சசிகலாவுக்கு கார் கொடுத்தவர் உள்பட 7 பேர் கட்சியில் இருந்து நீக்கம் : அதிமுக தலைமை அதிரடி

8 February 2021, 9:38 pm
ADMK -Updatenews360
Quick Share

சென்னை : கட்சியின் கட்டுப்பாடுகளையும் விதிகளையும் மீறி செயல்பட்டதாக கிருஷ்ணகிரியைச் சேர்ந்த நிர்வாகிகள் 7 பேரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட சசிகலாவிற்கு ஆதரவாக செயல்படுபவர்களை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கையை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், இன்று சசிகலாவின் தமிழக வருகையின் போது, அவருக்கு ஆதரவாக செயல்பட்ட நிர்வாகிகள் 7 பேரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் சூளகிரி கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த 7 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் விபரம் : தட்சணா மூர்த்தி, எஸ்.ஆர். சம்பங்கி, பி. சந்திரசேகர ரெட்டி, ஜானகி ரவீந்திர ரெட்டி, பிரசாந்த்குமார், நாகராஜ், ஆனந்த் ஆகியோர் ஆவர்.

இவர்களில் எஸ்ஆர் சம்பங்கி, சசிகலாவின் வருகைக்காக கார் கொடுத்தவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Views: - 0

0

0