2024 தேர்தலில் யாருடன் கூட்டணி… சீட் பேரத்திற்காக அதிமுகவை பாஜக மிரட்டுகிறதா…?

Author: Babu Lakshmanan
29 March 2023, 6:20 pm
Quick Share

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற கூற்று உண்மைதான் என்பதை ஊர்ஜிதப்படுத்தும் விதத்தில் அவ்வப்போது சில நிகழ்வுகள் நடப்பதும் உண்டு.

இபிஎஸ்

அதில் ஒன்றுதான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த அத்தனை கட்சிகளும் ஒரே நேரத்தில் வாழ்த்து தெரிவித்திருப்பது.

சென்னை ஐகோர்ட்டின் தனி நீதிபதி குமரேஷ் பாபு, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடுவதற்கு விதித்திருந்த தடையை நீக்கிய சிறிது நேரத்திலேயே அக்கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது பற்றிய அறிவிப்பை தலைமை கழகம் அதிகாரப் பூர்வமாக அறிவித்தது.

EPS - Updatenews360

வாழ்த்து

அடுத்த ஒரு சில மணி நேரங்களில் மத்திய அமைச்சர் எல் முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என் ஆர் தனபாலன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்து தங்களது மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.

இப்படி அத்தனை தலைவர்களும் ஒரே நேரத்தில் இபிஎஸ்க்கு வாழ்த்து தெரிவிப்பார்கள் என்பது யாருமே எதிர்பாரக்காத ஒன்று.

ஏனென்றால் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்த பிறகு இவர்களில் ஜி கே வாசன், பூவை ஜெகன் மூர்த்தி, என் ஆர் தனபாலன் தவிர மற்ற தலைவர்கள் யாரும் இபிஎஸ்க்கு வெளிப்படையாக தங்கள் ஆதரவை தெரிவிக்கவில்லை. மதில் மேல் பூனையாகத்தான் இருந்தனர். ஆனால் இப்போதோ நிலைமை தலை கீழாக மாறிவிட்டது.

EPS Happy - Updatenews360

இதற்கான காரணம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இனி ஓபிஎஸ் என்னதான் தொடர் சட்டப் போராட்டம் நடத்தினாலும் அது வழுக்குப் பாறையில் ஏறிய கதையாகவே இருக்கும். ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் இபிஎஸ் பக்கமே திரண்டு இருக்கின்றனர் என்பதை இக் கட்சிகளின் தலைவர்கள் நன்றாகவே புரிந்துகொண்டு விட்டனர்.

அதுவும் அதிமுகவை பொறுத்தவரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச் செயலாளர். அவரிடம் இருந்து அதை பறிப்பது கட்சிக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் என்று கோர்ட்டில் கடந்த பத்து மாதங்களாக வாதாடி வந்த ஓபிஎஸ் கடைசியில் நிபந்தனைகளை தளர்த்தினால் நானும் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என்று அதே கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்தது, அவருடைய சுயநலதையும், பதவி வெறியையும் காட்டுகிறது என்ற
கடுமையான விமர்சனத்தை வைக்க காரணமாகி விட்டது. இது ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்களையும் கூட மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது என்பதும் உண்மை.

பதவி விலகுவேன்

அதேநேரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்ததுதான் தமிழக அரசியலில் மிகுந்த வியப்புடன் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பாஜகவின் அரசியல் சாணக்கியர் என்று வர்ணிக்கப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடந்த வாரம் டெல்லியில் சந்தித்து விட்டு அண்ணாமலை தமிழகம் திரும்பிய பின்பு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிடும் என்பதை மறைமுகமாக உணர்த்தும் வகையில் கூண்டுக்கிளியாய் இருந்தது போதும், கூண்டை உடைத்துக் கொண்டு பறக்க தயாராகுங்கள் என்று அதிரடியாக கருத்து தெரிவித்து இருந்தார்.

Annamalai - Updatenews360

அதற்கு முன்பாக சென்னையில் நடந்த பாஜக நிர்வாக குழு ஆலோசனைக் கூட்டத்தில்,”திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் எனது பதவியை ராஜினாமா செய்வேன்” என்று அண்ணாமலை பேசியதாக கூறப்பட்ட நிலையில் அமித்ஷாவை சந்தித்த பின்னர் அவர் தனது கருத்தில் இன்னும் உறுதியாக இருந்தததால் ஒருவேளை டெல்லி தலைமையும் அதிமுக கூட்டணியை விரும்பவில்லையோ? என்ற சந்தேகத்தை கிளப்பிவிட்டது.

இன்னொரு பக்கம் மத்திய அமைச்சர் எல் முருகன், பாஜக எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் போன்றோர் அதிமுக தலைமையுடன் எங்களுக்கு சுமுகமான உறவு உள்ளது. இந்தக் கூட்டணி தொடரும் என்று கூறி வருகிறார்கள்.

இது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி உண்டா? இல்லையா?… என்பது குறித்து டெல்லி பாஜக மேலிடம் இன்னும் உறுதி செய்யவில்லையோ என்ற கேள்வியும் எழுகிறது.

மிரட்டலா..?

