வலுவான 3-வது அணிக்கு அஸ்திவாரம் : கமலுக்கு ரஜினி கூறிய தேர்தல் ‘அட்வைஸ்’!!!

23 February 2021, 9:46 pm
Rajinikanth - kamal - cover - updatenews360
Quick Share

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் மீது திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது கடுங்கோபத்திலும், எரிச்சலிலும் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு உலா வந்துகொண்டிருக்கிறது.

பொதுவாக தொகுதி பங்கீடு அல்லது கூட்டணி குறித்த பேச்சு ரகசியமாக நடந்தால் அதை வெளிப்படையாக யாரும் சொல்ல மாட்டார்கள். ஆனால், திமுகவுடன் இனி கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த நடிகர் கமல், திமுக தரப்பில் இருந்து தன்னுடன் தொகுதிப் பங்கீடு பற்றி பேசப்பட்டது என்பதை ஊடகங்களிடம் போட்டு உடைத்தார். அதற்காக தூது வந்தவர் யார் என்பதையும் சூசகமாக குறிப்பிட்டதாக சொல்லப்படுகிறது.

அவர், வேறு யாரும் அல்ல. ஸ்டாலினின் மருமகன் சபரீசன்தான் என்பது சொல்லாமலே புரிந்திருக்கும். சபரீசன் திரைமறைவில், கடந்த சில தேர்தல்களாகவே இப்படிப் பல கட்சிகளின் தலைவர்களிடம் தூது சென்று அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறார்.

kamal - stalin - updatenews360

அதுபற்றி எந்த தலைவர்களும் திமுக சார்பில் தூது விடப்பட்டது என்று வெளிப்படையாகக் கூறமாட்டார்கள். ஆனால், அதை கமல் ஊடகங்களிடம் வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார். 2 வாரங்களுக்கு முன்பு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க சபரீசன் திமுக தூதராக சென்றார். இது கூட அவ்வளவாக வெளியே தெரியவில்லை.

சபரீசன் திரைக்கு அப்பால் இருந்து தீவிர அரசியலில் ஈடுபடுபவர் என்பதும், அவருடைய தலையீடு அதிகமாக இருக்கும் என்பதும் அரசியல் வட்டாரத்தில் உள்ளவர்கள் மட்டுமே அறிந்த ஒன்று. அது கமல் மூலம் இப்போது வெளியுலகத்திற்கும் பரவலாக தெரிய வந்திருக்கிறது.

ஏற்கனவே ஸ்டாலினின் மகன் உதயநிதி திமுகவில் இளைஞர் அணி செயலாளராக உள்ளார். கனிமொழி மகளிரணி செயலாளராக இருக்கிறார். இதுதவிர கருணாநிதி குடும்பத்தில் இன்னும் பலர் மறைமுக அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். என்றபோதிலும் சபரீசன் அளவிற்கு யாரும் திரைமறைவு அரசியலில் தீவிரம் காட்டுவது கிடையாது.

தற்போது இந்த விஷயம் வெளியாகி, பொதுமக்களை நேரடியாக சென்றடைந்து இருப்பதால், திமுக ஒரு குடும்ப கட்சி, வாரிசு கட்சி என்கிற என்ற தோற்றம் பளிச்சென்று தெரியத் தொடங்கிவிட்டதால், அதை அறிய வைத்த நடிகர் கமல் மீது திமுக கோபமாக இருக்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அதேபோல், இன்னொரு பேச்சும் திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கடந்த டிசம்பரில் நடிகர் ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்த பிறகு, அவரை வீட்டில் சந்தித்து பேசுவதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டனர். இந்த வரிசையில், திமுக தலைவர் ஸ்டாலின் பெயரும் இருந்துள்ளது. இவர்களில் யாருக்குமே ரஜினி பிடி கொடுக்கவில்லை.
அதேநேரம் சினிமா துறையில் தனது 45 ஆண்டுகால நண்பரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலுக்கு மட்டும் ரஜினி அனுமதி அளித்ததை திமுக வட்டாரம் அவ்வளவாக ரசிக்கவில்லை என்கிறார்கள்.

இந்த சந்திப்பின்போது அரசியல் ரீதியாக நாங்கள் எதுவும் பேசவில்லை என்று கமல் கூறினாலும் கூட, தமிழகத்தில் வலுவான 3-வது அணி அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து இருவரும் சுமார் அரை மணி நேரம் மனம் விட்டு பேசி இருக்கிறார்கள். அப்போது, ரஜினி சில முக்கிய ஆலோசனைகளை கமலுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, திமுக – அதிமுக அணிகளில் இருந்து வெளியேறும் சிறுசிறு கட்சிகளை, கமல் கட்சி தலைமையிலான மூன்றாவது அணிக்கு கொண்டுவர வேண்டும் என்பதை ரஜினி வலியுறுத்தி கூறியிருக்கிறார். இந்த கட்சிகளுக்கும் ஆங்காங்கே ஓரளவு வாக்கு வங்கி உண்டு. எனவே அவர்களை ‘மிஸ்’ பண்ணிட வேண்டாமென்றும் ரஜினி அப்போது கூறி உள்ளார்.

