இருக்கு… ஆனா இல்ல… அரசியலுக்கு ரஜினி வைத்த முற்றுப்புள்ளி…! கொந்தளிக்கும் மன்ற நிர்வாகிகள்!

13 July 2021, 1:46 pm
rajini - updatenews360
Quick Share

இந்த நாள் ரஜினி ரசிகர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நாள். கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வந்த ஒரு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நாளும் ஆகும்.

எதற்காக திடீர் சந்திப்பு

வழக்கமாக டிசம்பர் 12-ம் தேதி அவருடைய பிறந்த நாள் என்பதால் அன்றுதான் அவருடைய ரசிகர்களிடம் ஒரு பரபரப்பு இருக்கும்.

கடந்த சனிக்கிழமை திடீரென்று நடிகர் ரஜினி மக்கள் மன்ற தரப்பில் இருந்து ஊடகங்களுக்கு ஒரு தகவல் தரப்பட்டது. மன்றத்தின் அத்தனை மாவட்ட செயலாளர்களையும் அவர் 12-ந் தேதி சந்தித்து ஆலோசனை நடத்தப் போகிறார், என்பதுதான் அது.

இது தேர்தல் நேரமும் அல்ல, அவருடைய அண்ணாத்த படமும் தீபாவளிக்கு தானே வெளியாகப் போகிறது?… ஒருவேளை, தனது 71-வது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கு இப்போதே திட்டமிடுகிறாரோ?… என்று பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், மன்ற நிர்வாகிகளை சந்திக்க எதற்காக நடிகர் ரஜினி அழைப்பு விடுக்கிறார்? என்பது புரியாத புதிராக இருந்தது.

அதைவிட இன்னொரு சஸ்பென்சை மன்றத்தின் நிர்வாகிகள் சந்திப்பிற்கு சிறிதுநேரம் முன்பாக ரஜினி செய்தியாளர்களிடம் வெளியிட்டு அனைவரின் பல்சையும் ஏகத்துக்கும் எகிற வைத்தார்.

கிளைமேக்சிலும் சஸ்பென்ஸ்

ராகவேந்திரா திருமண மண்டபம் செல்லும் முன்பாக, தனது போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி தனது பெயரிலான மக்கள் மன்றத்தை தொடரலாமா? இனிமேல் அதன் பணிகள் என்ன? எதிர்காலத்தில் அரசியலுக்கு நான் வரப்போகிறேனா? இல்லையா?… என்பது பற்றி ஆலோசனை நடத்த உள்ளேன். என்று முடிவில் ஒரு ‘பஞ்ச்’ வைத்தார்.

இதனால் உள்ளாட்சித் தேர்தலில் தனது மக்கள் மன்றதை ரஜினி களம் இறக்கப் போகிறார்! என்ற தகவலும் சில செய்தி சேனல்களில் பிரேக்கிங் நியூஸ் ஆக ஓடியது.

ரஜினி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

அவர்களிடம் சிறிதுநேரம் ஆலோசனை நடத்தியபின், ரஜினிகாந்த் ஒரு பக்க அளவிற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவருடைய அரசியல் பிரவேசத்திற்கு பெரிய முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருந்தது.

காணாமல் போன மக்கள் மன்றம்

அந்த அறிக்கையில், “நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது. அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை.

நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்.

கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால், ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்துவிட்டு சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப் பணிக்காக முன்பு போல் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாகச் செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறப்பட்டு இருந்தது.

ரஜினி அரசியலுக்கு வருவதும் வராததும், மக்கள் மன்றத்தை கலைப்பதும் அவருடைய விருப்பம். நிச்சயம் தமிழக அரசியலில் குதிப்பேன் என்று 3 வருடங்களுக்கு மேலாக கூறிவந்த அவர், கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி தனது உடல் நலத்தை காரணம் காட்டி அரசியல் கட்சி தொடங்க போவதில்லை, தேர்தலிலும் போட்டியிட போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தும் விட்டார்.

அதன்பிறகு, தான் நடித்து பாதியில் நிறுத்தப்பட்டிருந்த அண்ணாத்த படத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார். மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று வந்த பின்பு அவர் அரசியலில் ஈடுபடுவார் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்ததில்லை.

இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான், ராகவேந்திரா மண்டபத்திற்கு புறப்படும் முன்பாக செய்தியாளர்களை போயஸ் தோட்ட இல்லத்திற்கு வரவழைத்து பேட்டி கொடுத்த நடிகர் ரஜினி, தனது மன்றத்தின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி முடித்த பின்பு ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். அவர் விரிவாக பேட்டி கொடுப்பார் என்று எதிர்பார்த்திருந்த செய்தியாளர்களுக்கு இதனால் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.

