2020-ல் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவு இதுவா..? ஸ்விகி வெளியிட்ட தகவல்..!!!

22 December 2020, 7:16 pm
online-food- updatenews360
Quick Share

2020ம் ஆண்டில் இந்தியாவில் மக்கள் அதிகமாக தங்கள் ஆப்பில் பிரியாணியை ஆர்டர் செய்ததாக ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பிரபலமான ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் ஆப் ஸ்விகி மக்கள் இந்த ஆப் மூலம் தங்களுக்கு அருகே உள்ள உணவகங்களிலிருந்து உணவை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடியும். பெரு நகரங்களில் இந்த நிறுவனம் அதிக அளவில் வியாபாரம் செய்து வருகிறது.

இந்நிறுவனம் இந்தாண்டில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் குறித்து வெளியிட்ட அறிக்கையில் இந்த 2020ம் ஆண்டு இந்தியா முழுவதும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு சிக்கன் பிரியாணி எனவும், ஒவ்வொரு ஒரு விநாடிக்கும் ஒன்றிற்கும் மேற்பட்ட சிக்கன் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த ஆப்பில் ஒரு வெஜ் பிரியாணி ஆர்டர் செய்யப்படும் அதே நேரத்தில் 6 சிக்கன் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்படுவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்நிறுவனத்தின் புள்ளி விபரத்தின் படி கடந்த 2019ம் ஆண்டை விட 2020ம் ஆண்டு 3 லட்சத்திற்கும் அதிகமானோர் சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளனர் என்றும், 2020 ஜனவரி – மார்ச் மாதங்களில் அலுவலகங்களை விட வீடுகளுக்கே 5 மடங்கு அதிகம் டெலிவரி செய்யப்பட்டுள்ள என்றும் ஊரடங்கு காலத்தில் இது 9 மடங்காக இருந்தது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் ஊரடங்கு காலத்தில் டீ மற்றும் காபியை ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும், இதே நேரத்தில் இந்தியா முழுவதும் ஊரடங்கு காலத்தில் 2 லட்சம் பாணிபூரி ஆர்டர்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் சராசரியாக இரவு உணவிற்கு ஒரு நபர் 342 கலோரி உணவுகளையும், மதியம் உணவிற்கு 350 கலோரி உணவுகளையும், காலை உணவிற்கு 427 கலோரி உணவுகளைச் சாப்பிடுகிறார்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்நிறுவனம் சில நகரங்களில் அத்தியாவசிய பொருட்கள், மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் செயலியான ஸ்விகி இன்ஸ்டாமார்ட் என்ற செயலி மூலம் இந்த 2020ம் ஆண்டு மட்டும் 75 ஆயிரம் கிலோ வெங்காயம் டெலிவரி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

ஸ்விகி மூலமாகக் குறைந்த பட்சமாகப் பெங்களூருவில் 600 மீட்டர் தொலைவிலிருந்தும், அதிகபட்சமாகக் கொல்கத்தாவில் 39 கி.மீ தொலைவிலிருந்தும் உணவுகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 21

0

0