ஆனால் அரசியல் விமர்சகர்களோ “2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிடம் அதிகமான தொகுதிகளை பேரம் பேசுவதற்காக இது போன்ற மிரட்டல் நாடகத்தை கடந்த இரண்டு வாரங்களாக பாஜக நடத்தி வருகிறது” என்று கூறுகிறார்கள்.

“டெல்லியில் பாஜக தலைவர்கள் ஜேபி நட்டா, அமித்ஷா இருவரிடமும் 2014 ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் அமைந்த கூட்டணி
18 சதவீத ஓட்டுகளை பெற்று இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றியது.

அப்போது இருந்ததை விட தமிழகத்தில் பாஜக இப்போது மிகவும் வலுவாக உள்ளது. நாம் தனித்து கூட்டணி அமைதால் 20 முதல் 25 சதவீத ஓட்டுகளை பெற்று 10 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி கண்டு விடவும் முடியும். நமது கூட்டணிக்குள் எப்படியும் பாமக, தமாக, தேமுதிக கட்சிகளை கொண்டு வந்து விடலாம். அவர்களோடு டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் அணி மற்றும் சிறு சிறு கட்சிகளை சேர்த்து மெகா கூட்டணி அமைத்து இதை சாதிக்க முடியும் என்று அண்ணாமலை டெல்லி தலைமையிடம் நம்பிக்கை தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் 2014 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. மேலும் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் என ஐந்து முனை போட்டி நிலவியது. அப்போது பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முதன்முதலாக மோடி களம் இறங்கினார். ஏற்கனவே பத்தாண்டு காலம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியால் மக்கள் அதிருப்தி அடைந்திருந்ததால் அதன் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலித்தது.

அதற்கு முக்கிய காரணம் 2009 மே மாதம் 18ம் தேதி இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் அந்நாட்டு ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் நடந்த உச்சகட்ட போரில் அப்பாவி தமிழர்கள் 40 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டதும், இந்தப் போரை நடத்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு இலங்கை ராணுவத்துக்கு நவீன ஆயுதங்களை வழங்கியதும் தெரிய வந்ததால் அது 2014 தேர்தலில் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இது காங்கிரசுக்கு மட்டுமின்றி கடைசி நேரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகி தனித்துப் போட்டியிட்ட திமுகவுக்கும் பலத்த அடியை கொடுத்தது. அப்போது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 37 இடங்களில் வென்றது.
திமுகவுக்கும், காங்கிரசுக்கும் ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் 2019 தேர்தல் முதல் திமுக கூட்டணியில் காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் இடம் பெற்று வருகின்றன. தற்போது தமிழகத்தில் திமுக ஆளும் கட்சியாக வேறு உள்ளது. அந்த கூட்டணியில்13 கட்சிகள் உள்ளன. அதனால் 2024 தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவுடன் கூட்டணி அமைக்காமல் தனி கூட்டணியை உருவாக்கி போட்டியிட்டால் அண்ணாமலையின் கணக்கு பொய்த்துப் போகவே வாய்ப்புகள் அதிகம் என்பதை டெல்லி பாஜக மேலிடம் நன்றாகவே உணர்ந்துள்ளது.

அதேநேரம் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா மூவருக்கும் தென் மாவட்டங்கள் சிலவற்றில் அமோக ஆதரவு இருப்பதாக கூறப்படுவதை டெல்லி பாஜக தலைமை நம்ப மறுக்கிறது. மேலும் அவர்களுடன் கூட்டணி அமைத்தால் பாமக, தேமுதிக இரண்டையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது பாஜகவுக்கு மிகப்பெரிய சவால் ஆகிவிடும்.

அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு அவருடைய அதிரடி அரசியல் நடவடிக்கைகளால் முதல் முறை மற்றும் இளம் வாக்காளர்களிடம் ஆதரவு பெருகி இருப்பது உண்மைதான். மோடியின் தனிநபர் செல்வாக்கும் உள்ளது.
அதனால் வழக்கமாக பாஜகவுக்கு கிடைக்கும் 3 சதவீத ஓட்டுகளுடன், இவற்றையும் சேர்த்தால் அதிக பட்சமாக 8 அல்லது 9 சதவீத வாக்குகள்தான் பாஜகவுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. டிடிவி தினகரன், சசிகலா ஓபிஎஸ் மூவரையும் சேர்த்துக் கொண்டால் அதிகபட்சமாக 4 சதவீத ஓட்டுகள் கிடைக்கலாம்.

ஏனென்றால் மூவருமே ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்களின் வாக்குகளைத்தான் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். அதனால் இவர்களுக்கென்று தனிப்பட்ட முறையில் அந்த சமூகத்தினரின் வாக்குகள் முழுமையாக கிடைக்க வாய்ப்பே இல்லை. மேலும் அந்த சமூகத்தினர் பரவலாக எல்லா கட்சிகளிலுமே உள்ளனர்.

அதனால்தான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் 9 முதல் 12 தொகுதிகளை பெறுவதற்காக ஆதரவு, எதிர்ப்பு என்ற மிரட்டல் நாடகத்தை பாஜகவின் டெல்லி தலைமை கையில் எடுத்திருப்பது நன்றாகவே தெரிகிறது” என்று
அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Views: - 89

0

0