100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி மோடி அரசு சாதனை… ராகுல், மம்தாவுக்கு சோதனையா…?

Author: Babu Lakshmanan
22 October 2021, 6:42 pm
Modi vaccine - updatenews360
Quick Share

இன்றைய தினம் அனைத்து ஊடகங்களிலும் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியான தலைப்பு செய்தி, ‘100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை’ என்பதாகும்.

இது எளிதான காரியம் அல்ல. ஏனென்றால் கடந்த ஜனவரி மாத வாக்கில் இந்தியாவில் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தபோது, அது பற்றி அரசியல்வாதிகள் உள்பட சமூக ஆர்வலர்கள் வரை ஒவ்வொருவரும் மத்திய அரசை நோக்கி ஆயிரத்தெட்டு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பினர்.

100 கோடி தடுப்பூசி

அதனையும் தாண்டி இந்தியா இந்த சாதனையை, நிகழ்த்தியிருக்கிறது. நம்மைவிட அதிக மக்கள் தொகை கொண்ட சீனா கடந்த ஜூன் மாதமே இந்த சாதனையை நிகழ்த்தி விட்டது

என்றாலும் கூட கொரோனா முதன்முதலில் அந்நாட்டில் இருந்துதான் பிற நாடுகளுக்கு பரவியது என்பதால் சீனா முன்கூட்டியே அதற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டுவிட்டது என்பதுதான் உண்மை. அதாவது நோயைப் பரப்பியவர்களுக்கு, எந்த மருந்து சரியாக இருக்கும் என்பது நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதனால்தான் சீனா முன்பே100 கோடி இலக்கை முன்பு கடந்துவிட்டது என்று கூறப்படுவது உண்டு.

modi vaccine

இந்தியாவில் 100 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பது குறித்து பிரதமர் மோடி அதிகாரப் பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார்.

இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “நாடு வரலாறு படைத்துள்ளது. இது இந்திய அறிவியல், தொழில் முனைவு,130 கோடி இந்தியர்களின் ஒன்றுபட்ட உணர்வு ஆகியவற்றுக்கு கிடைத்த வெற்றி. தடுப்பூசி செலுத்துவதில் 100 கோடி என்னும் இலக்கை இந்தியா கடந்து இருப்பதற்கு வாழ்த்துகள். இச்சாதனையை நிகழ்த்த காரணமான டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் இதில் பங்காற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

இன்னொரு பதிவில், “கடந்த 9 மாதங்களில் 100 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பது, சவால்களுக்கு சாதனை மூலம் இந்தியா பதிலளிக்கும் என்பதை உணர்த்தி இருக்கிறது” என்றும் மகிழ்ச்சி பொங்க குறிப்பிட்டு உள்ளார்.

பாராட்டு இல்லை

இந்தியாவின் இந்த அரிய சாதனையை ஐநா சபை, உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகள் வெகுவாக பாராட்டியுள்ளன. சீனா முதன்முதலாக 100 கோடி தடுப்பூசி போட்டது போதுகூட இதுபோல யாரும் மனமுவந்து பாராட்டு தெரிவிக்கவில்லை.

Sonia_Rahul_UpdateNews360

இது ஒருபுறமிருக்க, இச்சாதனையை மத்திய பாஜக அரசு நிகழ்த்தியதற்காக பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி ஆகியவை பெயரளவுக்கு கூட பாராட்டவில்லை. இதெல்லாம் ஆட்சியாளர்களின் கடமைதானே, இதில் பெருமைப்பட்டுக் கொள்வதற்கு என்ன இருக்கிறது?.. என பாராட்ட மனமின்றி அவர்கள் விட்டு விட்டார்களா?… என்பது தெரியவில்லை.

கெஜ்ரிவாலுக்கு குட்டு

ஆனால், கொரோனாவுக்கு தடுப்பூசி போடுவது நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டபோது அதை கிண்டல் செய்யாத எதிர்க்கட்சிளே கிடையாது. முதலில் ராகுல்தான் தடுப்பூசி
பற்றி சந்தேகம் எழுப்பினார்.

பின்பு பரவலாக போடத் தொடங்கியதும் இன்னும் இந்த ஊசியை நாட்டு மக்கள் அனைவருக்கும் போட்டு முடிக்க எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? என்று கேள்வியை எழுப்பி மக்களை குழப்பமடைய வைத்தார்.

Kejriwal_PSA_oxygen_plant_UpdateNews360

ஏப்ரல், மே மாதங்களில் டெல்லி, மேற்கு வங்க மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டபோது மம்தா பானர்ஜியும், கெஜ்ரிவாலும் வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தனர். கெஜ்ரிவால் டெல்லி ஹைகோர்ட்டையே ஏமாற்றி அதற்காக கொட்டும் வாங்கினார்.

