விவசாயிகளை கண்டுகொள்ளாத திமுக அரசு… 30 ஆயிரம் நெல் மூட்டைகள் அவுட்!!

12 July 2021, 10:03 pm
stalin - paddy - updatenews360
Quick Share

மழைக்காலம், எப்போதுமே விவசாயிகளுக்கு சோதனையானது.

மழையால் பாதகம்

தற்போது அறுவடை நேரம் என்பதால் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் திடீர் அல்லது தொடர் மழையால் பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகின்றனர். டெல்டா பகுதி தவிர மற்ற மாவட்டங்களிலும் அறுவடை செய்த நெல்லை அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று விற்று பணமாக்குவதற்குள் அவர்களுக்கு போதும் போதும் என்றாகி விடுகிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 1300 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இவற்றில் பலவற்றுக்கு சொந்த சேமிப்புக் கிடங்குகள் கிடையாது. வாடகை கட்டணம் செலுத்தாத விதமாக பொது இடங்கள், திறந்தவெளி பகுதிகளைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு நெல் மூட்டைகளை கொண்டு செல்லும்போது மழை வந்துவிட்டால் திறந்த வெளியிலேயே வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கொள்முதல் நிலையங்களில் போதுமான தார்ப்பாய்களும் கிடைப்பதில்லை. இதனால் நெல் மூட்டைகளுக்குள் மழைநீர் புகுந்து விற்பனைக்கு கொண்டு வந்த அத்தனை மூட்டைகளும் வீணாகி விடுகின்றன.

கடந்த 2 வாரங்களில் மட்டும் இப்படி காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மதுரை, தஞ்சை, திருச்சி, விழுப்புரம், திருவாரூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்த 30 ஆயிரத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் சேதம் அடைந்து விட்டன.

மழை நீர் காரணமாக, நெல்லில் ஈரப்பதம் அதிகரிப்பதால், அதை நன்கு உலர வைத்து, தூசியை அகற்றிய பின்புதான் மறுபடியும் விற்பனை செய்ய முடியும். இதற்கு, டன்னுக்கு 4,000 ரூபாய் வரை கூடுதல் செலவு பிடிக்கும். டெல்டா மாவட்ட விவசாயிகள், ஒவ்வொரு வருடமும் இப்பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறார்கள்.

எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல்

“இது தவிர, தொடர் மழையால் திறக்கப்படாமல் இருக்கும் நெல் கொள்முதல் நிலையங்களாலும் விவசாயிகள் பாதிப்பை சந்திக்கின்றனர். இன்னொரு பக்கம் கமிஷன் ஏஜெண்டுகள், வியாபாரிகள் மூலம் விற்பனைக்கு கொண்டு வரப்படும் நெல் மூட்டைகளுக்கே முன்னுரிமை கொடுத்து கொள்முதல் நிலையங்களில் நெல்லை வாங்கிக் கொள்கின்றனர்” என விவசாயிகள் மனம் குமுறுகின்றனர்.

கொள்முதல் நிலைய பணியாளர்களோ “தினமும் 900 முதல் 1000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்கிறோம். லாரிகள் அதிகம் இயக்கப்படாததால் நெல் மூட்டைகள் தேங்கி, மழை பெய்யும் போது நனைந்து விடுகின்றன. இதற்கு எங்களால் என்ன செய்ய இயலும்” என்கின்றனர்.

Farmers CM - Updatenews360

இந்த நிலையில்தான் விவசாயிகளின் இன்னல்களைத் துடைக்கும் விதமாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் இடையூறின்றி நெல் மூட்டைகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து அதற்குரிய விலையை உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்” என்று தமிழக அரசை வலியுறுத்தி இருந்தார்.

அதிமுக பதிலடி

அதற்கு பதிலளித்த உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, “முன்னாள் முதலமைச்சர் இப்படி பொத்தாம் பொதுவாக குற்றம்சொல்லகூடாது. எந்த இடத்தில் தவறு நடக்கிறது, என்பதை குறிப்பிட்டுக் கூறவேண்டும்” என்றார்.

