9 மாவட்டங்களுக்கு இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் : அக்., 12ல் வாக்கு எண்ணிக்கை.. அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்..!!

Author: Babu Lakshmanan
13 September 2021, 5:33 pm
Quick Share

வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இருகட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே, எஞ்சிய 9 மாவட்டங்களுக்கு செப்.,15ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேர்தலுக்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தேர்தல் ஆணையம் அண்மையில் ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில், 9 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் அக்.,6 மற்றும் 9ம் தேதிகள் என இருகட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது :- காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு அக்.,6ம் தேதியும், தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு அக்.,9ம் தேதியும் தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

மேலும், வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய செப்டம்பர் 22ம் தேதி கடைசி நாளாகும். செப்.,23ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. செப்.,25ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். பதிவாகும் வாக்குகள் அக்.,12ம் தேதி எண்ணப்படுகிறது.

முதற்கட்டமாக 6ம் தேதி நடக்கும் தேர்தலில் 41 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 2ம் கட்டமாக 9ம் தேதி நடக்கும் தேர்தலில் 34 லட்சம் பேர் வாக்களிப்பார்கள். இரு கட்டத் 27,000 பதவிகளுக்கு நடக்கும் தேர்தலில்களிலும் மொத்தம் 14,574 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

நேரடி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அக்.,20ம் தேதி பதவியேற்பார்கள். மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு அக்.,22ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது, எனக் கூறினார்.

Views: - 252

0

0