எதிர்கட்சிகளின் உருட்டுகள்

தமிழகத்திலும் இதுபோன்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அரசியல் கட்சி தலைவர்கள் தடுப்பூசியின் செயல் திறன் பற்றி வித விதமாக உருட்டினர்.

இவர்களெல்லாம் கடந்த காலங்களில் தடுப்பூசி பற்றி என்னென்ன சொன்னார்கள்?.. என்பது பற்றிய பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தடுப்பூசியை மோடி முதலில் போட்டுகொண்டு வழிகாட்ட வேண்டும் என்று தடுப்பூசியின் நம்பகத் தன்மை பற்றி நாடாளுமன்றத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் கேலி செய்தார்.

தடுப்பூசிக்காக மக்களை சோதனை எலிகளாக பயன்படுத்தக்கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் எம்பி மத்திய அரசை எச்சரிக்கை செய்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, “இன்றைக்கு தடுப்பூசி போடும் அளவு ஒரு நாளைக்கு 17 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது. இந்நிலை நீடித்தால் 94 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட 1000 நாட்களாகிவிடும். அதாவது 3 ஆண்டுகள் ஆகும்” என்று பீதியை கிளப்பினார்.

ஜோதிமணி எம்பி, “தமிழகத்திற்கு மட்டும் குறைந்தபட்சம் 14 கோடி தடுப்பூசிகள் தேவை. 1 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. இந்தியா முழுவதும் 200 கோடி தேவை. 3-வது அலையை வேறு எதிர்நோக்கி உள்ளோம். மோடி அரசு இவ்வளவு மெதுவாக தடுப்பூசி போட்டால் எப்போது போட்டு முடிப்பது?…

இந்திய மக்கள் தொகை 130 கோடி. உலகிலேயே மிகக் குறைவாக தடுப்பூசி போட்டுள்ள நாடு இந்தியாதான். அந்தப் பெருமை மோடி அரசையே சாரும். ஆனால், பொய் விளம்பரத்தை பாருங்கள். பிரதமர் மோடியும், பிஜேபியும் பொய்களும் பிரிக்க முடியாதவை” என்று கிண்டல் செய்திருந்தார்.

திமுக கிண்டல்

பிரபல சமூக செயற்பாட்டாளர் ஜி. சுந்தர்ராஜன்,”உங்களுக்கு தகவலுக்காக சொல்கிறேன். இதுவரை இந்தியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 1 கோடிதான். இந்த வேகத்தில் போனால் எல்லோருக்கும் 2 டோஸ் போடுவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் எனத் தெரியாது” மக்களின் வயிற்றில் புளியை கரைத்தார்.

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்போது தமிழக மக்களுக்கு இலவசமாக போடப்படும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதை கேலி செய்யும் விதமாக, உடனே திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, “சாமான்ய குடிமக்களுக்கு தடுப்பூசி கொடுப்பது அரசின் கடமை. அதை ஏதோ சாதனைபோல் சொல்வது கொடுமை. போலியோ மருந்து இலவசமாகத்தான் கொடுக்கப்படுகிறது….

1972 முதல் போலியோ சொட்டு மருந்து தமிழகம் முழுவதும் இலவசமாக அளித்து 1983 ஆண்டே தமிழகத்தை போலியோ இல்லாத மாநிலமாக்கி சாதனை படைத்தவர் தலைவர் கருணாநிதி. எப்போ வரும் என்றே தெரியாத கொரோனா தடுப்பூசியை இலவசமாக கொடுப்போம் என்பது எந்த வகை அரசியல்?” என்று கிண்டலாக கேள்வி எழுப்பி இருந்தார்.

திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக போன்றவையும், சமூகப் போராளிகள் நடிகர் சித்தார்த், திருமுருகன் காந்தி போன்றோரும் தடுப்பூசி விஷயத்தில் தொடர்ந்து எழுப்பிய சந்தேகங்களை பட்டியல் போட்டால் அது குறைந்தபட்சம் 100 பக்கமாவது வரும்.

