விசிகவுடன் அணி சேர ஒவைசி கட்சி திட்டம் : திமுகவில் இருந்து வெளியேறும் கட்சிகளால் உருவாகும் புதிய அணி!!

23 November 2020, 9:28 pm
VCK - owaisi - updatenews360
Quick Share

சென்னை: பீகாரில் பாஜக அணி வெற்றிபெறக் காரணமான அசதுத்தீன் ஒவைசியின் முஸ்லிம் கட்சி தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இணைந்து முஸ்லிம்-தலித் வாக்கு வங்கியை உருவாக்கும் வகையில் கூட்டணியை உருவாக்க முனைப்பு காட்டுவதால், அதிமுக-பாஜகவுக்கு எதிரான வாக்குகள் பிரிந்து திமுக தோல்வியடையுமோ என்ற கலக்கத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகாகத்பந்தன் எனப்படும் எதிர்க்கட்சிக் கூட்டணியின் வாக்குகளைப் பிரித்து பாஜக கூட்டணி வெற்றிக்குக் காரணமான முஸ்லிம்கள் கட்சியை, இந்தியா முழுவதும் வலுப்படுத்த நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன. தமிழ்நாட்டில் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைப்படி 42.3 இலட்சம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இது மாநில மக்கள் தொகையில் 5.86 சதவீதமாகும். 2021 மக்கள் தொகை கணக்கின்படி இது 6 சதவீதத்துக்கும் மேலாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகையில் 14.65 சதவீதம், சென்னையில் 9.45 சதவீத இஸ்லாமியர்களும் முஸ்லிம்களும், வேலூரில் 10.08 சதவீத இஸ்லாமியர்களும், நீலகிரியில் 9.54 சதவீத முஸ்லிம்களும் வசிக்கின்றனர். இது தவிர ஈரோடு, விருதுநகர், கள்ளக்குறிச்சி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் 6 முதல் 9 சதவீத முஸ்லிம்களும் வசிக்கின்றனர்.

muslim womens - updatenews360

தேசிய அளவில் முஸ்லிம்களை ஒருங்கிணைக்கும் கட்சியாக விளங்கிய அகில இந்திய முஸ்லிம் லீக், காயிதே மில்லத் காலத்துக்குப் பின், வலிமை குன்றி பல இஸ்லாமியர் அமைப்புகள் தோன்றியதால், இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவை எதிர்த்து நிற்கும் வலுவான கட்சிகளுக்கும் வாக்களித்து வந்தனர். முஸ்லிம்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் கல்வி, வேலை வாய்ப்புகளுக்கும் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் பாஜகவைக் காட்டி அச்சுறுத்தியே இந்தக்கட்சிகள் முஸ்லிம் வாக்குகளை அறுவடை செய்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பாஜகவுக்குப் போட்டியாக இந்து வாக்குகளைப் பெற ராஜீவ்காந்தி எடுத்த நடவடிக்கையால் ராம ஜென்மபூமி இயக்கம் மீண்டும் புத்துயிர்பெற்றது. மத்தியில் நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது. பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த மசூதியை மீண்டும் கட்டித்தருவோம் என்று காங்கிரஸ் அளித்த வாக்குறுதியை காங்கிரஸ் நிறைவேற்றவில்லை. மீண்டும் 2004 ஆம் ஆண்டும் 2009-ஆம் ஆண்டும் ஆட்சிக்கு வந்தபோதும், உச்சநீதிமன்றத்தில் பாபர் மசூதி வழக்கை விரைவுபடுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் பெரும்பாலான பிரச்சினைகளில் பாஜகவின் இந்துத்துவா கோட்பாடுகளை வலிமையாக எதிர்க்காமல், சமரசப்போக்கையே காங்கிரஸ் கடைபிடித்தது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பிராமணர் என்றும், சிவபக்தர் என்றும் பிரச்சாரம் செய்தும், பசு பாதுகாப்பு சட்டத்தை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நிறைவேற்றியும், பாஜகவைப் போலவே காங்கிரசும் செயல்பட்டது.

COngress 09 - updatenews360

முஸ்லிம்களுக்குத் தங்களைவிட்டால் வேறு வழியில்லை என்று கருதிக்கொண்ட காங்கிரஸ் தலைவர்கள், மென்மையான இந்துத்துவாப் போக்கைக் கடைபிடித்து இந்துக்களின் ஆதரவைப்பெறவே பெரிதும் முயன்றனர். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கடைப்பிடித்த உறுதியான மதச்சார்பின்மைப் போக்கைப் பின்பற்றாமல், சமரச அணுகுமுறைக்கு மாறியது காங்கிரஸ். பாம்புக்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டி இரட்டைவேடம் போடும் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையால் முஸ்லிம்கள் கடும் ஆத்திரத்துடன் இருக்கின்றனர்.

