13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை : செம்பரம்பாக்கம் ஏரி ஆய்வுக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

25 November 2020, 1:53 pm
Cm inspection 2 - updatenews360
Quick Share

சென்னை : நிவர் புயல் இன்று நள்ளிரவுதான் கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் உள்ள முக்கிய நீர் நிலைகளில் வேகமாக முழு கொள்ளளவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 22 அடியை செம்பரம்பாக்கம் நீர் மட்டம் நெருங்கி வருவதால், நண்பகல் 12 மணிக்கு எரியில் இருந்து நீர் திறக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, தற்போது உபரி நீர் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக, விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட போது 3 முறை சைரன் ஒலி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுமார் 5 வருடங்களுககு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நீர்மட்டம், நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- நிவர் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்டதால், யாரும் அச்சப்பட வேண்டாம். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிவர் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், விழுப்புரம், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை அறிவிக்கப்படுகிறது, எனத் தெரிவித்தார்.

Views: - 24

0

0