அதுமட்டுமல்ல சில குறிப்பிட்ட கட்சிகளுக்கு முட்டுக் கொடுக்கும் தனியார் டிவி சேனல்களில் ஒன்று, தனது இணையதள பக்கத்தில் “தடுப்பூசி விகிதம் இந்த வேகத்தில் போனால் இந்தியா ‘ஹெர்ட் இம்யூனிட்டி’யை எட்ட இன்னும் 3.5 ஆண்டுகள் ஆகலாம்” என்று அதிர்ச்சி செய்தி வெளியிட்டது. இன்னொரு டிவி, “இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு 12 ஆண்டுகள் ஆகலாம். மந்தை நோய் எதிர்ப்பு சக்தி உருவாக 8 ஆண்டுகள் தேவைப்படும்” என மக்களை பயம் காட்டியது.

வாயை மூடிக் கொண்ட எதிர்க்கட்சிகள்

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “ஒரு வருடத்துக்கு முன்பு வரை கொரோனா தொற்றை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் இரவும் பகலுமாக மருத்துவமனைகளில் நோயாளிகளை கவனித்து குணப்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டதால் பின்னர் அதை அப்படியே விட்டுவிட்டனர்.

இந்தாண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் தடுப்பூசியை மத்திய அரசு போடத் தொடங்கியபோது, பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. மோடி எந்த காலத்தில், 18 வயதுக்கும் மேற்பட்ட 100 கோடிப் பேருக்கும் தடுப்பூசி போடுவார், அதுவரை மக்களெல்லாம் உயிருடன் இருப்பார்களா?” என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் கிண்டலும் கேலியும் செய்தன. ஆனால் இப்போது100 கோடி தடுப்பூசி போடப்பட்டு விட்டது எனத் தெரிந்ததும் வாயை மூடிக் கொண்டு விட்டன.

2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை கொரோனா பரவல் நீடிக்கும், இதை வைத்தே அப்போது தேர்தலை சந்தித்து மத்திய பாஜக அரசை எளிதில் வீழ்த்தி விடலாம் என்று அத்தனை எதிர்க்கட்சிகளும் கனவு கண்டன. அதெல்லாம் தற்போது தவிடு பொடியாகி விட்டது. அதனால்தான் இதுவரை தடுப்பூசி… தடுப்பூசி… என்று அலறிக் கொண்டிருந்த எதிர்க்கட்சிகள் தற்போது அமைதி காக்கின்றன.

அன்று தடுப்பூசி விஷயத்தில் மோடியை கடுமையாக திட்டியவர்கள், எதிர்த்தவர்கள் இந்த சாதனையில் எங்களது பங்களிப்பும் இருக்கிறது என்று கூறுவதும் ஏற்புடையது அல்ல.

100 கோடி தடுப்பூசி போடப்பட்டது, பிரதமர் மோடிக்கு கிடைத்த முதல் வெற்றி. அதன் மூலம் எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்து இருப்பது பாஜகவுக்கு 2-வது பெரிய வெற்றி. தற்போது தினமும் சுமார் 60 லட்சம் முதல் 65 லட்சம் தடுப்பூசி நாடு முழுவதும் போடப்பட்டு வருகிறது.

இந்தக் கணக்கின்படி பார்த்தால் இன்னும் 5 மாதத்துக்குள் 2 டோஸ் தடுப்பூசிகள் நாட்டு மக்கள் அனைவருக்கும் போடப்பட்டு விடும். மத்திய அரசு இன்னும் வேகம் காட்டினால் இந்த ஆண்டின் இறுதிக்குள்ளேயே இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டு விட வாய்ப்பு உள்ளது.

அதிமுகவிற்கு விளம்பரம்

திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, கடந்த ஆண்டு வெளியிட்ட ட்விட்டர் பதிவில் எடப்பாடி பழனிசாமி சொல்வதை சாதனையாக கருதக்கூடாது என்று கூறிவிட்டு, அதே பதிவில் கருணாநிதி செய்தது சாதனை என்று கூறியிருந்தார்.

அதாவது உங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி, எங்களுக்கு வந்தால் ரத்தம் என்பதுபோல அதிமுக தடுப்பூசி இலவசம் என்று அறிவித்தால் அது சாதனை அல்ல, திமுக செய்தால் அது சாதனை என்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

அதேபோல கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடத் தொடங்கியபோது ஆட்சியில் இருந்தது அதிமுகதான், திமுக அல்ல. அப்போது தடுப்பூசி பற்றி திமுக தலைவர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதால்தான் தமிழக மக்கள் தாங்களாக முன்வந்து தடுப்பூசி போட தயங்கினர் என்பதும் உண்மை.

மேலும் 1983-ல், அதாவது எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில்தான் மாநிலத்தில் முழுமையாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு போலியோ முற்றிலும் இல்லாத நிலை உருவாக்கப்பட்டது என்பதை தன்னையும் அறியாமல் திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை ஒப்புக் கொண்டிருக்கிறார்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 502

1

0