அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் திடீர் திருப்பம்… பிறழ் சாட்சிகளாக மாறிய 6 பேர் : என்னதான் நடக்குது?!!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2023, 10:03 pm
Ponmdui -Updatenews360
Quick Share

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் திடீர் திருப்பம்… பிறழ் சாட்சிகளாக மாறிய 6 பேர் : என்னதான் நடக்குது?!!

கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியின்போது, உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கூடுதலாக கனிமவளத் துறைக்கும் அமைச்சராக இருந்து வந்தார். அந்தக் காலகட்டத்தில் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூந்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதில் அரசுக்கு 28 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான பொன். கவுதம சிகாமணி, திமுக நிா்வாகிகள் கோதகுமார், சதானந்தன், ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன், கோபிநாத் ஆகிய 7 பேர் மீது கடந்த 2012ஆம் ஆண்டில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

11 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வழக்கு பிறகு கிடப்பில் போடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் கடந்த மாதம் சோதனை நடத்தி அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி ஆகியோர் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து விசாரிக்கப்பட்டனர்ர்.

இதற்கிடையே செம்மண் குவாரி முறைகேடு வழக்கை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்தநிலையில், இந்த வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளார்.

தன்னிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாக ஓய்வு பெற்ற கனிம வளத்துறை இயக்குனரான சுந்தரம் பிறழ் சாட்சியம் அளித்துள்ளார். இந்த வழக்கில் ஓய்வு பெற்ற அதிகாரி சுந்தரம், ஓய்வுபெற்ற வட்டாட்சியர் குமாரபாலன் உள்பட இதுவரை 6 பேர் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளனர்.

தங்களிடம் முறைகேடு தொடர்பாக எந்தக் கோப்புகளும் இல்லை என்றும், உயரதிகாரிகள் கூறியதால் குற்றச்சாட்டு பதிவு செய்தோம் என்றும் அரசுத் தரப்பு சாட்சிகளாக இருப்பவர்கள் கூறியுள்ளனர்.

அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்ட முன்னாள், இந்நாள் அரசு அதிகாரிகள் 68 பேரில் இதுவரை 6 பேர் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளனர். இந்நிலையில், வழக்கு விசாரணையை வரும் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Views: - 250

0

0