சசிகலாவின் விடுதலைக்கான அபராதத் தொகையை இத்தனை பேர் செலுத்தினார்களா..? விபரங்களை வெளியிட்டது சிறை நிர்வாகம்..!!

18 November 2020, 6:00 pm
sasikala-1 updatenews360
Quick Share

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிற்காக ரூ.10.10 கோடி அபராதத் தொகை சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மூவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ. 10 கோடியே 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதத் தொகையை செலுத்தினால் அவர் 2021ஆம் ஆண்டு ஜனவரியில் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த அபராத தொகையை நேற்று சசிகலாவின் வழக்கறிஞர் முத்துகுமார் நீதிமன்றத்தில் காசோலை வாயிலாக வழங்கினார். இதனையடுத்து அவர் விரைவில் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதியில் இருந்து அவர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வருகிறார். அவரது தண்டனை காலம் இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில் சசிகலா விடுதலை குறித்து செய்திகள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த டி.நரசிம்மமூர்த்தி என்பவர், சசிகலா விடுதலை குறித்து கேள்வி எழுப்பி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். அவரது கேள்விக்கு கடிதம் மூலம் பதிலளித்த பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் ஆர்.லதா, சிறை ஆவணங்கள்படி உச்சநீதிமன்றம் விதித்துள்ள அபராதத் தொகையை செலுத்தினால், சசிகலா 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அபராதத் தொகையை செலுத்த தவறினால் சசிகலா மேலும் 13 மாதங்கள் கழித்து(2022ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி வரை) விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளது. மேலும், அவர் பரோல் காலத்தை பயன்படுத்தினால், அவர் விடுதலை செய்யப்படும் தேதியில் மாற்றம் ஏற்படலாம் என சிறை கண்காணிப்பாளர் லதா தெரிவித்திருந்தார்.

தற்போது, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவப்பா முன் ரூ.10.10 கோடிக்கான காசோலையை சசிகலா வழக்கறிஞர் முத்துக்குமார் வழங்கினார். சுதாகரன் ஏற்கனவே தனது அபராதத் தொகை ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தி உள்ளதால் இருவரும் விரைவில் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சிறையில் உள்ள சசிகலாவுக்காக வங்கி வரைவோலை எடுத்தவர்களின் விவரம் வெளியாகியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் பழனிவேல் என்பவர் பெயரில் ரூ.3.25 கோடி வரைவோலை, வசந்தா தேவி என்பவர் ரூ.3.75 கோடி டி.டி. எடுக்கப்பட்டுள்ளது, ஹேமா என்பவர் ஆக்சிஸ் வங்கியில் 3 கோடி ரூபாய்க்கு டி.டி. எடுத்து வழங்கியுள்ளார், விவேக் பெயரிலும் ஆக்சிஸ் வங்கியில் ரூ.10,000-க்கு டி.டி. எடுக்கப்பட்டுள்ளது.