7.5 சதவீத ஒதுக்கீட்டால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அலை : புதிய குற்றச்சாட்டுகளால் திசைதிருப்பும் முயற்சியில் ஸ்டாலின்!!

18 November 2020, 10:00 pm
DMK - admk - cover updatenews360
Quick Share

சென்னை: மருத்துவக் கல்வி இடங்களில் 7.5 சதவீத இடங்களை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கியதால் தமிழகம் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் ஆதரவு அலை வீசுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்வுப் பட்டியலில் குளறுபடி என்று புதிய குற்றச்சாட்டைக் கிளப்பி பிரச்சினையை திசைதிருப்பும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

நீட் தேர்வால் தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், அதை முன்வைத்து அதிமுகவுக்கு எதிராக திமுக அரசியல் செய்துவந்த சூழலில் ஆக்கபூர்வமான முறையில், அவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிந்தித்து, சரியான திட்டம் ஒன்றை உருவாக்கினார். மருத்துவக் கல்வி இடங்களில் 7.5 சதவீத இடங்களை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கலாம் என்ற ஆக்கபூர்வமான திட்டத்தை நிறைவேற்றினார்.

இந்த ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க நீண்ட தாமதம் செய்ததால், அதை வைத்து அரசியல் செய்யத்தொடங்கினார். ஆளுநரின் ஒப்புதலை அதிமுக அரசால் பெற முடியாது என்று தவறாகக் கணக்குப்போட்ட ஸ்டாலின், ஆளுநருக்கு அதிமுக அரசு அஞ்சுகிறது என்று பிரச்சாரம் செய்தார். ஆளுநரை வற்புறுத்தி இந்த ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் பெற முதல்வர் பழனிசாமியால் முடியவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

ஆனால், யாரும் எதிர்பாராத திருப்பமாக ஆளுநரின் ஒப்புதலுக்குக் கால தாமதமாவதால், அரசு உத்தரவைப் பிறப்பித்து தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார் எடப்பாடி பழனிசாமி. இதைத் தொடர்ந்து, ஆளுநரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஒப்புதல் தந்தார். அதிமுக அரசின் அதிரடி நடவடிக்கையை சற்றும் எதிர்பாராத ஸ்டாலின் திமுகவின் போராட்டங்களாலும் திமுக தந்த அழுத்ததாலும் ஆளுநர் நடவடிக்கை எடுத்ததாகக் கூறிக்கொண்டார். தனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதியதன் மூலமாக தன்னால்தான் இது நடந்தது என்று காட்டுக்கொள்ள முயன்றார். ஆனால், இந்தப் பிரச்சினையில் அரசியல் செய்வதை திமுகவின் கூட்டணிக் கட்சிகளே ஏற்கவில்லை.

அதிமுக அரசின் அதிரடி நடவடிக்கையால்தான் ஆளுநர் ஒப்புதல் வழங்கினார் என்று ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். அதிமுக அரசைப் பாராட்டி இடதுசாரிக் கட்சிகளும் வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டன. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவிக்காமல் அமைதி காத்தனர்.

அதிமுக அரசின் இட ஒதுக்கீட்டு சட்டம் எந்த இடரும் இல்லாமல் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது. நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டதால் கொந்தளிப்பான மனநிலையில் இருந்த தமிழக மக்கள், எடப்பாடி பழனிசாமியின் அரசைப் பாராட்டத் தொடங்கியுள்ளனர். பதவியைப் பற்றியோ, ஆட்சியைப் பற்றியோ, ஆளுநரை எதிர்த்து எதுவும் செய்யக்கூடாது என்று அஞ்சியோ நடந்துகொள்ளாமல், முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பாணியில் அதிமுக உறுதியுடன் நடந்துகொண்டதால், அதிமுக அரசுக்கு ஆதரவு பெருகி வருகிறது. நீட் தேர்வுக்கு தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்பை அதிமுகவுக்கு எதிராகத் திருப்பி தேர்தல் ஆதாயம் பெறலாம் என்று திட்டமிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

gvt students- updatenews360

சென்னையில் நடைபெற்ற மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கிய முதலமைச்சருக்கு மாணவர்களும், அவரது பெற்றோர்களும் கண்ணீர்மல்க நன்றி கூறினார்கள். நிகழ்ச்சியில் பேசிய முதல்வரும் “தமிழக வரலாற்றிலும் இந்த நாள் ஒரு பொன்னாள். அரசுப்பள்ளியில் படித்தவன் என்கிற முறையில் எனக்கு மனநிறைவை ஏற்படுத்திய நாள்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார். “கொள்கை அளவில் நீட் தேர்வுக்கான தமிழக அரசின் எதிர்ப்பு தொடரும்” என்பதையும் பதிவு செய்தார்.

அரங்கில் இல்லாத இலட்சக்கணக்கான மாணவர்களும், பெற்றோரும் முதல்வரை மனதாறப் பாராட்டினர். இது மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதரவு அலையாக மாறியுள்ளது. முதல்வரின் முறையான நடவடிக்கையைப் பாராட்ட மனமில்லாத ஸ்டாலின், மீண்டும் இந்த இட ஒதுக்கீட்டில் குளறுபடி இருப்பதாக பிரச்சினையைத் திசைதிருப்ப முயற்சி செய்கிறார். வெளிமாநில மாணவர்கள் சிலருக்கு இந்தப் பட்டியலில் இடம் கிடைத்துள்ளதால், மொத்த ஒதுக்கீட்டிலும் குளறுபடி ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். முதல் 10 மாணவர்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ள மாணவி, கேரள மாநிலத்தையும், தெலங்கானா மாநிலத்தின் பட்டியலில் இருக்கும் ஏழு மாணவர்களும் இருப்பதாக ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்.

EPS - stalin - updatenews360

ஆனால், இந்த ஒரு குற்றச்சாட்டைத் தவிர அவரது மொத்த அறிக்கையும் நீட் தேர்வு குறித்து தமிழக மக்களுக்கு நினைவுபடுத்தும் விதத்திலேயே இருக்கிறது. நீட் தேர்வால் 13 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று தொடங்கி, நீட் தேர்வில் ஆறாத்துயரம் என்று தொடர்ந்து நீட் முறைகேடுகள் பற்றியே ஸ்டாலின் பேசியுள்ளார். நீட் தேர்வு எதிர்ப்பை மக்கள் மறந்துவிடுவார்களோ என்ற பதட்டமே முழு அறிக்கையிலும் வெளிப்படுகிறது,

கடந்த வருடம் வெறும் 6 பேர் மட்டுமே அரசுப் பள்ளிகளில் பயின்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தனர். ஆனால், தற்போது எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் 404 பேர் சேரும் நிலை உருவாகியுள்ளது. நீட் எதிர்ப்பு வரவரக் கூர்மழுங்கிய சூழலில் நீட்டை மையமாக வைத்து, அதிமுக அரசை எதிர்த்து இனிமேல் அரசியல் செய்யமுடியாது என்ற நிலைக்கு ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார். அதிமுகவை எதிர்த்து 2021 சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய பிரச்சினைகளைத் தீவிரமாக அவர் தேடிவருகிறார்.

Views: - 56

0

0

1 thought on “7.5 சதவீத ஒதுக்கீட்டால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அலை : புதிய குற்றச்சாட்டுகளால் திசைதிருப்பும் முயற்சியில் ஸ்டாலின்!!

Comments are closed.