சிறிய கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் நான்கு முதல் ஐந்து தொகுதிகள் வரை கொடுத்துவிட்டு மக்கள் நீதி மய்யம் குறைந்தபட்சம் 200 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என்றும் அவர் கமலிடம் வற்புறுத்தி இருக்கிறார். அதேபோல், வேட்பாளர்கள் தேர்விலும் மிகுந்த கவனம் செலுத்தும்படியும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

rajini -kamal - updatenews360

ஆன்மீக அரசியலை முன்னெடுக்காவிட்டாலும் கூட சாதி, மத பேதமற்ற, ஊழலற்ற, மதச்சார்பற்ற மற்றும் ஆட்சி மாற்றம் அவசியம் என்கிற அரசியலை முன்நிறுத்தி நீங்கள் பிரச்சாரம் செய்யுங்கள் என்றும் ரஜினி அட்வைஸ் செய்திருக்கிறார். இந்த பிரச்சார வியூகத்தின்படி செயல்பட்டால் ரஜினி மக்கள் மன்றத்தினரும் தானாகவே உங்களுடன் வந்து இணைந்து கொள்வார்கள் என்றும் கமலுக்கு நம்பிக்கை அளித்து இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

அப்போது கமல், நீங்களே நேரடியாக வாய்ஸ் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். உங்கள் ரசிகர்களும் மனதார எங்கள் பக்கம் வந்து உற்சாகத்துடன் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள் என்று வெளிப்படையாகவே தனக்கு ஆதரவு தருமாறு கேட்டு இருக்கிறார். அதற்கு ரஜினியும், சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்தத் தகவல்கள் எல்லாம் அரசல்புரசலாக திமுக தலைவர் ஸ்டாலினையும் எட்டி இருக்கிறது. அதை அவர் முழுமையாக நம்பவில்லை என்றாலும் கூட ரஜினி – கமல் சந்திப்பின்போது இதுபோன்ற விஷயங்கள் நிச்சயமாக பேசப்பட்டிருக்கலாம் என்று ஸ்டாலின் கருதுகிறார். இதுவும் கமல் மீது திமுக கொண்டிருக்கும் எரிச்சலுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

ரஜினியின் திருமணநாள் பிப்ரவரி 26 ஆகும். லதாவை அவர் கரம்பிடித்து 40 ஆண்டுகள் ஆகிறது. இந்த விசேஷ நாளை எளிமையாக கொண்டாட ரஜினி குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். அதே நாளில் நடிகர் ரஜினி செய்தியாளர்களையும் சந்தித்து பேசுகிறார். அப்போது அவர் நடிகர் கமலுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் உள்ளது.

ஏற்கனவே, தமிழருவி மணியன் தலைமையிலான காந்திய மக்கள் இயக்கத்துடன் ரஜினி மக்கள் மன்றத்தினர் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். எனவே, அவர்களின் எதிர்பார்ப்பையும் ரஜினியின் இந்த செய்தியாளர்கள் சந்திப்பு எகிற வைத்து இருக்கிறது.

நடிகர் கமல் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி 60 ஆண்டுகள் ஆனதையொட்டி, 2019 நவம்பர் மாதம் அவரை பாராட்டும் விதமாக சென்னையில் ஒரு பிரமாண்ட விழா எடுக்கப்பட்டது.

அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினி “4 மாதங்களில் எடப்பாடி பழனிசாமி அரசு கவிழ்ந்து விடும் என்றார்கள். பிறகு இன்னும் சில மாதங்களில் கவிழும் என்றனர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இதோ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் அவருடைய ஆட்சி நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதுபோன்ற அதிசயம், அற்புதம் நேற்றும் நடந்தது. இன்றும் நடக்கிறது. நாளையும் நடக்கும்” என்று 2019-ல் பரபரப்பாக பேசினார்.

அடுத்த இரண்டு மாதங்களில், கமல் கட்சியுடன் இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பு உண்டா? என்று ரஜினியிடம் கேட்கப்பட்டபோது, “அதற்கு நானும் அவரும் இணைந்து தேர்தலில் செயல்படுவோமா என்பது தெரியாது. ஆனால் 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஏற்கனவே நான் கூறிய அதிசயம், அற்புதம் நிகழும்” என்று இன்னொரு ‘பஞ்ச்’ வைத்தார்.

அதன் பிறகு உடல் நலக்குறைவு காரணமாக தேர்தல் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் கடந்த டிசம்பர் மாத இறுதியில் அவர் அறிவித்தார். ஆனாலும் அவருடைய ரசிகர்கள் ரஜினி இன்னும் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கையுடன் காத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் ரஜினி 26-ம் தேதி செய்தியாளர்களை சந்திக்க போவதாக தகவல் பரவி வருகிறது. இதனால் ரஜினி அரசியலுக்கு மீண்டும் வரப் போகிறாரா, அல்லது தனது நண்பர் கமல் நடத்தும் கட்சிக்கு ஆதரவாக ‘வாய்ஸ்’ கொடுக்கப் போகிறாரா? என்பது தெரியவில்லை.

அவர் கூறிய அதிசயம், அற்புதம் எதுவும் இந்த சந்திப்பின் மூலம் நிகழுமா? 26-தேதி ரஜினி என்ன சொல்லப் போகிறார் என்பதை கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

Views: - 3

0

0

Leave a Reply