‘ஐயயோ….எனக்கு 2 ஊசி போட்டாங்களே’: மூதாட்டிக்கு ஒரே நாளில் 2 தடுப்பூசி…வேதாராண்யத்தில் அதிர்ச்சி..!!

Author: Aarthi Sivakumar
18 August 2021, 4:24 pm
Quick Share

வேதாரண்யம்: வண்டுவாஞ்சேரியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 70 வயது மூதாட்டிக்கு ஒரே நாளில் இரு முறை தடுப்பூசி போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம் வண்டுவாஞ்சேரி கிராமம் பெரியதிடல் பகுதியை சேர்ந்த அலமேலு. 70 வயதான விவசாய கூலித்தொழிலாளி. அலமேலு அப்பகுதியில் உள்ள சரபோஜி ராஜபுரம் பள்ளியில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சென்றுள்ளார்.

பெண்கள் வரிசையில் சென்ற மூதாட்டிக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டவுடன் அவரை நிழலில் அமர செய்துள்ளனர். ஆண்கள் வரிசையில் கூட்டம் குறைவாக இருந்ததால் அந்த வரிசையில் பெண்களும் அனுப்பி வைக்கப்பட்ட போது அங்கிருந்தவர்கள் நிழலில் அமர்ந்திருந்த அலமேலுவை சேர்த்து அனுப்பி உள்ளனர்.

இதனால் மூதாட்டி அலமேலுவிற்கு இரண்டாவது முறையும் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் மூதாட்டி அலமேலு தன் வீட்டிற்குச் சென்றுவிட்டார். அலமேலு தன் வீட்டில் மகனிடம் எதேச்சையாக பேசிக்கொண்டிருக்கும் பொழுது எனக்கு இன்று இரண்டு ஊசிகள் போடப்பட்டது என தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அலமேலுவின் மகன் உடனடியாக அவரை அந்த முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நடந்த விசாரணையில் அலமேலுவிற்கு இரு முறை தவறுதலாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது உறுதியாகியுள்ளது.


இதைதொடர்ந்து அலமேலு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். மூதாட்டி அலமேலுவிற்கு ஒரே நாளில் இருமுறை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் குடும்பத்தினர் மிகுந்த பதற்றத்தில் உள்ளனர்.

Views: - 227

0

0