திரைமறைவில் தொடர் பேச்சு : பாமகவை இழுக்க தீவிரம் காட்டும் திமுக!!

16 January 2021, 6:18 pm
DMK - pmk cover - updatenews360
Quick Share

தமிழக அரசியல் களத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்று நிச்சயமாக பாமகவை சொல்லாம். 1989-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மூலம் தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கிய பாமகவுக்கு அந்த தேர்தலில் வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. எனினும் வட மாவட்டங்களில் அது கணிசமான ஓட்டுகளை பெற்றது.

அதன் பிறகு 1991 சட்டசபை சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தனித்து களம் கண்டு ஓரிடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. 1996-ல் அதிமுகவுக்கு இணையாக 4 தொகுதிகளை கைப்பற்றி ஆச்சர்யப்படுத்தியது. அதன் வாக்கு விகிதம் எப்போதும் 6 சதவீதத்தை நெருங்கியே காணப்படுகிறது.

இந்த நிலையான வாக்கு விகிதம் தான் அக்கட்சியின் மிகப்பெரிய பலம். இதனால் எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும், அதன் பேரம் பேசும் திறன் ஒருபோதும் குறைந்ததில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் குறைந்த பட்சம் 30 தொகுதிகளை பேரம் பேசி வாங்கிவிடும். நாடாளுமன்ற மக்களவை தேர்தலிலும் 5, 6 சீட்டுகளை எப்படியும் பெற்றுவிடும்.

2016 சட்டப் பேரவை தேர்தலில் தனது மகன் டாக்டர் அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக அறிவித்து 234 தொகுதிகளிலும் தனித்து பாமகவை போட்டியிட வைத்தார், அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

இந்தத் தேர்தல் பாமகவுக்கு பெருத்த அடியை கொடுத்தது. செல்வாக்கு மிகுந்த வடமாவட்டங்களில் கூட பாமகவால் ஒரு தொகுதியையும் கைப்பற்ற முடியாமல் போனது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அப்போதும்கூட அதன் ஓட்டு சதவீதம் 5க்கு கீழே குறையவில்லை. 5.36 சதவீத ஓட்டுக்களை பாமக பெற்றது.

pmk - admk - updatenews360

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 7 இடங்களில் போட்டியிட்ட பாமகவால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலவில்லை. அப்போதும் பாமகவின் ஓட்டு வங்கி நிலையாகத்தான் இருந்தது.

தற்போது அதிமுக கூட்டணியில் பாமக இருந்தாலும் கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கண்டிப்பாக வேண்டும் என்று கேட்டு அதிமுகவுக்கு அது கடும் நெருக்கடி அளித்து வருகிறது. அதனால் தான் அதிமுக கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை என்பது வெளிப்படை. இந்த இழுபறி நிலையில் இன்னொரு பின்னணியும் இருக்கிறது என்கின்றனர். பாமகவை எப்படியும் தனது அணிக்குள் கொண்டுவந்துவிடவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரும்புகிறாராம்.

வருகிற சட்டப்பேரவை தேர்தல் திமுகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதையும் அவர் அறிந்தே வைத்திருக்கிறார்.
தற்போதுள்ள கூட்டணி கட்சிகளை வைத்து அதிமுகவுடன் ஓரளவுக்கு சமமான போட்டியைத்தான் திமுக அணியால் தரமுடியும் என்றும் ஸ்டாலின் கருதுவதாக கூறப்படுகிறது. ஆகவே வலுவான கூட்டணி மிக அவசியம் என்பதை அவர் உணர்ந்தும் இருக்கிறார். இதனால்தான் தற்போது பாமகவை கூட்டணியில் இழுத்து போடுவதற்கு திமுக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

duraimurugan - stalin1 - updatenews360

இதற்காக திமுகவின் மூத்த தலைவர் ஒருவரும், எம்.பி. ஒருவரும் டாக்டர் ராமதாசிடம் தொடர்ந்து திரைமறைவு பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலை இப்போதுள்ள அணிகளை வைத்து சந்தித்தால் 2016 தேர்தலை விட குறைவான இடங்களில்தான் திமுக அணி வெற்றி பெறும் என்ற கருத்தும் அரசியல் நோக்கர்கள் மத்தியில் நிலவுகிறது.

தற்போது உள்ள கூட்டணி கணக்கின்படி பார்த்தால் திமுக அணியால் 80 முதல் 90 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதனால்தான் 2006-ல் தனது தந்தை கருணாநிதி அமைத்தது போன்ற வலுவான கூட்டணியை அமைக்க ஸ்டாலின் விரும்புகிறார் என்று அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.

பாமகவை திமுக கூட்டணியில் இணைத்துவிட்டால் 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை எளிதாக அடைந்துவிட முடியும் என்பது ஸ்டாலினின் அசைக்க முடியாத நம்பிக்கை.

dayanidhi-maran - updatenews360

அண்மையில் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறன் கூறும்போது, பாமகவுடன் கூட்டணி பேச்சு நடத்த தடையாக இருப்பது அவர்கள் பணம் கேட்பதுதான். எங்களிடம் பணம் கிடையாது. கொள்கை தான் இருக்கிறது என்று அவர் பாமகவை கடுமையாக கலாய்த்து இருந்தார். இதனால் திமுக கூட்டணியில் பாமக வர வாய்ப்பே இல்லை என்றுதான் கருதப்பட்டது.

