திமுக நிபந்தனையை மீறிய விசிக : விரும்பும் தொகுதிகள் கிடைக்குமா?

6 March 2021, 1:08 pm
VCK - dmk - updatenews360
Quick Share

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் இரண்டு முறை நடத்திய பேச்சில் ஏற்பட்ட நீண்ட இழுபறிக்கு பின்பே இந்த 6 சீட்டுகள் கிடைத்தது. திமுகவிடம் விசிக கேட்டது இரட்டை இலக்க தொகுதிகள். அதாவது, 12 இடங்களை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. திமுகவோ மூன்று சீட்டுக்களை தருவதாக கூறி முதலில் அதிர்ச்சி அளித்தது. பின்னர் ஒருவழியாக போராடி
6 இடங்களை பெற்றுவிட்டது.

கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டார். ஆனால் திமுகவிடம் 6 தொகுதிக்கு அடிபணிந்து இருக்கக்கூடாது என்று விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

vck - updatenews360

“நமது கட்சிக்கு குறைந்தபட்சம் 7 சதவீத ஓட்டுகள் இருக்கிறது.
ஒரு சதவீதத்துக்கு ஒரு தொகுதி என்று வைத்துக் கொண்டாலும் கூட 7 சீட்டுகளாவது ஒதுக்கப்பட்டு இருக்கவேண்டும். ஆனால் 6 சீட்டு என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது” என்று கட்சித் தலைமைக்கும், திமுகவுக்கும் எதிராக பல இடங்களில் விசிக தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பியதையும் கேட்க முடிந்தது. இது திருமாவளவனை மட்டுமல்ல, திமுக தலைவர் ஸ்டாலினையும் எரிச்சலூட்டியது. ஆனால் தேர்தல் நேரத்தில் இதுபோன்ற சலசலப்புகள் எழத்தான் செய்யும் என்பது இருவருக்கும் தெரியும். அதனால் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொண்டது போல் தெரியவில்லை.

“நாம் முதல் முறையாக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிக் கூட்டணியில் இணைந்து இருக்கிறோம்” என்று பெருமிதப்பட்டுக் கொண்ட திருமாவளவன், “சனாதன சக்திகளை எதிர்க்கவே திமுகவுடன் கைகோர்த்து இருக்கிறோம்” என்று குறிப்பிட்டு கட்சி தொண்டர்களை சற்று அமைதிபடுத்தி இருக்கிறார்.

DMK - vck - updatenews360

அதேநேரம் சரிபாதி தொகுதிகளில் திமுக சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று திமுக வைத்த நிபந்தனையை அப்படியே திருமாவளவன் நிராகரித்து விட்டார். அதாவது பிரசாத் கிஷோரின் திட்டப்படி சிறிய கட்சிகளுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டால், அதில் 2 இடங்களில் கண்டிப்பாக திமுக சின்னத்தில்தான் போட்டியிடவேண்டும் என்பது முக்கிய நிபந்தனை.

2 இடங்களை திமுகவிடம் பெற்ற மனிதநேய மக்கள் கட்சி, ஒரு தொகுதியில் திமுக சின்னத்திலும், இன்னொரு இடத்தில் தனிச் சின்னத்திலும் போட்டியிட போவதாக அறிவித்திருக்கிறது. ஆனால் திமுகவின் நிபந்தனையை அப்படியே புறக்கணித்து 6 தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று திருமாவளவன் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.

திமுக கணக்கின்படி விசிக மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு இருக்க வேண்டும். ஆனால் அதற்கு இணங்கி விடாமல் 6 தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று திருமாவளவன் அறிவித்திருப்பது திமுக கூட்டணி கட்சிகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுகவோ, விசிகவின் இந்த முடிவை அவ்வளவாக ரசிக்கவில்லை என்கிறார்கள்.

ஏனென்றால் “திமுக, கூட்டணியில் உள்ள சிறு கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கினாலும் கூடியவரை அந்த கட்சிகளையெல்லாம் திமுக சின்னத்தில்தான்போட்டியிட வைக்கவேண்டும். இல்லை என்றால் 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை எட்ட முடியாமல் போகும். பிறகு என்னை எதுவும் கேட்க கூடாது” என்று பிரசாந்த் கிஷோர், திமுக தலைவர் ஸ்டாலினிடம் தெளிவாகவே சொல்லி இருக்கிறாராம். அதை நினைத்துத்தான் திமுக கவலைப்படுகிறது.

prasanth kishor - stalin - updatenews360

தேர்தலில் விசிக போட்டியிடும் இந்த 6 தொகுதிகளின் முடிவுகளும் எப்படி இருக்குமோ என்று இப்போதே கவலைப்பட தொடங்கியும் விட்டது என்கிறார்கள். ஆனால் விசிகவோ, ஏற்கனவே நாங்கள் தெரிவித்தது போல் தனி சின்னத்தில் தேர்தலை சந்திக்கிறோம் என்று கூறுகிறது.

