நடிகர் கமல் கரை ஏறுவாரா? : ம.நீ.ம. போடும் புது கணக்கு!!!

14 April 2021, 3:28 pm
Makkal neethi maiam - kamal - updatenews360
Quick Share

மதுரையில் கடந்த 2018 பிப்ரவரி 21-ம் தேதி நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கியபோது, “நாம் கனவு காண்கிறோம், ஒரு புதிய கட்சி, ஒரு புதிய பாதை, ஒரு புதிய கொள்கை. மக்கள் நீதி மய்யம், தமிழகம் விழித்தெழட்டும்” என்னும் கொள்கை முழக்கத்தை வெளியிட்டார்.

அடுத்த ஆண்டே அவர் நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும் குதித்தார். 38 தொகுதிகளில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் அந்தத் தேர்தலில் சுமார் 16 லட்சம் ஓட்டுகளை பெற்றது.

வடசென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளும், கோவையில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 45 ஆயிரம் ஓட்டுகளும் மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைத்தது. இந்த நான்குமே நகர்ப்புறம் சார்ந்த தொகுதிகள்.

Kamal- Updatenews360

நகரங்களில் அவரது கட்சிக்கு கிடைத்தது போல் ஓட்டுகள், கிராமப்புறங்களிலும் கிடைத்திருந்தால் அந்தத் தேர்தலில் 20 லட்சம் ஓட்டுகள் வரை அவருக்கு கிடைத்திருக்கலாம். இதற்கு முக்கிய காரணம் உண்டு. நகர்ப்புற மக்கள் அவரை ஒரு அரசியல்வாதியாக பார்க்கின்றனர். கிராமப்புற மக்களோ அவரை ரொம்ப தீவிரமானதொரு அரசியல்வாதியாக பார்க்காமல் நடிகராக மட்டுமே கண்டு ரசிக்கின்றனர் என்பதுதான், அது.

இந்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதற்கு, கமல்ஹாசன் எவ்வளவோ முயன்றார். ராகுல் காந்தியும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் மக்கள் நீதி மய்யத்துடன் சேர்ந்தால் அதிமுக – பாஜக கூட்டணி எளிதில் ஆட்சியைக் கைப்பற்றி விடும் என்று ராகுல்காந்தியிடம் கூறி தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அந்த முயற்சியை தடுத்து விட்டனர்.

காங்கிரஸ் தன்னுடன் சேர்ந்து இருந்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், விசிகவும் தனது அணியில் இணைந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பும் கமலிடம் இருந்தது. ஆனால் காங்கிரஸ் நழுவிக் கொண்டதால் அந்த முயற்சி கைகூடாமல் போய்விட்டது.

இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மக்கள் நீதி மையம் தனது
141 வேட்பாளர்களை தொகுதிகளில் களம் இறக்கியது. இவற்றில் பெரும்பாலானவை நகர்ப்புறம் சார்ந்த தொகுதிகள். கோவை தெற்கு தொகுதியை நடிகர் கமல் தேர்ந்தெடுத்ததற்கான காரணம், இப்போது புரிந்திருக்கும்.

Kamal - sarath kumar - updatenews360

மக்கள் நீதி மையம் இத்தனை தொகுதிகளில் போட்டியிட்டாலும் கூட கோவை தெற்கு, திருவெறும்பூர், மயிலாப்பூர் ஆகிய 3 தொகுதிகளில் கடும் போட்டியை ஏற்படுத்தியிருப்பது தெரிய வருகிறது. மற்ற தொகுதிகளை பொறுத்தவரை, மூன்றாவது, நான்காவது இடங்களுக்குத்தான் அக்கட்சி போட்டியிடுகிறது என்ற கருத்து நிலவுகிறது.

சரி, இந்தத் தேர்தலில் கமலின் எதிர்பார்ப்புதான் என்ன?…

இது பற்றி மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகள் சிலர் கூறும்போது, “கோவை தெற்கு தொகுதியில் கமல் வெற்றி பெற்று சட்டப் பேரவைக்குள் அடியெடுத்து வைப்பார் என்று உறுதியாக நம்புகிறோம். திருவெறும்பூர் தொகுதியில் எங்களுக்கு எதிர்பாராத விதமாக வெற்றி எங்களுக்கு கிடைக்கலாம். எங்களது எதிர்பார்ப்பு மக்கள் நீதி மய்ய கூட்டணி 8 சதவீத ஓட்டுகளை பெறவேண்டும் என்பதுதான்.

தலைவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருக்காவிட்டால், அவர் தமிழகத்தின் கிராமப் பகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு இருப்பார். அப்போது எங்களுக்கு 9 சதவீத வாக்குகள் வரை கிடைத்திருக்கும்.

கிராமப்பகுதிகளில் எங்களுக்கு வாக்குச்சாவடி முகவர்கள் இல்லாத நிலையிலும் கூட கணிசமான ஓட்டுகள் கிடைத்திருக்கிறது என்று கேள்விப்படுகிறோம். இது மிகுந்த நம்பிக்கை தருவதாக உள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வலுவான கட்டமைப்பை உருவாக்குவோம்.

இந்த தேர்தலில் எங்களது கூட்டணிக்கு நாங்கள் எதிர்பார்க்கும் ஓட்டுகள் கிடைத்துவிட்டால் அடுத்து நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய அளவில் கூட்டணி அமைப்பதற்கு அடித்தளமாக அது அமையும்.

எனினும் எங்களது நோக்கம் ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற முழக்கம்தான். அதனால் நாடாளுமன்றத் தேர்தலைவிட சட்டப்பேரவைத் தேர்தலிலேயே அதிக அக்கறை காட்டுவோம். நாம் தமிழர் கட்சியுடன் நீங்கள் இணைந்து செயல்படலாமே என்று பலரும் கேட்கிறார்கள். அந்தக் கட்சியும் இந்த தேர்தலில் கணிசமான ஓட்டுகளை பெற்று இருப்பதாக தகவல் எங்களுக்கு கிடைத்திருக்கிறது.

இந்த தேர்தலில் பணப் பட்டுவாடா செய்யாமலேயே ஓட்டுகள் வாங்கிய கட்சிகள் என்று எங்களை பெருமையாகக் கூறிக்கொள்ள முடியும். மூன்றாவது அணிகளின் வாக்குகள் 18 சதவீதத்திற்கும் மேலாக இருந்தால் நிச்சயம் அடுத்த சட்டப் பேரவை தேர்தலில் நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைவதற்கு வாய்ப்பு உள்ளது.

தற்போது எங்களை புறக்கணித்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட், விசிக கட்சிகள் அப்போது எங்களுடன் கைகோர்ப்பார்கள். அதன் மூலம் 2026-ல் நிச்சயம் ஆட்சி மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்த முடியும்” என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

கோவை தெற்கு என்னும் பெருங்கடலில் நீந்திக் கொண்டிருக்கும் நடிகர் கமல் கரை ஏறுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அவர் வெற்றி பெற்றால் தமிழக அரசியல் களம் இன்னும் சூடு பிடிக்கும் என்பது நிச்சயம்!

Views: - 12

0

0

1 thought on “நடிகர் கமல் கரை ஏறுவாரா? : ம.நீ.ம. போடும் புது கணக்கு!!!

Comments are closed.