ஆனால் பாமகவை நமது கூட்டணிக்குள் கொண்டு வருவது உங்கள் பொறுப்பு என பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அந்த இரு தலைவர்களிடமும் ஸ்டாலின் கறாராக கூறிவிட்டாராம். மேலும் தயாநிதி மாறனின் கருத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், ராமதாசிடம் இந்த தலைவர்கள் கூறும்படி ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இதனால் வன்னியர் வகுப்பைச் சேர்ந்த அந்த இரு தலைவர்களும் வாரத்தில் இருமுறை தைலாபுரம் தோட்டத்தில் ரகசியமாக டாக்டர் ராமதாசை சந்தித்து பேசுவதாக தகவல்கள் கசிந்துள்ளன. அப்போது டாக்டர் ராமதாஸ் இரு முக்கிய நிபந்தனைகளை போட்டு இருக்கிறார். பாமகவுக்கு 30 தொகுதிகள் தர வேண்டும். அதுவும் அந்த தொகுதிகள் வட மாவட்டங்களிலேயே இருக்கவேண்டும் என்பது அவருடைய முதல் நிபந்தனை.

இரண்டாவது நிபந்தனை என்ன என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் பாமக இருக்குமிடத்தில் விசிக இருக்காது. விசிக இருக்குமிடத்தில் பாமக ஒருபோதும் இருக்காது என்பது தெரிந்த விஷயம் தான். திமுக கூட்டணியில் விசிக 10 தொகுதிகளை எதிர்பார்க்கிறது. ஆனால் ஸ்டாலின் 6 தொகுதிகள் மட்டுமே தருவதாக வாக்குறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தங்களின் தன்மானம் காக்க தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று திருமாவளவன் முரண்டு பிடிப்பதும் ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. இதனால் பாமகவை திமுக கூட்டணியில் கொண்டு வந்துவிட்டால், விசிகவை வெளியேற்றிவிடலாம் என்பதும் அவரின் கணக்கு என்கிறார்கள்.

அதாவது ஸ்டாலின் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிப்பது. திருமாவளவன் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் எதையாவது பேசி திமுகவுக்கு சிக்கலை உண்டு பண்ணி விடுகிறார். அதனால் விசிகவை வெளியேற்றுவதில் திமுக குறியாக இருக்கிறது என்கின்றனர்.

திமுக அணியில் இருந்து விசிக வெளியேற்றப்பட்டால் கூடவே மதிமுகவும் கழற்றி விடப்படும் என்பதையும் யூகிக்கலாம்.

அதேநேரம் பாமக கேட்கும் அளவிற்கு 30 தொகுதிகளை திமுக ஒதுக்காது என்றே தெரிகிறது. அதிகபட்சம் 25 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதிலும் 15 தொகுதிகள் மட்டுமே வடமாவட்டங்களில் கிடைக்கும். கூட்டணி வலுவாக இருப்பதால் மற்ற 10 தொகுதிகளை பிற மாவட்டங்களில் ஒதுக்கி வெற்றி பெற்றுவிடலாம் என்று தைரியம் அளிக்கிறதாம் திமுக தரப்பு.

இன்னொரு புறம், டெல்லி பாஜக மேலிடம் திமுக கூட்டணிக்கு பாமக சென்றுவிடாமல் தடுப்பதில் வேகம் காட்டி வருகிறது.
அதிமுக கூட்டணியில் பாமக இருந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என்று பாஜக உறுதியாக நம்புகிறது. அதனால்தான், திமுகவை வர விடக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ள பாஜக, பாமகவை அணி தாவி விடாமல் தொடர்ந்து தடுத்தும் வருகிறது என்கின்றனர்.

திமுக அணியில், பாமகவுக்கு 25, காங்கிரசுக்கு 23, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சேர்த்து 6, முஸ்லிம் லீக் உள்ளிட்ட சிறு கட்சிகளுக்கு 6 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டு மீதமுள்ள 174 தொகுதிகளில் திமுக போட்டியிட விரும்புகிறது. இந்த வலுவான கூட்டணி மூலம் 200 முதல் 210 தொகுதிகள் வரை அபார வெற்றி காண முடியும் என்று திமுக கணக்கு போடுகிறது.

இதில் தங்களுக்கு மட்டும் 150 முதல் 160 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும் என்று திமுக உறுதியாக நம்புகிறது. எது எப்படி இருந்தாலும் கூட்டணிகள் அமைந்த பிறகுதான் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பதை ஓரளவு கணிக்க முடியும். அதுவரை யாரும் எப்படி வேண்டுமானாலும் கணக்குப் போட்டுக் கொள்ளலாம். நமக்குத்தான் வெற்றி கிடைக்கும் என்றும் நம்பலாம்.
அதுதானே அரசியல் சுவாரசியம்!

Views: - 0

0

0