திமுகவின் ஜெகத்ரட்சகனை தொடர்ந்து கனிமொழி, ஆ.ராசாவிற்கும் சிக்கல்..! 2ஜி வழக்கு அக்.,5 முதல் மீண்டும் விசாரணை..!
29 September 2020, 4:48 pmடெல்லி : தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா ஆகியோருக்கு எதிரான 2ஜி வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, தனியார் தொலை தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு, ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான உரிமம் வழங்கியதில் நடந்த முறைகேட்டினால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த தி.மு.க.வின் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 17 பேரை விடுதலை செய்து கடந்த 2017ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டன.
இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர், இது பொதுநலன் சார்ந்த வழக்கு என்பதால் உடனடியாக விசாரணை தேவை எனக் கூறினார். மேலும், கொரோனா காலத்தில் உள்ள விதிகளை கடைபிடித்தே இந்த வழக்கின் விசாரணையை நடத்த வேண்டும் என்று எதிர்தரப்பில் வாதாடப்பட்டது.
இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்றும் நடைபெற்றது. அப்போது, 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க ஒப்புக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் தொடர் விசாரணை நடைபெறும் தெரிவித்துள்ளது. இது தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோருக்கு மீண்டும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், ஏற்கனவே தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியுள்ளார். தற்போது மேலும் இரு எம்.பி.க்கள் வழக்கில் சிக்கியிருப்பது, தேர்தலில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா…? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.