிதம் ஆகியவற்றை ஒப்படைத்துள்ளனர். மேலும், ருக்மணியின் அக்காள் வேலம்மாள், தனது தொலைபேசி மூலம் செல்வத்திற்கு செல்போன் மூலம் ருக்மணி பேசுவது போல் பேசி உள்ளார். அதற்கு செல்வம் வேலம்மாளை ருக்மணி என்று நினைத்து, உடனடியாக திருச்சிக்கு வா என மேலும் ஆபாசமாக பேசி மிரட்டியும் உள்ளார்.

இதை அடுத்து செல்வத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ருக்மணியின் உறவினர்கள் தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் கூறியுள்ளனர். ஆனால் காவல்துறையினர் செல்வத்தை கைது செய்யாமல் உடனடியாக உடலை வாங்குமாறு பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செல்வத்தை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை தாங்கள் ருக்மணியின் உடலை வாங்கமாட்டோம் என கூறி உறவினர்கள் ருக்மணி வீட்டு முன்பு ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 264

0

0