வெற்றிக்கு கருப்பு, சிவப்பு, நீலம் போதுமா…? ஆ.ராசாவால் விழிபிதுங்கும் காங்கிரஸ்…!!!

Author: Babu Lakshmanan
5 January 2022, 8:10 pm
Quick Share

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி எம்பியுமான ஆ.ராசா அண்மையில் கொளுத்திப் போட்ட ஒரு சரவெடி தற்போதுதான் சிவகாசி பட்டாசு போல படபடவென்று, பலத்த சத்தத்துடன் வெடிக்க தொடங்கி இருக்கிறது.

சர்ச்சை ராஜா

அது இந்திய அரசியலிலும் சூறாவளியை கிளப்பி விட்டுள்ளது.

மிகச் சமீபத்தில் சென்னை நகரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆ.ராசா இரண்டு பகீர் தகவல்களை வெளியிட்டார்.

“நான் சிறுவனாக இருந்தபோது நடந்த சம்பவம் இது. எங்க ஊரில் ஒரு பிள்ளையார் சிலை இருந்தது, அந்த சிலைக்கு கீழே ஒரு ஆனைவெடி வச்சுட்டேன். அது உடைந்து சிதறியது.
பின் அது பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. அதெல்லாம் ஒரு காலம்” என்று சிறு வயதில் தான் செய்த செயல் குறித்து பேசிவிட்டு முடிவில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக, “காவியை அழிக்க அனைத்து கருப்பு, சிவப்பு, நீலம் ஒன்று சேரவேண்டும்” என்று குறிப்பிட்டார்.

ஸ்டாலின் பிரதமர் :

அவர் இப்படிப் பேசியது, பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. இதனால், மிகவும் அதிர்ந்து போனது சோனியாவும், ராகுலும்தான்.

அதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு.

கடந்த சில மாதங்களாகவே திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி உள்ளது என்று தொடர்ந்து பேசி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் திமுகவின் முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே என் நேரு, “பிரதமர் ஆவதற்குரிய அத்தனை தகுதிகளும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இருக்கிறது” என்று அதிரடி காட்டினார்.

கடந்த டிசம்பர் மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பி இந்தியாவின் தலைசிறந்த தலைவராக உருவாகும் தகுதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது” என்று குறிப்பிட்டார்.

அடுத்த சில நாட்களிலேயே திமுகவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த மோடி நாட்டின் பிரதமராக முடியும் என்றால் ஸ்டாலினால் மட்டும் அது முடியாதா என்ன?…என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இப்படி திமுகவின் முன்னணித் தலைவர்கள் தொடர்ந்து பேசி வருவதற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது.

பலம் இழந்த காங்.,

“தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக வெற்றி பெறக் கூடிய அளவில் காங்கிரஸ் வலுவாக இல்லை. மோடியை எதிர்க்கும் தைரியமும் அக்கட்சிக்கு கிடையாது. ஆண்டில் 6 மாதம் வெளிநாட்டுக்கு பறக்கும் ராகுல், மோடிக்கு சரியான போட்டியாளரே அல்ல. என்னால் மட்டுமே, பாஜகவை வீழ்த்த முடியும்” என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முழங்கி வருவது பெரும் பேசு பொருளாகி உள்ளது.

Sonia_Rahul_Manmohan_UpdateNews360

இதை தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி போன்ற கட்சிகள் ஆதரிக்கவில்லை. காங்கிரஸ் அல்லாத ஒரு அணியால் பாஜகவை 2024 தேர்தலில் வீழ்த்துவது கடினம் என்பது இக்கட்சிகளின் நிலைப்பாடு. அதேநேரம் ராகுலைத்தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்று இந்தக் கட்சிகள் வெளிப்படையாக கூறவும் இல்லை.

இதனால் 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அத்தனை எதிர்க்கட்சிகளும் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டன.

