கண்ணீரில் மூழ்கிய எடப்பாடியார் : தேர்தல் களத்தில் கதிகலங்கும் திமுக

29 March 2021, 4:17 pm
CM - raja - updatenews360
Quick Share

முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், அவருடைய தாயாரையும் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தரம் தாழ்ந்து ஆபாசமாக விமர்சித்த விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்த இருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் என்பதையெல்லாம் மறந்து, அவர் ஒட்டுமொத்த பெண் குலத்தையே இழிவாக பேசியது, தமிழகத்தில் சுனாமி போன்ற தாக்குதலை உருவாக்கியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிகவும் அமைதியானவர். எளிதில் உணர்ச்சி வசப்படாதவர். அதனால்தான் ஆ.ராசா தனது தாயாரை இழிவுபடுத்தி பேசிய அன்று மிகவும் பொறுமை காத்தார். ஏதோ வாய்க்கு வந்ததை ராசா உளறி விட்டார் என்று கூட நினைத்து முதல்வர் அதை சற்று மறந்திருக்கலாம். ஆனால் பிரச்சனையின் வீரியம் புரியாமல் திமுக துணைப் பொதுச் செயலாளர் ராசா, தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்பதுபோல் நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. இதை சட்டப்படி சந்திப்பேன் என்று கூறுகிறார்.

radharavi - nayanthara - updatenews360

நடிகை நயன்தாராவை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த போது திமுகவிலிருந்து நடிகர் ராதாரவியை உடனடியாக தற்காலிக நீக்கம் செய்து திமுக தலைமை அசுரவேகம் காட்டியது.

ஆனால் ஆ.ராசா விஷயத்தில் அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின், ஆ ராசாவை கண்டிக்கவும் இல்லை. இந்த விவகாரம் தேர்தலில் திமுகவுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற பயத்தில் திமுகவினர் அனைவரும் கண்ணியம் காக்கவேண்டும் என்று ஒரு அறிவுறுத்தலை மட்டுமே வழங்கினார்.

அதேநேரம் வாய் நிறைய பெண்ணியம் பேசும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் கூட, இதுபற்றி எதுவும் கூறாமல் எல்லாவற்றையும்தான் ஸ்டாலின் சொல்லிவிட்டாரே என்று நழுவிக் கொண்டனர். தேர்தல் நேரத்தில் ஏதாவது சொல்லப்போய் அது பாதகத்தில் முடிந்து விடுமோ என்ற பயம் அவர்களுக்கு! அதுமட்டுமல்ல எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து, இதுபற்றி சிறு அதிர்வு கூட இல்லாததால் உண்மையிலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனம் நொந்துதான் போனார்.

உயிருடன் இல்லாத ஒருவரை பழி கூறுவது மனிதநேயற்ற செயல் என்பதை கண்டிக்க அவர்களில் ஒருவர் கூட முன் வராத நிலையில்தான் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தாய்மார்களை கண்டதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெக்குருகிப் போனார். எந்த ஒரு அரசியல்வாதிக்கும் இப்படிப்பட்ட சூழல் ஏற்படக்கூடாது என்பது அவருடைய கண்ணீர் நிறைந்த வார்த்தைகளில் வெளிப்பட்டது.

CM Edappadi -Updatenews360

சென்னை திருவொற்றியூரில் அதிமுக வேட்பாளர் குப்பனை ஆதரித்துப் பேசும்போது, “திமுக பொறுப்பாளர் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இங்கே ஒரு விஷயத்தை பற்றி பேசக்கூடாது என்று முடிவெடுத்து வந்தேன். ஆனால் தாய்மார்களை பார்த்தவுடன் என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை. என் தாய் என்று பார்க்காதீர்கள், உங்கள் குடும்பத்தில் ஒரு தாயாக பாருங்கள். எவ்வளவு கீழ்த்தரமாக பார்க்கிறார். ஒரு சாதாரண மனிதன், முதல்வராக இருந்தால் என்னவெல்லாம் பேசுகிறார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். ஒரு முதல்வருக்கே இப்படிப்பட்ட நிலை என்றால் உங்களைப் போன்ற மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பார்கள்?

எனக்காக நான் பரிந்து பேசவில்லை. அவரும் ஒரு தாய்க்கு பிறந்தவர்தான். தாய்மார்களை கொச்சைப்படுத்தி பேசுவது, இழிவுபடுத்தி பேசுவது சரிதானா? அவர்களுக்கெல்லாம் நீங்கள் தக்க தண்டனை வழங்க வேண்டும். என்னுடைய தாய், கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். அவர் விவசாயி. இரவு பகல் பார்க்காமல் பாடுபட்டவர். அவர் இறந்து விட்டார். அவரைப் பற்றி இழிவாக தரக்குறைவாக எப்படியெல்லாம் பேசி இருக்கிறார். நானும் உங்களைப் போல் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் தான். ஏழையாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும் தாய்தான் உயர்ந்த ஸ்தானம். பெண்குலத்தை யார் இழிவாக பேசினாலும் அவர்களுக்கு ஆண்டவன் நிச்சயமாக உரிய தண்டனையை வழங்குவார்.

