ரூ.2500 கோடி ஆருத்ரா நிதி நிறுவன மோசடி.. பிரபல நடிகருக்கு தொடர்பு.. வெளிநாட்டுக்கு தப்பியோடியதாக தகவல்!!

Author: Babu Lakshmanan
1 April 2023, 9:49 am
Quick Share

சென்னை : ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் பிரபல நடிகருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை – அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், தங்களின் நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி கொடுப்பதாக கவர்ச்சிகரமான விளம்பரத்தை வெளியிட்டது. இதனை நம்பி லட்சக்கணக்கான மக்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

ஆனால், சொன்னபடி பணத்தை அந்நிறுவனம் திருப்பி தராததால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை முதலீட்டாளர்கள் உணர்ந்தனர். இதனைத் தொடர்ந்து, அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக, அந்நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், மேலாண் இயக்குநர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர்.

இந்நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குநரும், பாஜக நிர்வாகியுமான ஹரீஷ், மற்றொரு இயக்குநர் மாலதி ஆகியோரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, ஆருத்ரா நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரும், நடிகருமான ரூசோ என்பவரும் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், நடிகரும், பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கும் இந்த மோசடியில் தொடர்பிருப்பதாக வாக்குமூலம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில், ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காகவே ஆர்கே சுரேஷ் வெளிநாட்டிற்கு சென்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

Views: - 311

0

0