‘ஆளுகள இறக்கட்டுமா..? மாணவிகளுக்கு ஈவ்டீசிங் தொல்லை… நானும் ரவுடிதான் என வீரவசனம் பேசிய நபர் கைது : வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
3 April 2023, 1:27 pm
Quick Share

சேலம் : சேலத்தில் நூலகத்திற்கு படிக்க வரும் மாணவியரிடம் நானும் ரவுடிதான் என வசனம் பேசிய நபரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாநகர் அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியில் பயிலக்கூடிய மாணவ, மாணவிகள் அந்த கல்லூரி அருகே உள்ள மாவட்ட மைய நூலகத்திற்கு சென்று படித்து வருவது வழக்கம். அதே போல், அந்த நூலகத்திற்கு தினமும் 500க்கும் மேற்பட்ட புத்தக வாசிப்பாளர்கள் வந்து செல்கின்றனர். அரசு கல்லூரியில் பயிலக்கூடிய சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அரசு போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவிகள் படிப்பதற்காக இந்நூலகத்திற்கு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாவட்ட நூலக வளாகத்தில் மாணவிகள் சிலர் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு நபர் அங்கிருந்த மாணவிகளிடம் சில்மிஷம் செய்துள்ளார். மாணவிகளும் யாரென்று தெரியாததால் சம்பந்தப்பட்ட நபரிடம் யாரை அழைத்தீர்கள் என கேட்டுள்ளனர். அவர் உங்களை தான் என குடிபோதையில் கூறியுள்ளார்.

இதனால், மாணவிகளுக்கும், அந்நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே போலீஸிடம் கூறப்போவதாக அந்த மாணவிகள் கூறியபோது, ‘நான் யாருன்னு தெரியுமா..? என்மேல எத்தனை கேஸ் இருக்குது தெரியுமா..?, உங்களால என்ன பண்ணிட முடியும். கிச்சிப்பாளையம் சரத்துனா தெரியாதவங்க யாரும் இல்ல. நானே பெரிய ரெளடி என்மேல கேஸ் குடுக்க போறீங்களா. வாங்க போலீஸுக்கு போகலாம்னு,” கூப்பிட்டுள்ளார்.

பின்னர், மாணவர்கள் கூடியதும், வீடியோ எடுப்பது தெரிந்ததும், தெரியாமல் சொல்லியதாக சமாளிக்கிறார். மாணவிகள் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் அவர் கேட்காமல், தன்னை ரெளடி என்றே குறிப்பிட்டு வந்தார். பின்னர் மாணவிகள் பிரச்னை வேண்டாம் என கலைந்து சென்றனர்.

இதனிடையே, இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவத்தொடங்கவே சேலம் மாநகர காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், கிச்சிப்பாளையத்தில் இருந்த சரத்தை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து, அவரிடம் விசாரணை நடத்திய போது, போலீசாரிடமும் சிரித்தபடி நானும் ரௌடி தான் என கூறியுள்ளார். ஆனால், அவர் மீது சேலம் மாநகர் மாவட்ட பகுதிகளில் எந்த ஒரு வழக்கும் இல்லை என்பதும், அவர் அரசு கலைக் கல்லூரியில் எம்ஏ வரலாறு துறை முன்னாள் மாணவன் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 272

0

0