காங்கிரசின் போக்கால் கோபத்தில் இருந்த முஸ்லிம்கள் காங்கிரசால் பாஜகவை வெல்லமுடியாது என்பதையும், கடந்த இரு நாடாளுமன்றத் தேர்தல் அனுபவங்களிலும், பல மாநில சட்டமன்றத்தேர்தல்களின் அனுபவத்திலும் கண்டனர். இந்த நிலையில்தான், முஸ்லிம்களுக்கான தேசிய அளவில் உண்மயான மாற்றை ஒரு முஸ்லிம் கட்சிதான் தரமுடியும் என்ற முழக்கத்தை முன்வைத்து அசதுத்தீன் ஒவைசியின் ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் என்ற கட்சியை அசதுத்தீன் ஒவைசி தொடங்கினார்.

Asaduddin_Owaisi_UpdateNews360

முதலில் தெலங்கானா மாநிலத்தில் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் உள்ள ஐதராபாத்தில் அவரது கட்சி வலுப்பெற்றது. தொடர்ந்து மராட்டிய மாநிலத்திலும் அந்தக்கட்சி வலிமை பெற்றது. பீகார் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் எதிர்க்கட்சி வாக்குகளை குறிப்பாக காங்கிரஸ் வாக்குகளைப் பிரித்ததால் எதிர்க்கட்சிக் கூட்டணி மயிரிழையில் வெற்றிவாய்ப்பை இழந்தது.

இதைத்தொடர்ந்து, இந்தியா முழுவதும் கட்சியை விரிவுபடுத்த ஒவைசி முடிவு செய்துள்ளார். அடுத்தகட்டமாக தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் தமக்கென்று வலிமையான கட்சி இல்லாத சூழலில் முஸ்லிம்கள் வாக்குகளைப் பெரும்பாலும் திமுகவும், காங்கிரசும் அறுவடை செய்துவருகின்றன. இதுபோல், தமிழ்நாட்டில் தலித் சமூக வாக்குகள் 20 சதவீதத்துக்கும் மேல் இருக்கின்றன. செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 20 முதல் 26 சதவீதம் வரை இருக்கின்றனர். ஆனால், தலித் வாக்குகள் அதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகளுக்குப் பிரிகின்றனர்.

DMK - Updatenews360

இஸ்லாமியர் வாக்குகள் மொத்தமாக ஒரு அணிக்கு விழும் நிலை இருப்பதால், அவை முக்கியத்துவம் பெறுகின்றன. தற்போதைய சூழலில் பாஜகவுக்கு எதிராக இருக்கும் திமுகவுக்கு விழும் வாய்ப்புகள் உள்ளது. பாஜக எதிர்ப்புப் பிரச்சாரத்தில் இந்த வாக்குகளை மொத்தமாக அள்ளலாம் என்று ஸ்டாலின் கனவில் மிதந்தபடி இருக்கிறார். ஆனால், இதில் திடீர் திருப்பமாக தமிழ்நாட்டில் காலடி பதிக்கும் ஒவைசி கட்சி விடுதலைச் சிறுத்தைகளுடன் கூட்டணி அமைத்து தனி அணி அமைக்கத் திட்டமிட்டு வருகிறது.

ஒவைசியைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் அவர் மக்களை சந்தித்து பெருமளவு பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவையில்லை. மாநிலத்தில் இருக்கும் இஸ்லாம் மதத்தலைவர்களையும் ,அமைப்புகளையும் ஒருங்கிணைத்தாலே போதுமானது.

மறுபுறம், திமுக கூட்டணியில் பாமகவை இணைக்க கட்சியின் மூத்த தலைவரான பொதுச்செயலாளர் க. துரைமுருகன் முயற்சி செய்து வருகிறார். இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதவிர கடைசி நேரத்தில் திருமாவளவனைக் கழற்றிவிடும் நோக்கத்துடன் பல வன்னியர் அமைப்புகளைக் கூட்டணியில் சேர்ப்பதாக சிறுத்தைகள் உள்ளுக்குள் உறுமிவருகின்றனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சில ரிசர்வ் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும், திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் சிறுத்தைகள் நிற்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று திருமாவளவன் முன்பே தெரிவித்துவிட்டார். கடைசி நேரத்தில் விடுதலைச்சிறுத்தைகள் விடாப்பிடியாக இருந்தால் அந்தக்கட்சி கூட்டணியில் இருந்து கழற்றிவிடப்படும் என்று சிறுத்தைகளும் கருதுகின்றனர். இதனால், திமுக கூட்டணியில் உரசல்கள் அதிகரித்துவருகின்றன. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது வெளிப்படையாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி, தலித்-முஸ்லிம் வாக்குகளை இணைத்து பெரும்பாலான வாக்குகளை பெற்று ஒருமுறை ஆட்சிக்கு வந்துள்ளார். இன்றும் அந்த வாக்குகளைத் தொடர்ந்து வாங்குவதால் முக்கிய கட்சியாகவே விளங்குகிறது. இதுபோன்ற அணிச்சேர்க்கையை ஏற்படுத்த விடுதலைச்சிறுத்தைகள் ஒவைசி கட்சியுடன் இணையத் தயாராகவே இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணி பிரிக்கும் வாக்குகள் திமுகவுக்கு ஆப்பாகவே இருக்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

Views: - 12

0

0