90 நிமிடங்களில் கொரோனா வைரசை கண்டறிந்து எச்சரிக்கும் முகக்கவசம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!!

Author: Aarthi Sivakumar
30 June 2021, 3:56 pm
Quick Share

வாஷிங்டன்: 90 நிமிடங்களில் கொரோனா வைரசை கண்டறியக்கூடிய புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய முககவசத்தை எம்ஐடி, ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் முககவசம் அணிகிறோம். மூலிகை முக கவசம் துணியால் ஆன முககவசங்கள், பிளாஸ்டிக் முககவசம் என பல வகை முககவசங்கள் தற்போது விற்பனையாகின்றன. தற்போது விஞ்ஞானிகள் ஓர் வித்தியாசமான தொழில்நுட்பம் நிறைந்த அதிநவீன முககவசம் ஒன்றை தயாரித்துள்ளனர்.

முககவசம் அணிந்த 90 நிமிடங்களுக்குள் கொரோனா வைரசை கண்டறியக்கூடிய ஒரு புதிய முககவசத்தை மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். இது குறித்து நேச்சர் பயோடெக்னாலஜி பிரபல அறிவியல் இதழ் கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது,

பிரெஞ்சு விஞ்ஞானிகள் அதிநவீன நோய்களை கண்டறியும் சென்சார்கள் பொருத்திய கவசங்களை கண்டுபிடித்துள்ளனர். காற்றில் கொரோனா வைரஸ் உட்பட வேறு ஏதாவது வைரஸ் இருந்தால் அதனை இந்த முககவசத்துடன் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்கள் கண்டறிந்து உடனடியாக முககவசத்தை அணிந்து இருக்கும் எஜமானருக்கு தகவல் அளிக்குமாம். இதனால் அவர்கள் அந்த இடத்தை விட்டு விரைவில் நகர்ந்து தப்பித்துக்கொள்ளலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நாம் சாலையில் நடந்து செல்லும்போது சுவாசிக்கும் காற்றில் பலவித வைரஸ், பாக்டீரியாக்கள் உள்ளன. நமது நாசி துவாரத்தில் உள்ள மியூகோஸ் மற்றும் ரோமங்கள் ஆகியவை இவற்றை நுரையீரலுக்குள் நுழைவதை தடுக்கின்றன. கொரோனா வைரஸ் நுண் துகள் வேகமாகப் பரவும் என்பதால் குறிப்பிட்ட ஒரு நபர் அணியும் முககவசத்தில் சென்சார் பொருத்த பிரெஞ்சு விஞ்ஞானிகள் திட்டமிட்டு இதனை உருவாக்கியுள்ளனர். காற்றில் மிதக்கும் வைரஸ் துகள் இந்த சென்சாரில் பட்டாலே இந்த சென்சார்கள் இந்த வைரஸின் தன்மையை கண்டறிந்து விடும். இதற்கு பேட்டரி தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நமது சருமத்தின் மீது ஒவ்வாமையை ஏற்படுத்தும் ஏதாவது தூசி பட்டால் உடனே அந்த இடத்தில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுகிறது அல்லவா? அது போலவே இந்த சென்சார்கள் வேலை செய்யும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆரம்ப சோதனைகளில் இந்த முகமூடி மிகவும் துல்லியமான முடிவுகளை அளித்துள்ளது , இது தற்போதைய பி.சி.ஆர் சோதனைகளுடன் ஒப்பிடக்கூடியதாக உள்ளது.

சென்சார்களை சோதனை செய்ய விரும்பும் போது அணிபவர்களால் செயல்படுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பயனர்கள் தனியுரிமைக்காக முகமூடியின் உட்புறத்தில் மட்டுமே முடிவுகள் காண்பிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 175

0

0