விருந்துக்கு அழைத்து மருமகனை வெட்டிக் கொன்ற மாமனார்… திருமணமாகி 3 நாட்களில் நேர்ந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
18 June 2022, 2:06 pm
Quick Share

திருத்துறைப்பூண்டி அருகே திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆன நிலையில், விருந்துக்கு அழைத்து மருமகனை மாமனார் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சிங்களாந்தி மங்களநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்த நகராட்சி ஊழியரன சிற்றரசனின் மகன் முத்தரசன் (27). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனரான ரவிச்சந்திரன் என்பவரின் மகள் அரவிந்தியாவும் (22) கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 13ம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து ஐந்து நாட்கள் ஆன நிலையில், மகள் மற்றும் மருமகனை ரவிச்சந்திரன் மறு வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்துள்ளார். அப்போது முத்தரசன் மதுபோதையில் தனது மனைவி அரவிந்தியாவுடன் தகராறில் ஈடுபட்டு அவரை அடித்துள்ளார்.

இதனை ரவிச்சந்திரன் தட்டிக் கேட்டுள்ளார். இதன் காரணமாக மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, இதில் மாமனார் ரவிச்சந்திரனை மருமகன் முத்தரசன் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற ரவிச்சந்திரன் அருகில் இருந்த அரிவாளை எடுத்து முத்தரசனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் முத்தரசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து, ரவிச்சந்திரன் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் தன் மருமகனை கொலை செய்ததாக கூறி சரணடைந்துள்ளார்.

இதனிடையே, அரவிந்தியாவை காதலிக்கும் போது ஏற்பட்ட சண்டையில், அவரை முத்தரசு கத்தியால் குத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த வழக்கு காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கிறது. தற்போது நடைபெற்ற முத்தரசன் – அரவிந்தியாவின் திருமணம் கூட, முத்தரசனின் வற்புறுத்தல் மற்றும் மிரட்டலால் தான் நடைபெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த கொலை குறித்து திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருந்துக்கு வந்த மருமகனை மாமனார் வெட்டிக்கொலை செய்த சம்பவம் என்பது இப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 687

0

0