2021 தேர்தல் நேரத்தில் திமுக மீது பாயத்தயாராகும் ஏவுகணை : கனிமொழிக்கு எதிரான 2ஜி வழக்கைத் தட்டியெழுப்பும் சிபிஐ!!

22 September 2020, 4:45 pm
2g case - updatenews360
Quick Share

சென்னை: மத்திய பாஜக அரசுக்கு எதிராக திமுக தொடர்ந்து அரசியல் செய்து வரும் நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கு எட்டு மாதங்கள் இருக்கும் சூழலில், திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசாவுக்கு எதிராக பரபரப்பாகப் பேசப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் மேல்முறையீடு வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்தபோது, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், கடந்த 2008-ல் 2ஜி அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில், ஏல நடைமுறைகளைப் பின்பற்றாததால், அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக, மத்திய கணக்குத் தணிக்கைத்துறை தெரிவித்தது.

நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. கடந்த 2009-ம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. புகாரைத் தொடர்ந்து ஆ.ராசா, மத்திய அமைச்சர் பதவியிலிருந்து கடந்த 2010-ல் விலகினார். இந்த வழக்கை விசாரிப்பதற்காக சி.பி.ஐ. தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் 2ஜி ஊழல் வழக்கு பரபரப்பாகப் பேசப்பட்டது. மக்கள் மத்தியில் திமுக மீதி கடும் மக்களின் கடும் கோபத்தை ஏற்படுத்தி அக்கட்சி படுதோல்வி அடைவதற்கு 2ஜி ஊழல் வழக்கு முக்கிய காரணமாக இருந்தது. இவ்வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி ஆகியோர் மீதி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு எட்டு மாதங்களே இருக்கும் சூழலில் அந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு சிபிஐ தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2g case 1 - updatenews360

இந்த வழக்கை விரைந்து விசாரிப்பதற்கு கனிமொழியும் ஆ.ராசாவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கொரோனாத் தொற்றைக் காரணம் காட்டி இந்த வழக்கின் விசாரணையைத் தள்ளிப்போட வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர். வழக்கை மீண்டும் விரைந்து விசாரணைக்குக் கொண்டுவர சிபிஐ வலுவான வாதங்களை முன்வைத்துள்ளது. மீண்டும் 2ஜி வழக்கின் விசாரணைக்கு வந்தால் அது 2021 சட்டமன்றத் தேர்தலின்போது சூடிபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலின்போது வழக்கின் வாதங்களும் அதைப்பற்றிய செய்திகளும் பிரச்சாரத்தில் எதிரொலிக்கும்போது திமுகவுக்கு மிகவும் சிக்கலான சூழலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஏற்பட்ட பாதிப்பைப் போல மக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான அலை வீச வாய்ப்பு உருவாகும் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே, திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் குடும்பத்துக்கு சொந்தமான 89 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அதைத் தொடர்ந்து ஜெகத்ரட்சகன் எது குறித்தும் வாய் திறக்காமல் இருக்கிறார். கனிமொழியும் பாஜகவுக்கும் எதிராகவும் இந்திக்கு எதிராகவும் கடுமையான பிரச்சினைகளை எழுப்பிவரும் நிலையில் அவர்களுக்கு இந்த வழக்கு சிக்கலை ஏற்படுத்தும், பெரும்பாலான நேரத்தை வழக்குக்கான தயாரிப்புகளிலும் விசாரணையிலும் அவர்கள் கழிக்கும் நிலை ஏற்படும், ஒவ்வொரு முறையும் அவர்கள் வழக்கில் ஆஜராவது பெரிய அளவில் பரபரப்பான செய்தியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கும் அவரது குடும்பத்துக்கும் சொந்தமான ரூ. 89 கோடி மதிப்பினாலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது ஏற்கெனவே திமுக முக்கிய புள்ளிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. தேர்தல் நேரத்தில் கட்சியின் செலவுகளை கவனித்துக் கொள்ளும் ஜெகத்தை அமலாக்கத்துறை வளைத்திருப்பது தேர்தல் நேரத்தில் நிதிப் பற்றாக்குறையை ஏற்படுத்தி விடுமோ என்ற கலக்கத்தையும் கட்சியினர் மத்தியில் உருவாக்கியுள்ளது.

anna arivalayam- updatenews360

ஜெகத்ரட்சகன், கனிமொழி, ஆ.ராசாவுக்கு அடுத்தபடியாக மத்திய அரசின் பிடி, யார் மீது எப்போது இறுகும் என்ற அச்சம் ஏனைய திமுக தலைவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு எட்டு மாதங்களே இருக்கும் நிலையில், பாஜகவை எதிர்த்து வலுவாகக் குரல் எழுப்புவதில் திமுக தலைவர்களியே அச்சம் ஏற்படுமா என்ற திகைப்பும் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

Views: - 7

0

0