பிரதமர் வேட்பாளர் விஷயத்தில் தேசிய அளவில் இப்படியொரு இழுபறி நிலை இருப்பதால்தான், தமிழகத்தில் திமுகவின் முன்னணி தலைவர்களும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பிரதமர் பதவிக்கு ஸ்டாலின் பொருத்தமானவர் என்று கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலையொட்டியே தற்போது ஆ ராசா கருப்பு, சிவப்பு, நீலம் ஆகியவை இணைந்தால் காவியை காலி செய்து விடலாம் என்று பேசி இருக்கிறார், என்கிறார்கள்.

காவியே வெல்லும்

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறும்போது, ”கருப்பு, சிவப்பு, நீலம் சேர்ந்து பாஜகவை தோற்கடிக்கும் என ஆ.ராசா எந்த அர்த்தத்தில் பேசினார் எனத் தெரியவில்லை. பாஜக அனைவரையும் ஒருங்கிணைத்து செல்கிறது. கருப்பு, சிவப்பு, நீலம் மட்டுமல்ல; அனைத்து நிறங்களும் தேவை. எங்களுக்கு கருப்பும் தேவை, சிவப்பும் தேவை. எதையும் நாங்கள் ஒதுக்கவில்லை. ஆ.ராசா வேண்டுமானால் நிறத்தை வைத்து அரசியல் செய்யட்டும்” என்று ஒரு போடு போட்டார்.

Palani annamalai - Updatenews360

உண்மையிலேயே, நிறங்கள் குறித்த இந்த சர்ச்சையில் மூளையை கசக்கிக்கொண்டு ரொம்பவும் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பது காங்கிரஸ் மேலிடம்தான்.

காங்.,க்கு கல்தாவா..?

கருப்பு, சிவப்பு, நீலம் ஆகியவற்றைக் குறிக்கும்போது திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. ஆனால் காங்கிரஸ் இந்த நிறங்களுக்குள் அடங்கவில்லை. அதனால் திமுக கூட்டணி தங்களை கழற்றி விட்டுவிடுமோ? என்ற பயம் காங்கிரஸ் தலைமைக்கு தானாகவே வந்துள்ளது.

stalin-rahul- updatenews360

ஏற்கனவே ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி இருக்கிறது என்று திமுக தலைவர்கள் பேசி வருவதுடன் இதனை காங்கிரஸ் முடிச்சுப்போட்டும் பார்க்கிறது.

5 தொகுதிகள்தான்..

இதுகுறித்து டெல்லியில் அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “ஆ.ராசா கருப்பு, சிவப்பு, நீலம் என்று பேசியிருப்பதை காங்கிரஸ் சந்தேகக் கண்கொண்டுதான் பார்க்கிறது. ஏனென்றால்
2ஜி வழக்கு விவகாரத்தில் ராசாவுக்கு காங்கிரஸ் எந்த வகையிலும் உதவி செய்யவில்லை.

அதேநேரம் 2024 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரசுக்கு மிக குறைவாக தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதற்கான உத்தியாகவும் கூட ஆ. ராசாவின் பேச்சு இருக்கலாம். அதுமட்டுமல்ல. விரைவில் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸுக்கு 3 முதல் 5 சதவீத வார்டுகளை மட்டுமே, திமுக ஒதுக்கும் என்று தெரிகிறது. இதற்கு தமிழக காங்கிரஸ் ஒப்புக் கொண்டுவிட்டால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரசுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலே பெரிய விஷயம். அதற்குத்தான் திமுக அஸ்திவாரம் போடுகிறது என காங்கிரஸ் தலைமை கருதுகிறது.

சிறுவயதில் பிள்ளையார் சிலைக்கு ஆனைவெடி வைத்தது, திருநீறை வீசி எறிந்தது என்று ஆ ராசா இப்போது கூறுவதை வைத்து நடவடிக்கை எடுப்பது கடினமான காரியம். அதில் சட்டரீதியாக பல சிக்கல்களும் உண்டு. அது தெரிந்தே கூட ராசா அப்படி பேசி இருக்கவும் வாய்ப்பு உள்ளது”என்று அந்த அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

Views: - 511

0

0