நடுரோட்டில் இளைஞர் வெட்டிப் படுகொலை.. உடலை வாங்க மறுத்து போராட்டம் : தேனியில் பதற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 July 2023, 2:25 pm
Theni Murder - Updatenews360
Quick Share

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த 25 வயதாகும் ஒண்டி என்பவரும் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜா என்பவரும் நண்பர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவராஜா செல்போனை ஒண்டி வாங்கி உள்ளார் அதன்பின்னர் செல்போனை யுவராஜா திருப்பி கேட்டார். ஆனால் அவர் செல்போனை தர மறுத்ததாக கூறப்படுகிறது.

பல முறை கேட்டும் செல்போனை திருப்பித்தராததால் ஒண்டியிடம் பேசி தனது செல்போனை வாங்கி தருமாறு தனது நண்பரான வினோத் குமார் (24) என்பவரிடம் யுவராஜா தெரிவித்தார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு சின்னமனூர் நகராட்சி அலுவலகம் அருகே வாரச்சந்தை பகுதியில் ஒண்டி மற்றும் அவரது நண்பர்கள் இருந்தனர்.

இதை கேள்விபட்டு யுவராஜா தனது செல்போனை வாங்கி தருமாறு வினோத்குமாரை அங்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு செல்போன் வாங்கியது தொடர்பாக இரு தரப்பினரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ஒண்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத்குமாரை சரமாரியாக குத்தி இருக்கிறார். இதில் ரத்த வௌ்ளத்தில் வினோத் குமார் சுருண்டு விழுந்தார். இதையடுத்து ஒண்டி மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த வினோத்குமாரை மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (வெள்ளிக்கிழமை) காலை வினோத்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஒண்டி மற்றும் அவரது நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

செல்போனை திருப்பி கேட்டதால் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சின்னமனூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வினோத் குமார் உடலை வாங்க மறுத்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை முன்பு அவரது உறவினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

அப்போது தப்பி சென்ற ஒண்டி மற்றும் அவரது நண்பர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். வினோத்குமாரின் குடும்பத்திற்கு முதல்வரின் நிவாரண நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்,

இதுகுறித்து கேள்விபட்டு அங்கு வந்த போலீசார்,பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குற்றவாளிகளை விரைந்து பிடிப்போம் என போலீசார் உறுதியளித்தனர்.

ஆனால் குற்றவாளியை கைது செய்வதுடன், தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை வினோத்குமார் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி போராட்டத்தை கைவிட்டு அவரது உறவினர்கள் கலைந்து சென்றார்கள் இதனால் போலீசார் தொடர்ந்து வினோத்குமாரின் பெற்றோரிடம் பேசி வருகிறார்கள்.

Views: - 255

0

0