4 மாநிலங்களில் பாஜக எழுச்சி : பெரும் வீழ்ச்சி கண்ட காங்கிரஸ்… பூசி மெழுகும் ப.சிதம்பரம்!!

4 May 2021, 4:12 pm
Congress - p chidamabaram - updatenews360
Quick Share

அரசியல் ரீதியான ஒரு மிகப்பெரிய நிகழ்வை, நீர்த்துப் போகச் செய்வதும், மறக்கடிக்க முயற்சிப்பதும் மூத்த அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை. அதில் தங்களுக்கு மட்டுமே பாதிப்பு என்றால், பட்ட காயத்தை அப்படியே பூசி மெழுகி மறைத்து விடுவார்கள். இதில் மிகவும் கைதேர்ந்த மூத்த தலைவர்களில் ப.சிதம்பரமும் ஒருவர் என்றே சொல்லவேண்டும்.

அண்மையில் நடந்து முடிந்த,5 மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து ப.சிதம்பரம் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் திமுக தலைவர் ஸ்டாலினை பாராட்டியதோடு, “மேற்கு வங்காளத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற மம்தா பானர்ஜிக்கு எனது பாராட்டுக்கள். அசாம் காங்கிரசில் மூத்த தலைவர்கள் இல்லாவிட்டாலும்கூட 2-ம் தலைமுறையினர் கடும் சவால்களுக்கு மத்தியில் கணிசமான இடங்களை காங்கிரசுக்கு வென்று கொடுத்துள்ளனர்.

P Chidambaram - Updatenews360

கேரளாவில் காங்கிரசுக்கு பெரிய தோல்வி போல சித்தரிக்கப்படுகிறது. இதை மறுக்கவில்லை. ஆனாலும் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் காங்கிரஸ் தோல்வியை சந்தித்திருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி பாஜகவின் சீடராக மாறிவிட்டார். அதுவே அவருடைய தோல்விக்கும் காரணமாகிவிட்டது” என்று சில உண்மைகளை கூறுவதுபோல்
சாமர்த்தியமாக பல தகவல்களை மறைத்து இருக்கிறார்.

மேற்கு வங்காளத்தில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான மம்தா பானர்ஜி தோல்விகண்டது பற்றி சிதம்பரம் மூச்சு விடவில்லை. மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒருவர் ஏன் முதல்வர் பதவியை ஏற்கிறார், இது ஜனநாயகமா? என்று அவர் கேள்வி எழுப்பவும் இல்லை.

புதுச்சேரியில், இதுவரை பல சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக போட்டியிட்டு இருந்தாலும், ஒரு தொகுதியில் கூட தாமரை மலரவில்லை. கடந்த ஜனவரி மாதம் புதுவையில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தது. அக்கட்சியிலிருந்து அடுத்தடுத்து
5 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தனர். அதேபோல் திமுக எம்எல்ஏ ஒருவரும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் தானாகவே நாராயணசாமி தலைமையிலான புதுவை காங்கிரஸ் அரசு, கவிழ்ந்து போனது.

NR_Congress_UpdateNews360

அப்போது, “பாஜக நடத்திய ஜனநாயக படுகொலை இது” என்று காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, சிதம்பரம், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தேர்தல் அறிவிக்கப்பட்டு ரங்கசாமி தலைமையிலான என். ஆர். காங்கிரசுடன் பாஜக கூட்டணி அமைத்தபோது, புதுவையில் ஒரு போதும் தாமரை மலராது என்று காங்கிரஸ் தலைவர்கள் ஆவேசமாக முழங்கினர்.

தற்போது அந்த மாநிலத்தில் 6 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.மேலும் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அரசும் அமைகிறது. அதேநேரம் புதுச்சேரியில் காங்கிரஸ் 2 தொகுதிகளில்தான் வெற்றி கண்டுள்ளது. 2016 தேர்தலில் 21 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 14 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.

இது பற்றி சிதம்பரம் கூறுகையில், “புதுவையில் காங்கிரஸ் தோல்வியடைந்தது கட்சிக்கு பேரிழப்பு தான். இங்கு வெற்றி பெற்ற ரங்கசாமி மனதிலும், வெளித்தோற்றத்திலும் காங்கிரஸ்காரர்தான். சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர் பாஜக பக்கம் சாய்ந்துள்ளார்” என்கிறார். அதேநேரம் புதுவையில் பாஜகவின் எழுச்சியும், காங்கிரஸின் வீழ்ச்சியும் அவருடைய கண்களுக்கு தெரியாமல்போனது ஆச்சரியம்தான்.

