சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்…ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை: தள்ளிப்போகுமா அரசியல் கட்சி அறிவிப்பு?..

Author: Aarthi
28 December 2020, 9:09 am
rajini returns - updatenews360
Quick Share

சென்னை: ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, 8 மாதங்களுக்குப் பிறகு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில்கடந்த 14ம் தேதி தொடங்கியது. இதில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். கடந்த 22ம் தேதி ரஜினி உட்பட படக்குழுவில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், படப்பிடிப்பில் உள்ள 6 பேருக்கு தொற்றுஉறுதி செய்யப்பட்டது. ஆனால், ரஜினிக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பதுஉறுதியானது. இதனால், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டனர். இதனிடையே, கடந்த 25ம் தேதி காலை ரஜினிகாந்துக்கு திடீரென ரத்த அழுத்தம் குறையத் தொடங்கியது.

இதையடுத்து அவரை, மகள் ஐஸ்வர்யா மற்றும் சிலர் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தனிமருத்துவக் குழு அமைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்த அழுத்தத்தில் மாற்றங்கள் ஏற்பட்டதே உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், ரஜினி நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதால் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். ஆனால், அவருக்கு ஒரு வாரம் வரை ஓய்வு தேவை. 14 நாட்கள் வரை, அதாவது வரும் 5ம் தேதி வரை தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளுதல் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யாவுடன் சன் பிக்சர்ஸ் சார்பில் ஏற்பாடு செய்திருந்த விமானத்தில் சென்னை திரும்பினார். டிச.31ம் தேதி தனது கட்சியின் பெயர், கொள்கைகள் போன்றவற்றை அறிவிக்க ரஜினி முடிவு செய்திருந்தார்.

தற்போது அவருக்கு ஒரு வாரம் வரை கட்டாய ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாலும் திட்டமிட்டபடி 31ம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு தள்ளிபோகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேநேரத்தில், கட்சி அறிவிப்பு குறித்த தேதியில் மாற்றம் இருக்கலாம் எனவும், ரஜினி முற்றிலும் குணமான பின்னர், ஜனவரி 17ம்தேதி எம்ஜிஆரின் பிறந்த நாளன்று தனது கட்சி, கொடி மற்றும் கொள்கைகள் குறித்து அவர் அறிவிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 63

0

0