இப்படி நெல் கொள்முதல் விவகாரம் தமிழகஅரசியல் சூறாவளியை கிளப்ப அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மிகக் காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டு தமிழக அரசுக்கு அட்வைசும் செய்துள்ளார்.

agri krishnamoorthy - updatenews360

அதில், “அமைச்சர் சக்கரபாணி, இடைத்தரகர்கள் இடையூறு பற்றியோ, நெல் கொள்முதல்  செய்யப்படாமல் விவசாயிகள் வாரக் கணக்கில் காத்திருப்பது பற்றியோ, மழையினால் நெல் மணிகள் முளைத்துவிடுவதைப் பற்றியோ நேரடியாக பதில் அளிக்காமல், தங்களது அரசு கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்தி உள்ளதாகவும், 2 மாதங்களில் நெல் கொள்முதல் அதிகளவு நடந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இது நெல் விளைச்சல் காலம். எனவே, தமிழகத்தில் நெல் வரத்து அதிகரித்திருப்பது, இயற்கையான ஒன்று.

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் செழித்து இருக்கிறது, என்பதை ஒப்புக்கொண்டதற்கு அமைச்சருக்கு நன்றி. தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளே, தமிழகத்தில் விவசாயம் செழித்ததற்கு அடித்தளமாக அமைந்துள்ளது, என்பதை எவராலும் மறைக்க முடியாது.

2016-ல் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, தொடர்ந்து நடைமுறையில் உள்ள இ- கொள்முதல் முறையின்படி, அதிகபட்சம் 48 மணிநேரத்திற்குள் நெல்லுக்கான பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது.

கமிஷன், கலெக்சன், கரப்ஷன் இந்த மூன்றுக்கும் சொந்தக்காரர்கள் யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். மூட்டைக்கு 3 ரூபாய் கமிஷன் என்றால் என்ன என்பதை நீதிபதி சர்க்காரியா கமிஷன் அறிக்கையை படித்துப் பார்த்து அமைச்சர் தெரிந்து கொள்ளுங்கள்.

30,000 நெல்மூட்டைகள் வீண்

எடப்பாடி பழனிசாமி விவசாயிதான் என்பதை இப்போதாவது அமைச்சர் ஒப்புக்கொண்டதற்கு நன்றி. அவர் விவசாயி என்பதால்தான், விவசாயிகளின் துயரங்களை இந்த அரசின் கவனத்துக்குக் கொண்டு வருகிறார்.

எனவே, அவர் சுட்டிக் காட்டியபடி, திமுகவினர் மற்றும் இடைத்தரகர்கள் இடையூறின்றியும், தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்தி, நெல் கொள்முதலை விரைவுபடுத்தி, விவசாயிகள் சிந்திய வியர்வைக்கு உண்டான பலனை அமைச்சர் விரைந்து அளிக்க முன்வரவேண்டும்.

நாளிதழ்களில், நெல் கொள்முதல் நிலையங்களில் வாரக் கணக்காக காத்திருக்கும் விவசாயிகளின் நெல் மணிகள் பயிர்களாக முளைத்திருக்கும் படங்கள் வெளிவந்துள்ளன. இவ்வாறு, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 30,000 நெல் மூட்டைகள் மழையினால் நனைந்து பாழாகியுள்ளன என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது.
எனவே, அமைச்சர் சாக்கு போக்கு சொல்லாமல், நெல் கொள்முதலில் கவனம் செலுத்தி, பாடுபட்ட விவசாயிகளின் துயர் துடைக்கவேண்டும்” என்று பதிலடி கொடுத்து இருக்கிறார்.

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறும்போது, “திமுக அரசு மீது முதல் முறையாக அதிமுக அதிரடி தாக்குதலை நடத்தியிருக்கிறது. முன்பு ஸ்டாலின் கூறிய கமிஷன், கலெக்சன், கரப்ஷன் என்ற அதே குற்றச்சாட்டை அதிமுகவும் கையில் எடுத்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இதுவரை திமுக அரசை கடுமையாக விமர்சிக்காத அதிமுக, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு அதிரடி காட்டி வருகிறது. இது அரசியலுக்கு அவசியமான ஒன்று. உடனுக்குடன், சுடச்சுட பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாகவே இது தெரிகிறது. எதிர்க்கட்சிக்குரிய மின்னல் வேகம் இப்போதுதான் அதிமுகவிடம் இருந்து வெளிப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டனர்.

Views: - 123

0

0