மேற்கு வங்காளத்தில் 2016 தேர்தலில் பாஜக வென்ற இடங்கள் மூன்றே மூன்றுதான். தற்போது அக்கட்சிக்கு 77 இடங்கள் கிடைத்திருக்கிறது. காங்கிரஸ் கடந்த தேர்தலில் 44 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. இம்முறை மிகப்பெரிய முட்டை கிடைத்திருக்கிறது. அதுவும் கேரளாவில் தனது பரம எதிரியாக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்சுடன், மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கூட்டணி அமைத்துக் கொண்டது. பாஜக மாநிலத்தில் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக இப்படி இரு கட்சிகளும் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துக் கொண்டன. மேற்கு வங்காள தேர்தலில் காங்கிரசுக்குத்தான் முட்டை கிடைத்தது என்றால், அதுவரை பூஜ்ஜியத்தையே அறியாத கம்யூனிஸ்டுகளுக்கும் அந்த முட்டையை மேற்கு வங்காள மக்கள் பரிசாக அளித்துள்ளனர்.

mamata_banerjee_eci_updatenews360

இதையெல்லாம் எப்படி சிதம்பரம் மறந்தார் என்றும் தெரியவில்லை.

கேரளாவில் கடந்த தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றிபெற்ற பாஜகவுக்கு இந்த முறை எந்த வெற்றியும் கிடைக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் 3 தொகுதிகளில் மிக நெருக்கமாக வந்து பாஜக வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தனர். கேரளாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் நிகழும். ஆனால் இம்முறை அது நடக்கவில்லை. 44 ஆண்டுகளுக்கு பிறகு ஆளும் கட்சி ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதையும் சிதம்பரம் தனக்கு வசதியாக மறந்துவிட்டார்.

அசாம் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களில் பெரும்பாலானோர், மிகவும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களில் எத்தனை பேர் பெரும் கோடீஸ்வரர்கள் என்பது ஊரறிந்த ரகசியம்.

இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் மேற்கு வங்காளம், கேரளா, தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களிலும் எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றிருப்பதால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜியை அறிவிக்கவேண்டும் என்று இப்போதே குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. பினராயி விஜயன், ஸ்டாலின் பெயர்களும் கூட இதில் அடிபடுகிறது. ஆனால் ராகுல் காந்தியின் பெயரை யாருமே குறிப்பிடவில்லை.

நாடாளுமன்ற மக்களவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள தேசியக் கட்சியான காங்கிரசின் தலைவர்களில் ஒருவர், பிரதமர் வேட்பாளர் என்ற வரிசையிலேயே இடம்பெறாமல் போனது வேதனைக்குரிய விஷயம்தான்.

Chidambaram_UpdateNews360

பாஜகவை ப.சிதம்பரம் கடுமையாக தாக்குவது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்தார்.

“இன்று பாஜக ஏதோ தீண்டத்தகாத கட்சி என்பதுபோல சிதம்பரம் கொந்தளிக்கிறார். 2001-ல் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால் எங்கள் கட்சியில் இருந்து விலகிய சிதம்பரம் காங்கிரஸ் ஜனநாயக பேரவையைத் தொடங்கினார். திமுக கூட்டணியில் அக்கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. அப்போது, திமுக கூட்டணியில் பாஜகவும் இடம் பெற்றிருந்தது. 21 தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டன. அதில் 4 இடங்களில் பாஜக வெற்றியும் பெற்றது. அந்தத் தேர்தலில், பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்ததால்தான் அதிமுக அணி அமோக வெற்றி பெற்றதா? என்பதை சிதம்பரம் விளக்கவேண்டும்.

அந்த நேரத்தில் திமுக கூட்டணியில் பாஜக இருந்ததை சிதம்பரம் எப்படி ஜீரணித்துக் கொண்டார்? அவர்தான் தற்போது பாஜகவை கடுமையாக விமர்சிக்கிறார். பாஜகவை மதவாதக் கட்சி என்கிறார். இதன் மூலம் அவருடைய உண்மையான முகம் தெரிகிறது. காங்கிரஸில் இருந்தாலும் கூட அவர் என்றுமே திமுக அனுதாபிதான்.

2001-ல் நாங்கள் திமுகவுடன் தொகுதி உடன்பாடுதான் செய்து கொண்டோம். எங்களுக்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சிதம்பரம் சொல்லலாம். ஆனால் அவருடைய காங்கிரஸ் ஜனநாயக பேரவை, பாஜக அங்கம் வகித்த திமுக கூட்டணியில்தான் இடம் பெற்றிருந்ததை யாராலும் மறுக்க முடியாது” என்று அந்த தலைவர் குறிப்பிட்டார்.

அடடே!… இதைத்தான் சிதம்பர ரகசியம் என்கிறார்களோ?

Views: - 142

0

0

Leave a Reply