2024-ல் யாருக்கு ஆதரவு…? சீமான் சரவெடியால் சலசலப்பு…!

Author: Babu Lakshmanan
1 November 2021, 8:07 pm
Seeman - updatenews360
Quick Share

தமிழக அரசியலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அடுத்து, அதிரடியாகவும், ஆவேசமாகவும் பேசக்கூடியவர் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமானை சொல்வார்கள்.

சந்திப்பு

அதனால்தான் என்னவோ வைகோ கட்சி தொடங்கி தனிப்பட்ட முறையில் நிகழ்த்த முடியாத சாதனையை 10 ஆண்டுகளில் சீமான் செய்து காட்டிவிட்டார். படிப்படியாக வளர்ந்துள்ள சீமானின் நாம் தமிழர் கட்சி 7 சதவீத வாக்குகளை சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்றுள்ளது.

தேர்தலுக்கு பின்பு, ஒரு முறை இயக்குனர் பாரதிராஜாவுடன் சென்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சீமான் சந்தித்து பேசினார்.

Seeman Stalin - Updatenews360

ஸ்டாலினை அவர் சந்திக்கப் போகிறார் என்ற தகவல் வெளியான உடனேயே, பிரபல செய்தி சேனல்களில் ‘திமுக கூட்டணியில் நாம் தமிழர் கட்சி இணைகிறது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் திமுக அணியில் போட்டியிடும்’ என்றெல்லாம் பிரேக்கிங் நியூஸ் வெளியானது.

“ஆனால் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. எனது தந்தையின் மறைவின்போது ஸ்டாலின் இரங்கல் அறிக்கை வெளியிட்டதுடன் போன் மூலமும் எனக்கு ஆறுதல் கூறியிருந்தார். அதற்கு நன்றி தெரிவிக்கவும், 7 பேர் விடுதலை தொடர்பாக வலியுறுத்தவும் நேரில் வந்தேன்” என்று விளக்கம் அளித்தார்.

அட்டாக் ஆரம்பம்

பின்பு, வழக்கம்போல் சீமான் திமுகவை கடுமையாக தாக்கி பேசி வந்தார். அவருக்கு வலது கரம் போல திகழ்ந்த பிரபல யூ டியூபர் சாட்டை துரைமுருகனும் சீமான் பாணியில் திமுகவை கேலி பேசி, ஒரு மிரட்டல் வழக்கிலும் சிக்கிக்கொண்டார். 2-வது முறையாக அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். சாட்டை துரைமுருகன் திமுக தலைவர்களை மிகக் கடுமையாக தாக்கி பேசியது அவருக்கு வினையாய் முடிந்தது.

இதன்பிறகுதான் திமுகவின் மீதான சீமானின் அட்டாக் மேலும் வன்மையாக மாறியது.

கடந்த வாரம் ஆளுநர் ரவி மாநில தலைமைச் செயலாளர் இறையன்புவிடம் தமிழகத்தில் நடைபெற்று வரும் மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களின் அமலாக்கம் குறித்து அறிக்கை கேட்டது தொடர்பாக சீமான் பேசும்போது, மத்திய பாஜக அரசிடம் திமுக சரணடைந்து விட்டது என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.

“முந்தைய அதிமுக ஆட்சியில் பன்வாரிலால் புரோகித் ஆளுநராக இருந்தபோது ஊர் ஊராக சென்று ஆய்வு நடத்தியதை திமுக கடுமையாக எதிர்த்தது. அவர் ஆய்வுக்கு சென்ற இடங்களிலெல்லாம் கருப்புக் கொடியும் காட்டியது. சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

தற்போது தமிழகத்தின் அனைத்துத் துறைச்செயலாளர்களும் திட்டங்களின் அமலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்களை தமிழக ஆளுநருக்குத் தெரிவிக்க வேண்டுமென தலைமைச் செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை விடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மத்திய பாஜக அரசின் முகவராகச் செயல்படும் ஆளுநரின் அத்துமீறலுக்கு வழிவகுத்திடும் திமுக அரசின் இச்செயல் மிகத்தவறான முன்னுதாரணமாகும்.

தங்களது ஆட்சியில் ஆளுநரின் எதேச்சதிகாரப்போக்கை எதிர்க்கவே துணிவற்று, முழுமையாகப் பணிந்து போவது மாநிலத் தன்னுரிமையைக் காவுகொடுக்கும் உரிமையிழப்பாகும். பாஜகவின் அடாவடித்தனத்தை எதிர்த்துச் சண்டையிடாது சமரசமடைந்த திமுகவின் அணுகுமுறை வெட்கக்கேடானது” என்று கொந்தளித்து இருந்தார்.

திமுகவுக்கு ஆதரவு

சீமான் இப்படி விமர்சனம் செய்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள், தான் சொன்ன கருத்துக்கு நேர்மாறாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரிப்பேன். அப்போது நாங்கள் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று தீபாவளி நேரத்தில் தமிழக அரசியலில் ஒரு சரவெடியை கொளுத்திப் போட்டிருக்கிறார்.