மக்கள் மன்றத்தை கலைத்து விட்டேன் என்ற அறிவிப்பை ஊடக செய்தியாளர்களிடம் கூறினால், அவர்கள் தொடர்ந்து ஏதாவது கேள்விகளை கேட்டுக்கொண்டே இருப்பார்கள் என்ற எண்ணத்தில் ரஜினி அவர்களது சந்திப்பை தவிர்த்திருக்க வாய்ப்பிருக்கிறது.

அப்படியென்றால் ஆலோசனைக் கூட்டம் நடப்பதற்கு முன்பாக மட்டும் செய்தியாளர்களிடம் அவர் ஏன் பரபரப்பை ஏற்படுத்தினார்? என்ற கேள்வியும் எழுகிறது.

கடனில் தள்ளிய ரஜினி

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு புறம் ரஜினி மக்கள் மன்ற இயக்கத்தின் மாவட்டச் செயலாளர்களில் பலர் நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டிருக்கிறார்கள்.

இதுபற்றி அம்மன்ற நிர்வாகிகள் சிலர் கூறும்போது, “தனது மக்கள் மன்றம் குறித்து முடிவு எடுக்க கூடிய முழு உரிமை ரஜினிக்கு இருக்கிறது. அதில் யாரும் தலையிட முடியாது. ஆனால் 2018-ல் மன்றத்தை அரசியல் தொடர்புடைய இயக்கமாக மாற்றியபோது, அவர் தனிக்கட்சி தொடங்குவார் என்ற நம்பிக்கையில் மாநிலம் முழுவதும் மேலும் 23 ஆயிரம் ரசிகர் மன்றங்களை உருவாக்கினோம். கடந்த ஆண்டு நவம்பர் மாத முதல் வாரத்தில், நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று திட்டவட்டமாக அவர் அறிவித்ததால் நகரங்களிலும், கிராமங்களிலும் வார்டுகள் தோறும் பூத் கமிட்டியும் அமைத்தோம்.

வாக்காளர்களுக்காக லட்சக்கணக்கில் பூத் சிலிப்புகளையும் அச்சிடோம்.
மன்றத்தின் கொடிகளையும், போஸ்டர்களையும் ஆயிரக்கணக்கில் தயாரிக்க ஆர்டர் கொடுத்தோம். ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் இதற்காக தனிப்பட்ட முறையில் செலவிட்ட தொகை குறைந்த பட்சம் 10 லட்ச ரூபாய் வரை இருக்கும். ரஜினி அரசியலுக்கு வராமல் போனதால் செலவிட்ட இந்த தொகையால், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் நொடித்துப் போனவர்களும் பலர் உள்ளனர். இவர்கள் கடனில் மூழ்கியதற்கு யார் காரணம்? இதுபற்றி ஏற்கனவே ரஜினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், இதுவரை யாருக்கும் பணம் கிடைத்தாக தெரியவில்லை.

எனது அரசியல் பிரவேசத்திற்காக நீங்கள் செய்த செலவை விரைவில் கொடுத்துவிடுவேன், யாரும் கவலைப்பட வேண்டாம் என்று ரஜினி ஊடகங்கள் வாயிலாக வெளிப்படையாக அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லையென்றால் பல நிர்வாகிகள் நடுத்தெருவுக்கு வருவார்கள் என்பது நிச்சயம்.

இன்னொரு விஷயம் மக்கள் மன்றத்தை கலைத்த ரஜினி தனது நற்பணி மன்றத்தையும் கூண்டோடு கலைத்துவிட்டால் அவரால் எந்தக் காலத்திலும் ரசிகர்களுக்கு சிக்கல் ஏற்படாது. இல்லையென்றால் தனது படங்களை பார்க்கவேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே அவர் நற்பணி மன்றங்களை வைத்திருக்கிறார், என்றுதான் தமிழக மக்கள் நினைப்பார்கள்.

ரஜினிக்கு, ஒருபோதும் பப்ளிசிட்டி தேவையில்லைதான். ஆனால் இன்று செய்தியாளர்களிடம் பரபரப்பை ஏற்படுத்திவிட்டு பின்னர் அவர் கொடுத்த மிகப்பெரிய அல்வாதான் வேதனைக்குரிய விஷயம். இந்த சொதப்பல் முடிவை எடுப்பதற்காக 2 நாட்களுக்கு முன்பே ஊடகங்களில் ‘பில்டப்’ கொடுத்து இருக்கவேண்டிய அவசியமும் இல்லை”என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகியின் ஆதங்கமும் நியாயமானதுதான்!

Views: - 177

0

0