இதைக் கூட பேசக்கூடாது என்று தான் நினைத்தேன். ஆனால் இங்கே தாய்மார்கள் இருக்கிறீர்கள். அதனால்தான் பேசினேன். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்துவிட்டால் எப்படியெல்லாம் அராஜகம் செய்வார்கள்? பெண்களை எப்படி எல்லாம் இழிவு படுத்துவார்கள் என்பதை தாய்மார்களும், சகோதரிகளும் எண்ணிப்பார்க்க வேண்டும்” என்று உணர்ச்சிப் பெருக்குடன் பேசினார்.

முதல்வரின் இந்த உருக்கமான பேச்சு தமிழகத் தேர்தல் கள காட்சிகளை அப்படியே புரட்டிப் போட்டு விட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்படி பேசுவார் என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அதனால் அவை மிகவும் அதிர்ந்துதான் போயுள்ளன. தற்போது ஆ. ராசா, தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.

EPS - a rasa - updatenews360

இந்த நிலையில் முதல்வரின் தாயார் பற்றி ஆ.ராசா ஆபாசமாக பேசிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் கடந்த 2 நாட்களாக வைரலாக பரவி வருகிறது. ஆ ராசா இப்படி பேசுவதற்கு முதல் நாள்தான், கோவை திமுக பிரச்சார கூட்டத்தில் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ‘இன்றைய தமிழக பெண்களின் இடுப்பு பேரல் போலிருக்கிறது’ என்று மிகவும் கண்ணியக் குறைவாக பேசி இருந்தார்.

இந்த 2 வீடியோக்களையும் வாட்ஸ்அப் மூலம் ஆயிரக்கணக்கான பெண்கள், தங்களின் தோழிகளுக்கும் உறவினர்களுக்கும் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். இதுவரை இந்த ஆபாசப் பேச்சு வீடியோக்கள் சுமார் 2 கோடியே 60 லட்சம் பேருக்கு வாட்ஸ்அப் மூலம் மட்டும் பகிரப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அடுத்த சில நாட்களில், தமிழகத்தில் ஸ்மார்ட்போன் வைத்துள்ள சுமார் 5.2 கோடி பேரையும் இந்த வீடியோக்கள் சென்றடைய வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக கல்லூரி மாணவிகள் ஆ.ராசா, லியோனி பேசிய வீடியோ பதிவுகளைக் கண்டு கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர்.

ஆ ராசாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மகளிரணியினரும் மாநிலம் முழுவதும் கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதைத் துண்டுப் பிரசுரங்களாக அச்சிட்டு ஓட்டு கேட்க செல்லும் இடங்களில் குடும்பத்தலைவிகள், கல்லூரி மாணவிகள், அலுவலகம் செல்லும் பெண்கள், அன்றாடம் கூலி வேலைக்கு போகும் பெண்கள் என அனைவரிடமும் தீவிரமாக வினியோகித்தும் வருகின்றனர்.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வீடுகளிலும் இந்த துண்டு பிரசுரங்களை கொடுத்து அதிமுக மகளிர் அணியினர் வாக்கு சேகரிக்கத் தொடங்கி இருக்கின்றனர். இதுதான் திமுக கூட்டணிக்கு தற்போது பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

அதிமுக மகளிர் அணியினர், இதுபோல் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பதால் அதற்கு எந்த பதிலும் பேசமுடியாமல் திமுகவினர் தடுமாறி வருகின்றனர். திமுகவிலேயே பெரும்பாலோனோர் ஆ.ராசா பேசியது, மிகவும் இழிவான செயல் என்பதை ஒப்புக் கொள்ளவும் செய்கிறார்கள்.

தேர்தல் நாள் நெருங்க நெருங்க இது பெண்களின் மனதில் மிக ஆழமாக பதிந்துபோய் திமுகவுக்கு கிடைக்கக் கூடிய வாக்குகளுக்கு வேட்டு வைத்துவிடுமோ என்ற கலக்கமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களால் எதிர்ப் பிரச்சாரமும் செய்ய முடியவில்லை.
பெண் வாக்காளர்களில் 85 சதவீதம் பேர் வரை ஆ.ராசா மற்றும் திண்டுக்கல் லியோனியின் அருவருக்கத்தக்க பேச்சுகள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

அதுமட்டுமல்ல முதல் முறை மற்றும் நடுநிலை ஆண் வாக்காளர்கள் மத்தியிலும் திமுக தலைவர்களின் ஆபாச பேச்சு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த கோபம் தேர்தல் நாளில் நிச்சயம் குறிப்பிட்ட சதவீத அளவிற்கு வெளிப்படலாம்.

அது, திமுகவின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் வகுத்து கொடுத்திருக்கும் ஆட்சி கட்டில் கனவுக்கு மிகப் பெரிய ஆப்பாக அமையும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இதையறிந்த திமுக தேர்தல் களத்தில் கதி கலங்கி நிற்பதென்னவோ உண்மை!

Views: - 16

0

0