CM stalin Order - Updatenews360

ஒரு வார இதழுக்கு சீமான் அளித்த பேட்டியில் “திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து 3-வது அணி அமைத்தால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது. திமுகவுக்கு ஆதரவு கொடுப்போம். 2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களத்தை நாங்களே பார்த்துக் கொள்வோம்” என்று கூறியிருக்கிறார்.

மேலும், “தனிப்பட்ட முறையில் அரசியல் தலைவர்களை இழிவாக பேசுவதை நான் வரவேற்கவில்லை. அப்படி நானே பேசியிருந்தாலும், அது தவறுதான், சில நேரங்களில் கோபத்தில் அப்படி பேசிவிடுகிறேன்” என்றும் தெரிவித்து இருக்கிறார்.

சிறப்பு போலீசா?

சீமான் இப்படி அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருப்பது பற்றி பலர் சமூக வலைத்தளங்களில் நச்சென்று ‘பஞ்ச்’ கமெண்ட்களையும் தெறிக்கவிட்டுள்ளனர்.
அவற்றில் சில:

“தம்பி சாட்டை துரைமுருகன் திமுகவை எதிர்த்து அண்ணன் சீமானுக்காக ஜெயிலுக்கு போனீங்களே…இப்ப என்னாச்சு…

அண்ணே! வீரத்தமிழச்சி சசிகலா ஆசியுடன் 2026 தேர்தலை சந்தியுங்க. 234 தொகுதிகளையும் கைப்பத்திடலாம்.

எவ்வளவு அழகா அடிச்சு விடுறாரு பாருங்க ஆனாலும் ரொம்ப நல்லா இருக்கு.

அரசியல்ல சீமான் சிரிப்பு போலீசா?… சிறப்பு போலீசா?.. வேடிக்கையா இருக்கு!”

காங்., அதிர்ச்சி

சீமானின் இந்த பேட்டி யாரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறதோ, தமிழக காங்கிரஸ் தலைமையின் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டுள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் சீமான் சொல்வதை கூர்ந்து கவனித்தால் பல விஷயங்கள் புலப்படும். அவர் மூன்றாவது அணி என்கிறார்.

Nellai KS Alagiri Byte - updatenews360

அப்படியெனில், அதில் காங்கிரஸ் இல்லை என்று உறுதியாகிறது. ஏனென்றால் இப்போது வரை காங்கிரஸ் தலைமையிலான அணிதான் இரண்டாவது அணியாக உள்ளது. அதனால் காங்கிரஸ் இல்லாத கூட்டணிக்கே எனது ஆதரவு என்பதை சீமான் மறைமுகமாகச் சொல்கிறார். இதில் இன்னொரு விஷயமும் உள்ளது. மூன்றாவது அணி திமுக அல்லது திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில்தான் உருவாகவேண்டும் என்கிற சிந்தனையும் அவரிடம் தெரிகிறது.

2024-ல் தமிழகத்தைப் பொறுத்தவரை, திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறாமல் போனால், திமுக மட்டுமே 36 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு உள்ளது. விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம்.
திமுக கூட்டணியிலிருந்து வைகோ கட்சி நாடாளுமன்ற தேர்தலில் ஓரம் கட்டப்படலாம்.

2024-ல் பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அல்லது மம்தா பானர்ஜி அறிவிக்கப்படலாம் என்றும் சீமான் கருதுகிறார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அண்மையில், “பாஜகவை எதிர்ப்பதற்கு ராகுல்காந்திக்கு வலிமை இல்லை. அவரால்தான் பாஜக பலமான கட்சியாக மாறியது” என்று குற்றம்சாட்டிய நிலையில் 3-வது அணிக்கு மம்தா தலைமை ஏற்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

பார்ப்போம்

மேலும் இதுவரை அரசியல் ரீதியாக ஸ்டாலினை கிண்டல் செய்யும் விதமாகவும் அவர் மனதை புண்படுத்துவது போலவும் சீமான் பலமுறை பேசியிருக்கிறார்.

அப்படி நான் பேசி இருந்தால் அது தவறுதான் என்றும் சில நேரங்களில் கோபத்தில் அப்படி பேசி விடுகிறேன் என்றும் சீமான் மன்னிப்பு கேட்பது போல சொல்கிறார். நான் அப்படி பேசியது தவறுதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதுபோல் இது உள்ளது. இதிலிருந்தே அவர் திமுகவை நோக்கி சாய்கிறார் என்பது தெரிகிறது. பாஜகவின் B டீம் என்று சீமானை பலரும் கிண்டலடித்தனர். அவர்களின் முகத்தில் சீமான் கரியை கூறியிருக்கிறார், என்றே தோன்றுகிறது” என்று அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

சீமான் சொல்வது போல 2024-ல் நடக்குமா?… பொறுத்திருந்து பார்ப்போம்!

Views: - 394

0

0