இதேபோல் மதிமுகவுக்கு தொகுதிகளை ஒதுக்கும்போது அந்தக் கட்சியும் தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம் என்று அறிவித்துவிட்டால் என்னவாகும் என்ற கலக்கமும் திமுகவுக்கு வந்துள்ளது. இதனால் மதிமுகவுக்கு, 4 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்கக் கூடாது என்பதில் திமுக மிக உறுதியாக இருக்கிறதாம்.

இது ஒருபுறமிருக்க தாங்கள் போட்டியிட விரும்பும் ஒன்பது தொகுதிகளின் பட்டியல் ஒன்றை விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக தலைமையிடம் அளித்துள்ளது. வேளச்சேரி, சோழிங்கநல்லூர், கள்ளக்குறிச்சி, காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, புவனகிரி உளுந்தூர்பேட்டை, குன்னம், மயிலம் ஆகியவை அந்த 9 தொகுதிகள் என்று கூறப்படுகிறது.

இதிலிருந்து ஏதாவது 6 தொகுதிகளை ஒதுக்குமாறு திமுக தலைமையிடம் விசிக கேட்டுக்கொண்டுள்ளது. இதில் ஒரு வியப்பு என்னவென்றால் வேளச்சேரி, சோழிங்கநல்லூர், மயிலம், புவனகிரி, திட்டக்குடி ஆகிய 5 தொகுதிகளும் தற்போது திமுக வசம் இருப்பவை. மற்ற 4 தொகுதிகளும் கடந்த தேர்தலில் அதிமுக கைப்பற்றியவை.

அதைவிட இன்னொரு ஆச்சரியம் வேளச்சேரி, சோளிங்கநல்லூர், உளுந்தூர்பேட்டை, மயிலம், குன்னம், புவனகிரி ஆகிய ஆறும் பொது தொகுதிகள். கள்ளக்குறிச்சி, திட்டக்குடி,
காட்டுமன்னார்கோவில் மூன்றும் தனித்தொகுதிகள். இதில், காட்டுமன்னார்கோவில் தனித் தொகுதியில் 2016 தேர்தலில் மக்கள் நல கூட்டணி சார்பில் போட்டியிட்ட திருமாவளவன் 87 ஓட்டுகளில் தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, இந்த 6 பொதுத் தொகுதிகளில் ஏதாவது இரண்டை திமுக ஒதுக்கும் என்ற நம்பிக்கையிலும், பொதுத் தொகுதிகளில் போட்டியிட்டு தங்களுடைய பலத்தை நிரூபிக்கவேண்டும் என்பதற்காகவும் இந்த தொகுதிகளை திருமாவளவன் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் திமுக, தான் வெற்றி பெற்ற தொகுதிகளை விட்டுக் கொடுக்குமா? என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.

அதுவும் வட மாவட்டங்களில் மட்டுமே போட்டியிடும் விதமாக விசிக 9 தொகுதிகளை விரும்பி கேட்டுள்ளது. திமுகவோ வட மாவட்டங்களில் இரண்டு தொகுதியும், மத்திய மற்றும் கொங்கு மண்டலங்களில் 4 தொகுதியும் ஒதுக்கும் என்று தெரிகிறது.

மேலும் திமுக ஒதுக்கப் போகும் 6 தொகுதிகளிலும் அதிமுக தனது வேட்பாளர்களை நிறுத்தும் தொகுதிகளாக இருக்கலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் உள்ளது. இதனால் கூட்டணி பலம் வாய்ந்த ஓரிரு தொகுதிகளில் மட்டுமே விசிகவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று கருதப்படுகிறது.

விசிகவுக்கு திமுக ஒதுக்கப்போகும் அந்த 6 தொகுதிகளும் வருகிற 10-ம் தேதிக்குள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம். தனிச் சின்னத்தில் போட்டியிட்டாலும் எங்களால் வெற்றி பெற முடியும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று ஏற்கனவே திருமாவளவன் கூறியிருந்தார். அதை அவர் நிரூபித்துக் காட்டுவாரா? என்ற கேள்விக்கான விடை மக்கள் மன்றம் அளிக்கும் தீர்ப்பு வெளியாகும்போது தெரியவரும்.

Views: - 36

0

0